Amazing Tamilnadu – Tamil News Updates

பொது நூலகங்கள்: அரசின் அறிவிப்பால் வாசகர்கள், பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மகிழ்ச்சி!

பொது நூலகங்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு வாசகர்கள், பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் இயங்கி வருகிறது. 8 லட்சம் சதுர அடி பரப்புடன், 8 தளங்களுடன் கூடிய இந்த பிரமாண்டமான நூலகத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள், குறிப்பு நூல்கள் உள்ளன. இந்த நூலகத்துக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் வந்துசெல்கின்றனர். குறிப்பாக அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிவரும் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் அதிக எண்ணிக்கையில் வந்து படிக்கிறார்கள்.

வீட்டுக்கு எடுத்துச்சென்று படிக்கும் வசதி

இந்நிலையில், வாசகர்களின் வேண்டுகோளை ஏற்று, நூல்களை வீட்டுக்கு எடுத்துச்சென்று படிக்கும் வசதியை அண்ணா நூற்றாண்டு நூலகம் அறிமுகப்படுத்தி உள்ளது. .

இதுகுறித்து நூலக அதிகாரிகள் கூறும்போது, “இதர பொது நூலகங்களைப் போன்று உறுப்பினர்கள், தங்களுக்குத் தேவையான நூல்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்கும் வசதியை மார்ச் 11 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தி உள்ளோம். முதல்கட்டமாக சிறுவர் நூல்களையும், தமிழ் நூல்களையும் நூலக உறுப்பினர்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்று படிக்க அனுமதி அளிக்கப்படும்” என்று தெரிவித்தனர்.

அரசின் இந்த அறிவிப்புக்கு வாசகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அடுத்ததாக பதிப்பாளர்கள், விற்பனையாளர்களை மகிழ்ச்சி அடைய வைக்கும் விதமான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது.

நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்க இணையதளம்

தமிழ்நாட்டில் மாநில நூலகம், மாவட்ட மைய நூலகங்கள், கிளை நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள் என 4,500-க்கும் பொது நூலகங்கள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் பொது நூலக இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகின்றன. இவற்றுக்குத் தேவைப்படும் நூல்கள், பருவ இதழ்கள், நாளிதழ்கள் ஆகியவை வெளிப்படைத்தன்மையுடனும், எவ்விதப் புகார்களுக்கு இடம் அளிக்காமலும் கொள்முதல் செய்யும் வகையில், கடந்த வாரம் பள்ளிக்கல்வித் துறை ஓர் அரசாணை வெளியிட்டது.

அதில், பொது நூலகங்களுக்குத் தேவையான நூல்களைக் கொள்முதல் செய்ய பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் இடம்பெற்றன. புத்தகங்களைக் கொள்முதல் செய்ய, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. புத்தகங்களைத் தேர்வுசெய்யும் குழுவிலும், புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

வெளிப்படையான நூல் கொள்முதல்

இந்நிலையில், பொது நூலகங்களுக்கு நூல்களைக் கொள்முதல் செய்வதற்காக https://bookprocurement.tamilnadupubliclibraries.org/ என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கிவைத்துள்ள நிலையில், பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இந்த இணையதள முகவரியில் தங்களைப் பதிவு செய்துகொண்டு பயன்பெறலாம் என அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம், நூலகங்களுக்கான புத்தக கொள்முதல் இனிமேல் வெளிப்படைத்தன்மையுடன் நடக்கும் என்பதால், பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடையே புத்தக விற்பனையில் ஆரோக்கியமான போட்டி நிலவும். இதன் பயனாக வாசகர்களுக்கு நல்ல நூல்கள் கிடைக்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Exit mobile version