முதல்வர் ஸ்டாலின் ஆட்சியின் திட்டங்கள்… பயன்பெற்றவர்கள் எவ்வளவு பேர்?
தமிழ்நாடு சட்டசபையில் இன்று, ஆளுநர் உரை மீதான விவாதத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தான் ஆட்சிக்கு வந்த பின்னர் அமல்படுத்திய திட்டங்களினால் பயனடைந்தவர்கள் எத்தனை லட்சம் பேர், தீர்வு காணப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை விவரித்தார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், “ஒவ்வொரு முறை நான் கையெழுத்து போடும் போதும், இதனால் பயன்பெறப்போகும் லட்சக்கணக்கான மக்களின் முகங்களைப் பார்க்கிறேன். சில திட்டங்களின் பெயரைச் சொல்லி, இதன் மூலமாக எத்தனை லட்சம் பேர் பயனடைந்திருக்கிறார்கள் என்று எனது செயலாளர்களிடம் கேட்டேன். அவர்களின் பதில் எனக்கு மகிழ்ச்சி அளித்தது.
மாதந்தோறும் ஆயிரம் ரூபாயை, “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” யாக ஒரு கோடியே 15 லட்சத்து 16 ஆயிரத்து 292 மகளிர் பெறுகிறார்கள். “விடியல்” பேருந்து பயணத் திட்டம் மூலமாக 445 கோடி முறை பயணித்து பெண்கள் பயனடைந்து இருக்கிறார்கள். “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தால் பயனடைந்தவர்கள் ஒரு கோடி பேர். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் 16 லட்சம் பிள்ளைகள் வயிறார உணவு உண்கிறார்கள். நகைக்கடன் தள்ளுபடி பெற்றவர்கள் 13 லட்சத்து 12,000 பேர். கூட்டுறவுக் கடன் தள்ளுபடி பெற்றவர்கள் 1 லட்சம் பேர்.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் “புதுமைப் பெண்” திட்டப்படி 2 ஆண்டுகளுக்கு, 4 லட்சத்து 81 ஆயிரத்து 75 மாணவிகள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெறுகிறார்கள். ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 2 ஆண்டுகளில், 28 லட்சம் இளைஞர்கள் பயனடைந்துள்ளார்கள். ‘இல்லம் தேடி கல்வித் திட்டத்தில்’ 24 லட்சத்து 86,000 பள்ளிப் பிள்ளைகள் பயனடைந்திருக்கிறார்கள். 62 லட்சத்து 40,000 குடும்பங்கள் புதிய குடிநீர் இணைப்பை பெற்றுள்ளது. 2 லட்சம் உழவர்கள் புதிய மின் இணைப்பு பெற்றுள்ளார்கள். உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை 30 லட்சம் முதியோர் மாதந்தோறும் பெறுகிறார்கள். உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை 5 லட்சம் மாற்றுத்திறனாளிகள் மாதந்தோறும் பெறுகிறார்கள். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தால் பயனடைந்தவர்கள் 42 லட்சத்து 33,000 பேர்.
முதலமைச்சரின் ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீடு தொகை உயர்ந்த பிறகு பயன்பெற்றவர்கள் 20 லட்சத்து 55,000 பேர். மீன்பிடி கால உதவித்தொகை பெற்றவர்கள் 4 லட்சத்து 86,000 பேர். மீன்பிடி இல்லாதகால உதவித்தொகை பெற்றவர்கள் 5 லட்சத்து 15,000 பேர். ‘நம்மைக் காக்கும் 48’ திட்டத்தால் பயனடைந்தவர்கள் 2 லட்சம் பேர். ‘முதல்வரின் முகவரி திட்ட’த்தினால் பயனடைந்தவர்கள் 19 லட்சத்து 69,000 பேர்.
‘மக்களுடன் முதல்வர் திட்ட’த்தின் மூலமாக, 3 லட்சத்து 40,000 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டு உள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட 45 லட்சம் குடும்பங்களுக்கு 6,000 மற்றும் 1,000 என நிவாரணத் தொகை வழங்கி இருக்கிறோம்.
அதுமட்டுமல்ல, இந்த 33 மாதங்களில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று 6 ஆயிரத்து 569 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவிகளை லட்சக்கணக்கான மக்களுக்கு வழங்கியுள்ளேன். இப்படி, தமிழ்நாட்டின் ஒவ்வொருவர் இல்லந்தோறும் உதவி செய்து வரும் ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி! ஒவ்வொரு தனிமனிதரின் கோரிக்கையையும் கேட்டு நிறைவேற்றிக் கொடுக்கும் ஆட்சி இது. இவை எல்லாம் வெறும் எண்ணிக்கை அல்ல; இவை எல்லாம் திராவிட மாடல் ஆட்சியின் எண்ணங்கள்! தமிழ்நாட்டில் சமூகச் சீர்திருத்த ஆட்சி நடைபெற்று வருவதன் அடையாளங்கள்!
மகளிருக்கு உரிமைத் தொகை, விடியல் பேருந்து திட்டத்தின் மூலமாக பெண்ணினத்தின் பொருளாதார-சமூக நிலை உயர்கிறது. தன்னம்பிக்கையையும், தற்சார்பு நிலையையும் அவர்கள் அடைகிறார்கள். பெண்களின் சமூகப் பங்களிப்பு 40 விழுக்காட்டில் இருந்து 65 விழுக்காடாக உயர்ந்துவிட்டது. உயர்கல்வி பெற வரும் அரசுப் பள்ளி மாணவியர்க்கு உதவித்தொகை தருவதன் மூலமாக 34 விழுக்காடு மாணவிகள் அதிகமாக கல்லூரிகளை நோக்கி வந்துள்ளார்கள்.
நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக, உயர் நிறுவன வேலைகளில் சேர்வதற்கு இளைஞர்கள் தகுதி பெற்று விட்டார்கள். பன்னாட்டு செஸ் ஒலிம்பியாட், கேலோ இந்தியா போட்டிகளை நடத்தியதன் மூலமாக விளையாட்டு ஆர்வம் அதிகமாகி விட்டது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆக்கப்பட்டு வருவதன் மூலமாக கர்ப்பக்கிரகத்தில் சமத்துவம் நுழையத் தொடங்கி விட்டது. பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, சமூக முன்னேற்றத்தையும் சேர்த்து கொடுத்து வருகிறோம்.
சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி ஆகிய கருத்தியல்களின் அடித்தளத்தில் அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்துச் சமூக வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி என்பதையும் உள்ளடக்கி ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற ‘திராவிட மாடல்’ கொள்கையை உருவாக்கி, அதன் தடத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியானது செயல்பட்டு வருகிறது” என மேலும் கூறினார்.