தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை வெளியீடு… பெண்கள் நலனுக்காக சொல்லப்பட்டிருப்பது என்ன?
தமிழ்நாட்டில் மகளிர் நலனை மேம்படுத்திடும் வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் தயாரிக்கப்பட்ட ‘தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024’ ஐ முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
இந்தியாவில் மகளிர் மேம்பாட்டிற்கென தனியான ஒரு கொள்கைய வெகுசில மாநிலங்களே இதுவரை வெளியிட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் தற்போதைய மாநில மகளிர் கொள்கையில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் மற்றும் குறிக்கோள்கள் என்னென்ன என்பது குறித்த விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
சிறப்பம்சங்கள் மற்றும் குறிக்கோள்கள்
பாலின உணர்திறன் கொண்ட கல்வி முறையை நிறுவுதல் மற்றும் பெண்குழந்தைகளின் இடை நிற்றல் விகிதத்தை குறைத்தல்.
வளரிளம் பெண்கள் மற்றும் மகளிரின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துதல்.
வேலைவாய்ப்புகளில் மகளிரின் பங்களிப்பை அதிகரித்தல்.
அனைத்து அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாராத பணிகளில் உள்ள பெண் பணியாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் அவர்களுக்கு உகந்த பணியிடங்களை உறுதி செய்தல்.
பெண்கள் நிர்வகிக்கும் சிறு தொழில்கள் மற்றும் அவர்கள் மேற்கொள்ளும் புதிய தொழில் முயற்சிகளுக்கு ஆதரவளித்தல்.
பெண்கள் அதிக ஊதியம் பெறும் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு டிஜிட்டல் கல்வியறிவை ஊக்குவித்து டிஜிட்டல் பாலின இடைவெளியைக் குறைத்தல்.
தொழில் துறையில், பயிற்சி மற்றும் திறன்மேம்பாட்டை வழங்குவதன் மூலம் மகளிரிடையே நிலவும் திறன் இடைவெளியைக் குறைத்தல்.
நிறுவனக் கடன் வசதிகளை அணுகுதல் மற்றும் தேவைப்படும் மகளிருக்கு வங்கி கடனுதவி அதிகம் கிடைப்பதற்கு வழிவகை செய்தல்.
மகளிரை அரசியல் களத்தில் பங்கேற்க ஊக்கப்படுத்துதல்.
மேற்கூறிய இக்கொள்கை சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியலில் அதிகாரப் பகிர்வை பற்றி எடுத்துரைப்பதுடன், கல்வி, வேலைவாய்ப்பு, திறன் வளர்ப்பு ஆகியவற்றில் மகளிரின் நிலையை மேம்படுத்துவதுடன், மகளிர் தங்களுக்குள் புதைந்துள்ள, இதுவரை கண்டறியாத சக்திகளை வெளிக்கொணர்ந்து பெண்கள் சுயமரியாதையுடன் வாழ்ந்திடவும், அவர்களுக்கு பாதுகாப்பான, ஆரோக்கியமான, லட்சியம் நிறைந்த சூழலை உருவாக்க ஏதுவாக இருக்கும் என அக்கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.