தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் நாளை மார்ச் 1 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், தேர்வின்போது மாணவர்கள் எத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடித்தால், தேர்வை வெற்றிகரமாக எழுத முடியும் என்பது குறித்து ஆசிரியர்களும், உளவியல் மருத்துவர்களும் சொல்லும் ஆலோசனைகள் இங்கே…
தேர்வுக்குப் போனால் பிறரிடம் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். அது தேவையற்ற மனப் பதற்றத்தைக் குறைக்க உதவும்.
தேர்வு அறையில் வினாத்தாளை வாங்கியவுடன் உடனே எழுத ஆரம்பிக்காமல், கொஞ்சம் மூச்சை இழுத்து மெல்ல மெதுவாக வெளியேவிட வேண்டும். இப்படிச் செய்யும்போது மனம் சாந்தம் அடைந்து, படித்ததெல்லாம் நினைவுக்கு வந்துவிடும். தேர்வைச் சிறப்பாக எழுத அது உதவும்.
ஒவ்வொரு பாடத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் படிப்பது சாலச் சிறந்தது.படித்த பாடங்களை மீண்டும் மீண்டும் படித்தல் மிகவும் நல்லது.
அவற்றை மனக் கண் முன் நிறுத்தி, மீண்டும் மீண்டும் திருப்புதல் செய்தல் வேண்டும்.படித்த பாடத் தகவல்களை நினைவில் நிறுத்த சில உத்திகளைப் பயன்படுத்தலாம்.
தேர்வின்போது, படித்த தகவல்களை வரிசைப்படுத்தி தெளிவாக விடை அளித்தல் வேண்டும். கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முழுத் தகவல்கள் அளிக்க வேண்டும்.
விளக்கப் படம், சமன்பாடு, கணக்கீடுகள் ஆகியவற்றை தேவையான இடத்தில் தெளிவாக எழுதுதல் வேண்டும்.
புத்தகத்தில் உள்ள அனைத்துப் பாடங்களின் தகவல்களும் தனக்கு தெரியும் என்ற தன்னம்பிக்கை மிக, மிக அவசியம். தேர்வு கண்டு அச்சம் கொள்ளாதீர்கள்.
தேர்வு எழுதத் தேவையான அனைத்து உபகரணங்களையும் எடுத்துக் கொண்டு, குறித்த நேரத்துக்குள் தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டும்.
தேர்வறைக்குள் பயப்படாமல் செல்லுங்கள். கேள்வித்தாளைப் பார்த்து பதற்றம் கொள்ளாதீர்கள். அமைதியாக, பொறுமையாக இருந்தால், எல்லா கேள்விகளுக்குமான பதில் உங்கள் பேனா முனையிலே இருக்கும். ஒவ்வொரு தேர்விற்குப் பின்னும் மனம் தளராமல் இருங்கள்.
தேர்வு மையத்தில், தேர்வு விதிமுறைகளுக்கு உட்பட்டு தேர்வு எழுதுங்கள். விதிமுறைகளுக்கு கட்டுப்படுவது நம் கடமை ஆகும்.
தவிர்க்க வேண்டிய உணவு
பீட்ஸா, பர்கர், பரோட்டா போன்ற உணவு வகைகளை அவசியம் தவிர்க்க வேண்டும். குளிர்பானங்கள் அருந்தக் கூடாது. இறைச்சி, மாவுச்சத்து அதிகம் உள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். ஆவியில் வேகவைத்த உணவுகள் நல்லது. நொறுக்குத்தீனிகளை அறவே தவிர்க்க வேண்டும். பதிலாக முளைகட்டிய பயறு வகைகளை எடுத்துக்கொள்ளலாம். காலையிலேயே அதிக அளவு உணவை உண்ணக்கூடாது. அதேநேரம் உணவைத் தவிர்க்கவும் கூடாது.
தேவையான உணவு
எளிதில் ஜீரணமாகக்கூடிய கீரை, காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நார்ச்சத்துள்ள தண்டு, பழ வகைகளை உண்ண வேண்டும். கேரட்டில் உள்ள வைட்டமின் கண்களுக்கு நல்லது. அதனால் தினமும் ஒரு கேரட் சாப்பிடலாம். பசு நெய்யை உணவில் சேர்த்துக்கொள்வது ஞாபகசக்தியை அதிகரிக்கும்.
தேர்வெழுதப் போகும் மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துகள்..!