Amazing Tamilnadu – Tamil News Updates

தொழில் முனைவர்களாக உயரும் SC/ST இளைஞர்கள்… ஊக்குவிக்கும் முதலமைச்சரின் கொள்கைகள்… உறுதுணையாற்றும் புத்தொழில் நிதி!

மிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின், கடந்த 2021 ஆம் ஆண்டு பதவியேற்றதிலிருந்து தமிழகத்தை தொழில்துறையில் முன்னோடி மாநிலமாக்க வேண்டும் என்ற முனைப்புடன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில், புத்தொழில் நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அளித்துவரும் ஊக்கம் காரணமாக, தமிழ்நாட்டில் 6,384 புத்தொழில் நிறுவனங்கள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன. இதில், பட்டியலின மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளைப் பெருக்கிட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளை முனைப்புடன் மேற்கொண்டு வருகிறார். புத்தாக்கத் தொழில்கள் வளர்ச்சியில் பட்டியலின, மலைவாழ் இன இளைஞர்களுக்கு ஊக்கம் தந்து உற்சாகப்படுத்தி, அவர்களை தொழில் முகவர்களாக உயர்த்துவதில் தனிக் கவனம் செலுத்தி வருகிறார்.

புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கை

அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கை 20.9.2023-ல் முதலமைச்சரால் வெளியிடப்பட்டது. 2021-ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 2,032. இன்றைய நிலவரப்படி இது 4 மடங்கிற்கும் மேல் அதிகரித்து 8,416-ஐ எட்டியுள்ளது. மகளிர் ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை 2021-ம் ஆண்டில் 966 ஆக இருந்த நிலையில், அது தற்போது மூன்று மடங்குமேல் அதிகரித்து 3,163 ஆக உயர்ந்துள்ளது.

பட்டியலினத்தவர் / பழங்குடியினர் புத்தொழில் நிதி

மேலும், அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் மிகுந்த அக்கறை செலுத்தும் ஸ்டாலின் அரசு, பட்டியலின மற்றும் பழங்குடியினரால் நிறுவப்படும் புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக, 2022- 23 ஆம் நிதி ஆண்டில் புத்தொழில் நிதித்திட்டத்தைக் கொண்டுவந்து, அதற்காக ரூ. 80 கோடி சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்தது. இத்திட்டமானது, தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் மூலம், இப்பிரிவினை சார்ந்த தொழில்முனைவோர்களால் தொடங்கி நடத்தப்பட்டு வரும் புத்தொழில் நிறுவனங்களில் அரசு முதலீடு செய்து வருகின்றது.

அத்துடன், நாட்டின் முன்மாதிரியாக விளங்கும் இத்திட்டத்தின் வாயிலாக கடந்த இரண்டு நிதி ஆண்டுகளில், 38 புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.55.2 கோடி பங்கு முதலீடு உறுதி செய்யயப்பட்டுள்ளது. சென்னை மட்டுமல்லாது சேலம், கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, கோயமுத்தூர், ஈரோடு, நீலகிரி ஆகிய பல்வேறு மாவட்டத்தினை சேர்ந்தோர் இதன் வாயிலாக பயன்பெற்றுள்ளனர்.

இயந்திரவியல், வேளாண் தொழில்நுட்பம், ஊடகத்துறை, செயற்கை நுண்ணறிவு, மருத்துவத்தொழில் நுட்பம், பசுமை எரிவாயு தயாரித்தல், இணைய வழி வணிகம், உணவு மதிப்புகூட்டுதல், விண்வெளித் தொழில்நுட்பம் என பல்வேறு துறைகளில் புத்தாக்க வணிக மாதிரிகளை கொண்டு இயங்குபவையாக இந்த நிறுவனங்கள் உள்ளன.

சாதிக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்

இத்திட்டத்தினால் ட்டோ மேன் (Tow man), ஆர்பிட் எய்ட் (ORBID AID), குகன் இண்டஸ்டிரியல் அண்ட் மெனுபேக்சரிங் (Gugan Industrial and Manufacturing Industries), ட்ரைபல் கிரீன் ப்புயல் (Tribal Green Fuel), ட்ரைபல் கிரீன் ப்புயல் (Tribal Green Fuel), ஐ கேம் டெக்னாலஜிஸ் (Icam Technologies) உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் சந்தை வாய்ப்பினை அதிகரித்து, வணிகத்தில் சிறப்பாக இயங்கிவருகிறது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் லெமூரியன் வெஞ்சர்ஸ் (Lemurian Ventures) நிறுவனம் உலர்மீன் (கருவாடு) தொழிலில் புதுமையான பேக்கேஜிங் தொழில்நுட்பத்தின் மூலம் வாசனை வெளிவராத வகையில் விற்பனை செய்து வருகிறது. இதன் மூலம் பல்வேறு இடங்களில் கருவாடு விற்பதற்கான சந்தை வாய்ப்பு அதிகரித்துள்ளது. மீனவர்களின் பாரம்பரிய தொழிலில், நவீன தொழில் நுட்பத்தினை பயன்படுத்துவதன் வாயிலாக சந்தை வாய்ப்பினை அதிகரித்து ஒரு முன்மாதிரியாக இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.

வேலைவாய்ப்பு

முதலமைச்சரின் இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகத்தின் பட்டியலின, பழங்குடியின இளைஞர்கள், இளம் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் புதிய தொழில் முனைவோர்களாக உருவாகியுள்ளதோடு, புத்தொழில் நிறுவனங்கள் செயல்படும் இடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்புகளும் கிடைத்துள்ளன.

இந்தியாவிலேயே முதன்முறை

அந்த வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு கொண்டுவந்த இந்த திட்டத்தின் மூலம், தமிழ்நாடு பட்டியலின – பழங்குடியின இளைஞர்கள் பலர் இந்தியாவிலேயே முதல் முதலாக தொழில் முகவர்களாக உயர்ந்து சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version