தமிழ்நாடு சட்டசபையில் இன்று 2024-25 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கலைஞரின் அனைத்துக்கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், “கலைஞரின் அனைத்துக்கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமானது ஒவ்வொரு சிற்றூரும் தன்னிறைவு பெற்றிடும் வகையில் 2,482 கிராம ஊராட்சிகளில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
ஒவ்வொரு சிற்றூரும் தன்னிறைவு பெற்று முன்மாதிரியாகத் திகழவேண்டும் என்ற நோக்கில், முதன்மைத் தொழிலான உழவுத் தொழிலை மேம்படுத்தி, நிகர சாகுபடிப் பரப்பை அதிகரித்திட தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றி விவசாயிகளுக்குத் தந்திட ‘கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்’ எனும் திட்டம் 2021- 2022 ஆம் ஆண்டிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு 12,525 கிராம ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
வேளாண் விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு
நமது மண்ணின் அடையாளங்களான மாநிலத்தின் தனித்துவமான சத்தியமங்கலம் செவ்வாழை, கொல்லிமலை மிளகு, மீனம்பூர் சீரக சம்பா, ஐயம்பாளையம் நெட்டைத் தென்னை, உரிகம்புளி, புவனகிரி மிதி பாகற்காய், செஞ்சோளம், திருநெல்வேலி அவுரி, ஓடைப்பட்டி விதையில்லா திராட்சை, செங்காந்தள் விதை ஆகிய 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற ரூ. 30 லட்சம் ஒதுக்கீடு.
மேலும், “சிறுதானியங்கள், பயிறுவகைகள், எண்ணெய் வித்துக்கள் பயிரிட விதைகள் உள்ளிட்ட இடுபொருட்களுக்கு ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு.
விவசாயிகள் கூடுதல் லாபம் பெற்றிட 725 உயிர்ம வேளாண் தொகுப்புகளுக்கு ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு.
ரூ.32.90 கோடி மானியத்தில் 207 தனியார் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும்.
10 நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கிட ரூ.90 லட்சம் ஒதுக்கீடு.
சூரிய சக்தி மின்வேலிகள்
விவசாயிகள் சூரிய சக்தி மின்வேலிகள் அமைத்திட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.
டெல்டா மாவட்டங்களில் 2,235 கிலோ மீட்டர் நீளத்திற்கு “சி” “டி” பிரிவு வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.
ஈரோடு கள்ளக்குறிச்சி தர்மபுரி மாவட்டங்களுக்கு 8 மஞ்சள் வேக வைக்கும் இயந்திரங்களும் 5 மஞ்சள் மெருகூட்டும் இயந்திரங்களும் ரூ. 2.12 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.