தமிழ்நாடு சட்டசபையில் இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், கோவையில் புதிய ஐடி பூங்கா அமைக்கப்படும் என்றும், மதுரை மற்றும் திருச்சியில் டைடல் பூங்கா அமைக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது.
இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையில், கோவையில் ரூ.1,100 கோடி செலவில் புதிய ஐடி பூங்கா அமைக்கப்படும் என்றும், மதுரையில் ரூ.345 கோடி செலவிலும், திருச்சியில் ரூ.350 கோடி செலவிலும் டைடல் பூங்கா அமைக்கப்படும் என்றும், தஞ்சாவூர் மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.
மேலும் தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் நியோ டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும், இந்த நியோ டைடல் பூங்காக்கள் மூலம் 13,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்த அவர், குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும் என்றும், தூத்துக்குடியில் 2000 ஏக்கர் பரப்பளவில் விண்வெளி தொழில் மற்றும் உந்து சக்தி பூங்கா அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கோவையில் கலைஞர் நூலகம்
அத்துடன், கோவையில் பிரம்மாண்ட நூலகம் கலைஞர் பெயரில் அமைக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.200 கோடி செலவில் மாநிலத் தரவு மையம் மேம்படுத்தப்படும். மதுரையில் 25,00 சதுர அடியில் தொழில் புத்தாக்க மையம் அமைக்கப்படும். கோவை, மதுரையில் உலகளாவிய திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும். முதல்வர் தலைமையில் தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் அமைக்கப்படும். சென்னை, மதுரை, கோவையில் ரயில்வே, வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
கடலோர வளங்களை மீட்டெடுக்க நெய்தல் மீட்சி இயக்கம் உருவாக்கப்படும். பசுமை ஆற்றல் நிறுவனம் உருவாக்கப்படும். மருத்துவத் துறைக்கு ரூ.20,198 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ரூ.440 கோடி நிதி ஒதுக்கீடு. 4 நகரங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் நிறுவப்படும்.
விருதுநகர், சேலத்தில் ஜவுளி பூங்கா
விருதுநகர், சேலத்தில் ரூ.2,483 கோடி செலவில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும். சென்னை, கோவை, மதுரை சேலம், திருச்சியில் பொது இடங்களில் இலவச வைஃபை வசதி அமைக்கப்படும். மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு 6 இடங்களில் பாரா தடகள விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும். ராமநாதபுரத்தில் கடல்சார் நீர் விளையாட்டு மையம் அமைக்கப்படும். புற்றுநோய் மேலாண்மை இயக்கம் அமைக்கப்படும். சுகாதார மையங்கள் முதல் மருத்துவ கல்லூரிகள் வரை கட்டமைப்புகளை தரம் உயர்த்த ரூ.333 கோடி நிதி ஒதுக்கீடு.
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்க ரூ.35,000 கோடி
பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதிகளை புதியதாக அமைக்க ரூ.26 கோடி ஒதுக்கீடு. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்க ரூ.35,000 கோடி நிதி ஒதுக்கீடு. தமிழகத்தில் முதல்முறையாக உலக புத்தொழில் மாநாடு நடத்தப்படும். ஊட்டச்சத்து குறைபாடு உள்ள தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படும்.
2000 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள்
நாமக்கலில் ரூ.358 கோடி, திண்டுக்கல்லில் ரூ.565 கோடி, பெரம்பலூரில் ரூ.366 கோடியில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். 5 ஆயிரம் ஏரி, குளங்களை புனரமைக்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு. 2000 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட ரூ.365 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பது உள்ளிட்ட மேலும் பல அறிவிப்புகளையும் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்.