தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டைக் கொண்டாடும் விதமாக, மாநிலம் முழுவதும் பல்வேறு வகைகளில் திமுக-வினராலும், தமிழ்நாடு அரசாலும் நூற்றாண்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், திமுகஇளைஞர் அணி சார்பாக, கலைஞர் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில், ‘என் உயிரினும் மேலான’ என்ற தலைப்பில் மாநில அளவிலான பேச்சுப் போட்டி நடத்தப்பட உள்ளது.
சிறந்த பேச்சுத்திறன் உள்ள புதிய மேடைப் பேச்சாளர்களை அடையாளம் காணும் இந்தப் போட்டியில், 18 முதல் 35 வயது வரையுள்ள ஆண்கள், பெண்கள், திருநர்கள் என அனைவரும் கலந்துகொள்ளலாம்.
பேச்சுப்போட்டி தலைப்புகள்
என்றென்றும் பெரியார். ஏன்?
அண்ணா கண்ட மாநில சுயாட்சி
கலைஞரின் தொலைநோக்குப் பார்வை
மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர்
கலைஞர் – நவீன தமிழ்நாட்டின் சிற்பி
இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்
சமூக நீதிக் காவலர் கலைஞர்
தமிழ்நாட்டு குடும்பங்களில் தி.மு.க.
பேசி வென்ற இயக்கம்
திராவிட மாடல் நாயகர் முதல்வர் மு.க. ஸ்டாலின்
பங்கேற்பாளர்கள் தங்களுக்கு விருப்பமான ஏதேனும் ஒரு தலைப்பைத் தேர்வு செய்து, அதையொட்டிப் பேச வேண்டும்.
கலந்துகொள்வது எப்படி?
இந்தப் போட்டியில் பங்குகொள்ள விரும்புபவர்கள், www.kalaignar100pechu.org என்ற இணையதளத்தில் உள்ள ‘விண்ணப்பம்’ பகுதியைப் பூர்த்தி செய்து, 2024 ஜூலை 15-ஆம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும். அல்லது பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ‘அன்பகம்’, 614, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-600018 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் 2024 ஜூலை 15-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
தேர்வு விவரம்
பதிவு செய்தவர்களுக்கு அவர்கள் மாவட்டங்களில் நடைபெறும் முதற்கட்டத் தேர்வில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்படும். முதற்கட்டத் தேர்வில் சிறப்பாகப் பேசி, நடுவர்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் அடுத்த கட்டமாக மண்டல அளவிலான போட்டியில் கலந்துகொள்ள அழைக்கப்படுவார்கள். மண்டல அளவில் சிறப்பாகப் பேசித் தேர்வு செய்யப்படுபவர்கள், இறுதிக்கட்ட போட்டியில் கலந்துகொள்ள அழைக்கப்படுவார்கள். இறுதிப் போட்டியில் சிறப்பாகப் பேசிய மூவர், பரிசுகளுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.
பரிசுத் தொகை
வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். மேலும் தலைமைக் கழகம் அறிவுறுத்தியபடி இந்தப் போட்டியில் கலந்துகொண்டவர்களில் சிறந்த நூறு இளம் பேச்சாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
இந்தப் போட்டிகள் அனைத்தும், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும். போட்டிக்கான தலைப்புகள், விதிமுறைகள் ஆகியவற்றை www.kalaignar100pechu.org என்ற இணையதளத்தில் காணலாம் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.