Amazing Tamilnadu – Tamil News Updates

வேளாண் பட்ஜெட்: சிறுதானியங்களின் சாகுபடி, உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ.65.30 கோடி!

மிழ்நாடு சட்டசபையில் இன்று 2024-25 ஆம் நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், சிறுதானியங்களின் சாகுபடி, உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ.65.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

இது தொடர்பாக பேசிய அவர், ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்களின் சாகுபடிப் பரப்பு மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ.65.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், விதைக் கிராமத் திட்டத்தின் கீழ் 15,810 மெட்ரிக் டன் தரமான நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்து விதைகள் 50 முதல் 60 சதவீத மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்திட ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், பிற மாநில உயர் விளைச்சல் தரக்கூடிய நெல், சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய்வித்துகளின் சான்று பெற்ற விதைகள் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் வெளியிட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் வருமாறு:

துவரை சாகுபடிப் பரப்பு குறைந்துவரும் மாவட்டங்களில், துவரை சாகுபடிப் பரப்பினை அதிகரிக்க 50,000 ஏக்கர் பரப்பில், துவரை சாகுபடிப் பரப்பு விரிவாக்க இயக்கம் செயல்படுத்த ரூ.17.50 கோடி நிதி ஒதுக்கீடு. உணவு எண்ணெய் உற்பத்தியை உயர்த்தும் விதமாக எண்ணெய்வித்துப் பயிர்களின் சாகுபடியை 2.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பரவலாக்கம் செய்திட, ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு. எள் சாகுபடிப் பரப்பு, மகசூலை அதிகரித்திட, எள் சாகுபடிப் பரப்பு விரிவாக்க திட்டம் 25,000 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்திட ரூ. 3 கோடி நிதி ஒதுக்கீடு.

சூரியகாந்தி பயிரின் சாகுபடிப் பரப்பினை அதிகரித்திட, சூரியகாந்தி சாகுபடிப் பரப்பு விரிவாக்கத் திட்டம் 12,500 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்திட ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு.1,500 ஏக்கர் பரப்பளவில், வீரிய ஒட்டு இரக ஆமணக்கு சாகுபடியை ஊக்குவித்திட, ஆமணக்கு சாகுபடிப் பரப்பு விரிவாக்கத் திட்டத்திற்கு ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு.

50,000 விவசாயிகள் பயன்பெறும் வகையில், நிலக்கடலை போன்ற வேளாண் பயிர்களில், 50,000 ஏக்கர் பரப்பிற்கு ஜிப்சம் வழங்க ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு. பட்டதாரி இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்கிட, ஒருவருக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் மானியம் வீதம் 100 இளைஞர்களுக்கு மானியம் வழங்கிட ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பது உள்ளிட்ட மேலும் பல்வேறு அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.

Exit mobile version