கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி, சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதே ஆண்டு, டிசம்பர் 12-ம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதலளித்த நிலையில் சட்டமானது.
இந்த சட்டம் எதற்காக கொண்டுவரப்பட்டது என்றால், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக வசிக்கும் இந்து, சீக்கியம், பவுத்தம், சமணம், பார்சி, கிறிஸ்தவம் ஆகிய 6 மதங்களைச் சேர்ந்தவர்கள், மத ரீதியிலான துன்புறுத்தல் காரணமாக, அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் அகதியாக தஞ்சம் புகுந்தால், அவர்களுக்கு குறிப்பிட்ட சில ஆண்டுகள் கழித்து, குடியுரிமை வழங்க ஒன்றிய பாஜக அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது.
2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் இந்த சட்டம் அமலுக்கு வருவதாக இருந்தது. ஆனால், இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் எழுப்பப்படும் கேள்விகள் மாற்றப்படும் என்றும், என்ஆர்சி எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பலரது குடியுரிமை பறிக்கப்படும் அபாயம் உள்ளது என்றும் கூறி, இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. நாடு முழுவதும் பரவலாக போராட்டங்கள் நடைபெற்றன. குறிப்பாக இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கடும் போராட்டங்களை முன்னெடுத்தனர். மேலும் மாணவர்கள், பல்வேறு சமூக அமைப்புகள், அரசியல் கட்சியினரும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இத்தகைய சூழலில் கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடே முடங்கியதால், இந்த சட்டத்தை அமல்படுத்துவது தள்ளிப்போனது. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில், இந்த விவகாரத்தை பாஜக மீண்டும் கையிலெடுத்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கொல்கத்தாவில் பேட்டி அளித்த மத்திய துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை இணை அமைச்சர் சாந்தனு தாக்குர், “ குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும். இந்த சட்டம் இன்னும் ஏழு நாட்களுக்குள் செயல்படுத்தப்படும். இது நான் அளிக்கும் உத்தரவாதம்” என்று கூறியிருந்தார்.
அவரது இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இது தொடர்பாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் ஆதாயங்களைப் பெறுவதற்காக பாஜக மீண்டும் சிஏஏ விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. ஆனால், நான் உயிருடன் இருக்கும் வரை மேற்கு வங்கத்தில் அதைச் செயல்படுத்த அனுமதிக்க மாட்டேன் ” எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டம் கால்வைக்க முடியாது எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “இலங்கைத் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிரான குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆனதற்கு முழுமுதற்காரணமே நாடாளுமன்றத்தில் அதிமுக ஆதரித்து வாக்களித்ததுதான்.
அப்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் தோழமை இயக்கங்களுடன் இணைந்து மிகப் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தியதுடன், இரண்டு கோடிப் பேரிடம் கையெழுத்து பெற்று அதனைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது திமுக. 2021-ல் ஆட்சிக்கு வந்த உடனேயே குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானமே நிறைவேற்றினோம்.
தமிழகத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் திமுக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மதநல்லிணக்கத்துக்கு எதிரான பாஜக அரசின் நாசகாரச் செயல்களையும், அதற்குத் துணைபோகும் அதிமுகவின் நயவஞ்சக நாடகங்களையும் நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உறுதியாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டினுள் சிஏஏ-வை கால்வைக்க விடமாட்டோம்” என்று பதிவிட்டுள்ளார்.