திமுக ஆட்சியும் சென்னையின் முன்னேற்றமும்… மேம்பாலங்களைத் தொடர்ந்து உயர்மட்டச் சாலை!
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக ஆட்சி என்றாலே புதிய சாலைகள், மேம்பாலங்கள் என மாநிலத்தின் உட்கட்டமைப்புகள் தொலைநோக்கு பார்வையுடன் துரித கதியில் உருவாக்கப்பட்டு மாநிலம் வளர்ச்சிப் பாதையில் வேக நடை போடும். அதிலும், தலைநகர் சென்னை என்றால் கேட்கவே வேண்டாம்… இன்றைய சென்னை மாநகரின் பிரம்மாண்ட வளர்ச்சியை முன்கூட்டியே கணித்து 1996-2001 திமுக ஆட்சியின் போதே நகரில் 10 பெரிய மேம்பாலங்கள் கட்டப்பட்டன. அதற்கு பின்னர் வந்த 2006 – 2011 வரையிலான திமுக ஆட்சியிலும் சென்னையில் மேலும் 5 மேம்பாலங்கள் கட்டப்பட்டன.
இப்படி எதிர்கால தேவைகளை முன்கூட்டியே கணித்து கட்டப்பட்ட மேம்பாலங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் உருவாக்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டங்களால்தான், சென்னை மாநகரம் இன்று மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் தப்பி உள்ளது. இந்த நிலையில், அடுத்த தொலைநோக்கு திட்டமாக, சென்னை அண்ணா சாலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.621 கோடி மதிப்பில் நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை கட்டுமானப் பணியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
அண்ணாசாலையின் போக்குவரத்து நெரிசல்
400 ஆண்டுகள் பழமைவாய்ந்த சென்னை, அண்ணா சாலை சென்னை மாநகரின் மிகவும் முக்கியமான சாலை என்பதால் போக்குவரத்து நெரிசல் மிகுதியாக காணப்படுகிறது. அண்ணாசாலையில் பல்வேறு அரசுத் துறைகளின் தலைமையங்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் வர்த்தக மையங்கள், வணிக வளாகங்கள் வங்கித் தலைமையகங்கள், மருத்துவமனைகள், நட்சத்திர விடுதிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இயங்கி வருவதால் இச்சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
குறிப்பாக, தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உள்ள 3.5 கி.மீ தூரத்தை கடக்க சராசரியாக 25 முதல் 30 நிமிடங்கள் ஆகின்றது. இப்பகுதிக்குட்பட்ட அனைத்து சாலை சந்திப்புகளிலும் வாகனங்கள் அணிவகுத்து அதிகநேரம் காத்திருக்கும் சூழல் உள்ளது. இதிலும் குறிப்பாக நந்தனம் சந்திப்பு, சிஐடி நகர் சந்திப்பு ஆகியவற்றில் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்கள் சுமார் 2 கி.மீ நீளத்திற்கு காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
தீர்வு தரப்போகும் உயர்மட்ட சாலை
தேனாம்பேட்டையிலிருந்து – சைதாப்பேட்டை வரை உள்ள முக்கிய சாலை சந்திப்புகளான ஆழ்வார்பேட்டை – தேனாம்பேட்டை பகுதிகளை பாண்டிபஜார் அண்ணாசாலையுடன் இணைக்கும் எல்டாம்ஸ் சாலை சந்திப்பு, தி.நகர் பகுதிகளை இணைக்கும் தியாகராயா சாலை சந்திப்பு, டி.டி.கே சாலையை அண்ணாசாலையுடன் இணைக்கும் எஸ்ஐஇடி கல்லூரி சாலை சந்திப்பு, செனடாஃப் சாலை சந்திப்பு, சென்னை மாநகரின் முக்கிய சந்திப்புகளில் ஒன்றான நந்தனம் சந்திப்பு, தி.நகர் பேருந்து நிலையம், உஸ்மான் சாலையை இணைக்கும் சிஐடி நகர் மூன்றாவது மற்றும் முதல் பிரதான சாலை சந்திப்பு, சைதாப்பேட்டையில் உள்ள தாடண்டர் நகர் – ஜோன்ஸ் சாலை சந்திப்பு ஆகிய 7 முக்கிய சாலை சந்திப்புகளை கடக்கும் வகையில் சைதாப்பேட்டை பேருந்து நிலையம் வரை 3.20 கி.மீ நீளத்திற்கு 14 மீ அகலம் கொண்ட நான்கு வழித்தட உயர்மட்ட சாலை அமைக்கப்பட உள்ளது.
மெட்ரோ ரயில் சுரங்கங்கள் அமைந்துள்ள நேர்பாட்டில் கட்டப்படும் முதல் உயர்மட்ட சாலை இதுவாகும். இந்த உயர்மட்ட சாலை கட்டிமுடிக்கப்பட்டு, பயன்பாட்டு வந்துவிட்டால், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான 3.5 கி.மீ தூரத்தை 3 முதல் 5 நிமிடத்திலேயே கடந்து செல்லலாம். மேலும், சென்னை மாநகரின் மிக நீண்ட பாலமாகவும் இப்பாலம் அமையும்.
1996-2001 திமுக ஆட்சியில் சென்னையில் 10 பெரிய மேம்பாலங்கள் கட்டப்பட்டதற்கு, அப்போது சென்னை மேயராக இருந்த இன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்தான் முக்கிய காரணமாக இருந்தார். தற்போது அவர் முதலமைச்சராக உள்ள நிலையில், கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக முந்தைய திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இதனையடுத்து, இதோ இப்போது சென்னை அண்ணாசாலை வாகன நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், உயர்மட்டச் சாலை அமைக்கப்பட உள்ளது.
ஒரு மாநிலத்தின் தலைநகரத்தின் வளர்ச்சி எப்படி உள்ளதோ, அதுதான் அந்த மாநிலத்தின் இதர பகுதிகளின் முன்னேற்றத்தையும் வெளிப்படுத்தும். அந்த வகையில், தமிழகத்தில் திமுக ஆட்சி அமையும்போதெல்லாம் சென்னை மாநகரத்தின் உட்கட்டமைப்பு தொடர்ந்து முன்னேற்றமடைந்து கொண்டே செல்கிறது என்பதை உறுதியாக சொல்லலாம்!