Amazing Tamilnadu – Tamil News Updates

உழவர்களுக்காக சிறப்புத் திட்டங்கள்… உணவு உற்பத்தியில் தன்னிறைவு… தலைநிமிர்ந்த தமிழக வேளாண்மைத் துறை!

மிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு, மே மாதம் பொறுப்பேற்றது முதல் தமிழகத்தைப் பல்வேறு துறைகளில் முன்னணி மாநிலமாக்கிடும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், வேளாண்மைத் துறைக்கு தனிக் கவனம் செலுத்தி வருவதோடு, உழவர்களுக்காகப் பல சிறப்புத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.

அதுமட்டுமல்லாது, தொலைநோக்குப் பார்வையில், இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில்தான் வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, வேளாண் தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கப்பட்டுள்ளது.

பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை

முதலமைச்சர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில், மழை, வறட்சி ஆகியவற்றால் பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்காக 24 லட்சத்து 50 ,000 விவசாயிகளுக்கு, கடந்த மூன்றாண்டுகளில் 4,366 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

பயிர்ச் சேதங்களுக்கு நிவாரணம்

அதேபோன்று, கடந்த மூன்றாண்டுகளில் மழை, வறட்சி ஆகிய பேரிடர்களால் 12.88 லட்சம் ஏக்கர் நிலங்களில் பாதிக்கப்பட்ட பயிர்ச் சேதங்களுக்கு மொத்தம் 582 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டு 8 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

உணவு தானிய உற்பத்தி அதிகரிப்பு

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி தொடங்கிய 2021-2022 ன் முதலாம் நிதியாண்டிலேயே உணவு தானிய உற்பத்தி, முந்தைய ஆண்டைவிட 11.74 லட்சம் மெட்ரிக் டன் அதிகரித்து காணப்பட்டது.

குறுவை நெல்சாகுபடியில் சாதனை

அதேபோன்று 137 கோடி ரூபாய் ஒதுக்கீட்டிலான குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டம் வாயிலாக விவசாயிகளுக்கு அளித்த ஊக்கத்தினால், 2021-ல் 4.90 லட்சம் ஏக்கரிலும், 2022-ல் 5.36 லட்சம் ஏக்கரிலும் 2023-ஆம் ஆண்டில் 48 ஆண்டுகளாக இல்லாத சாதனையாக 5.59 லட்சம் ஏக்கரிலும் குறுவை சாகுபடி செய்யப்பட்டு உற்பத்தி அதிகரித்து விவசாயிகள் பயனடைந்தனர்.

சிறுதானிய இயக்கம்

கம்பு, கேழ்வரகு, வரகு, தினை, குதிரைவாலி, சாமை போன்ற சிறுதானியப் பயிர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ.65.29 கோடியில் சிறு தானிய இயக்கம் செயல்படுத்தப்பட்டு 1,11,494 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். ரூ.138 கோடியே 82 இலட்சம் செலவில் பயறு பெருக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டு 4,76,507 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

விருதுகள்

இவ்வாறு தமிழக அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகளின் பலனாக, 2021 முதல் வேளாண் துறையில் அடைந்துவரும் முன்னேற்றங்களுக்காகப் பல்வேறு விருதுகளை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் திருவண்ணாமலை மாவட்டம் அத்தியந்தலில் இயங்கும் சிறுதானிய மகத்துவ மையம், 2023-ஆம் ஆண்டிற்கான இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் வழங்கும் சிறந்த சிறுதானிய மையத்திற்கான விருது. உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்று தமிழ்நாடு வேளாண்மைத்துறைக்குப் புகழ் சேர்த்துள்ளது.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீர்மிகு திட்டங்களால், வேளாண்மைத் துறை உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்று, அண்டை மாநிலங்களுக்கும் உணவுப் பொருள்களை வழங்கி தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version