தமிழ்நாட்டில் பயிலும் அனைத்து மாணவர்களும் உயர்கல்விக்குச் செல்ல வேண்டும் என்கிற நோக்கத்துடனும், அரசுப் பள்ளி மாணவர்கள் உயர்கல்விக்குச் செல்வதை எளிதாக்கி, சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வை சரிசெய்ய வேண்டும் என்கிற இலக்குடனும் தமிழ்நாடு அரசு, கடந்த 2023 ஆம் ஆண்டில் ‘மணற்கேணி செயலி’யை அறிமுகப்படுத்தியது.
‘மணற்கேணி செயலி’ புதிய வடிவம்
இந்த நிலையில், ‘மணற்கேணி செயலி’ தற்போது புதிய வடிவமெடுத்திருக்கிறது. காணொலிப் பாடங்கள் அடங்கிய மணற்கேணியை, இனி கணினித் திரை உட்பட பல பெரிய திரைகளிலும் இணையதளத்திலும் காணலாம். மணற்கேணி இணையதளத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
இதுவரை, மணற்கேணி செயலியை தரவிறக்கம் செய்து அதில் உள்ள பாடங்களை மாணவர்களுக்கு வகுப்பறையில் உள்ள ஸ்மார்ட் போர்டில் திரையிட்டுக் காட்டி பாடங்களை நடத்தி வந்த ஆசிரியர்கள், இனி இணையதளம் வாயிலாக பாடங்களை நடத்தலாம். காட்சி ரீதியாக பாடங்கள் இருப்பதால் மாணவர்களுக்கு கற்றல் மேலும் எளிதாகும்.
உலகின் எந்த எந்த மூலையில் இருந்தும் பயன்படுத்தலாம்
மணற்கேணி செயலி, உலகின் எந்த எந்த மூலையில் இருந்தும் ஆசிரியர்கள் மாணவர்கள் என எவர் வேண்டுமானாலும் பயன்படுத்தும் வகையில், ஓபன் சோர்ஸ் ஆக வெளியிடப்பட்டது. இப்போது இணையதளம் மூலமாகவும் பயன்படுத்தலாம் என்பதால், அலைபேசி வாயிலாகவும் கணினி வாயிலாகவும் இதனைப் பயன்படுத்தலாம்.
இணையதளத்தில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாநிலப் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களை பல பாடப்பொருள்களாக, வகுப்புகள் தாண்டி வகைபிரித்து, அதற்கேற்றபடி காணொலி வாயிலான விளக்கங்களை உருவாக்கி அளித்திருக்கிறது கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான மாநில கவுன்சில் (எஸ்.சி.இ.ஆர்.டி) நிறுவனம். இதன்கீழ் உருவாக்கப்பட்டுள்ள காணொலி கள் பாடப்பொருள்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
6, 7, 8, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கான அறிவியல், கணிதம், ஆங்கிலம், இயற்பியல், வேதியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களில் முதற்கட்ட மாக பாடப்பொருள்கள் காணொலியாக தரப்பட்டுள்ளன.
போட்டித் தேர்வுக்கு எளிதில் தயாராக முடியும்
மணற்கேணியில் உள்ள காணொலிப் பாடங்கள், முறையான கற்றல் பயணத்திற்கு வழிவகுக்கின்றன. Laddered Learning approach எனப்படும் அணுகுமுறை இதில் கையாளப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, பன்னிரண்டாம் வகுப்பில் வரும் ஒரு பாடப்பொருளை முறையாகப் புரிந்து கொள்ள ஆறாம் வகுப்பில் அதற்கான அடிப்படைப் பாடம் இருக்கிறது என்றால், அதைப் படித்துப் புரிந்து கொண்டுவிட்டு, பின் ஏழாம் வகுப்பில் அது குறித்துப் பாடமிருந்தால் அதையும் படித்துவிட்டு, படிப்படியாக பன்னிரண்டாம் வகுப்புப் பாடப்பொருளுக்கு வரலாம். இதன்மூலம் பாடங்களை எளிதில் புரிந்துகொள்வதற்கும் எதையும் விட்டுவிடாமல் படிப்பதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இப்படிப் பயிற்றுவிப்பதன் வாயிலாக பொதுத் தேர்வில் கேட்கப்படும் எந்த வகையான கேள்விகளுக்கும் மாணவர்கள் எளிதாக விடையளிக்க முடியும். அது மட்டுமல்லாமல் ஜே.ஈ.ஈ போன்ற அகில இந்திய நுழைவுத் தேர்வுகளுக்கும் எளிதில் தயாராக முடியும். கடந்த பல ஆண்டு களில் கேட்கப்பட்ட வினாக்கள் அடங்கிய வினா- விடை வங்கி ஒன்றும் உண்டு.
இந்தக் காணொலிகள் 2டி மற்றும் 3டி அனிமேஷன் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன என்பதால் கற்போர் உடனடியாகப் புரிந்து கொள்ளலாம்.
மணற்கேணி இணையதள முகவரி :
அலைபேசியில் மணற்கேணி செயலியை ப்ளே ஸ்டோரில் தேடவேண்டுமெனில், TNSED Manarkeni என்று உள்ளீடு செய்து தேடவேண்டும் எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.