தமிழ்நாடு சட்டசபையில் இன்று 2024-25- ஆம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு. முன்னதாக பட்ஜெட் தாக்கலையொட்டி, “தடைகளைத் தாண்டி… வளர்ச்சியை நோக்கி!!!” எனும் வாசகத்துடன் 2024-25 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் வெற்றியை முன்னே முழங்கும் முத்திரைச் சின்னத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
மேலும், பட்ஜெட்டில் இடம்பெற இருக்கும் 7 முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பது குறித்தும் தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதில், “1. சமூக நீதி, 2. கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, 3. உலகை வெல்லும் இளைய தமிழகம், 4. அறிவுசார் பொருளாதாரம், 5. சமத்துவ நோக்கில் மகளிர் நலம், 6. பசுமை வழிப் பயணம், 7. தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும்” ஆகிய அம்சங்களில் மாபெரும் 7 தமிழ்கனவுகள் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பட்ஜெட்: கல்வி சார்ந்த முக்கிய அம்சங்கள்
இந்த நிலையில், இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், அரசுப் பள்ளிகளில் 6-12 வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் மாணவர்களின் கல்வியை மெருகேற்ற ‘தமிழ்ப் புதல்வன்’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாகவும், இத்திட்டத்தில் மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் இடம்பெற்ற அறிவிப்பு, முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
கல்வி சார்ந்து இடம்பெற்றுள்ள மேலும் முக்கிய அம்சங்கள் வருமாறு:
பள்ளிக் கல்வி துறைக்கு ரூ.44,042 கோடி நிதி ஒதுக்கீடு. உயர் கல்வித் துறைக்கு ரூ.8, 212 கோடி நிதி ஒதுக்கீடு.
தொழில்துறை 4.0 தரத்துக்கு 45 பாலிடெக்னிக் கல்லூரிகள் உயர்த்தப்படும்.
ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க ரூ.2,500 கோடி ஒதுக்கீடு
ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க ரூ.2,500 கோடி ஒதுக்கீடு.
கோவையில் பிரம்மாண்ட நூலகம் கலைஞர் பெயரில் அமைக்கப்படும்.
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ஊரகப் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இதற்காக, ரூ.600 கோடி ஒதுக்கீடு.
அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண் திட்டம்’, இந்த ஆண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
மூன்றாம் பாலினத்தவரின் கல்லூரிக் கல்வி மற்றும் விடுதிகள் கட்டணத்தை அரசே ஏற்கும்.
ரூ.1,000 கோடியில் புதிய வகுப்பறைகள் கட்டப்படும். பேராசிரியர் அன்பழகன் திட்டம் என்கிற பெயரில் இது செயல்படுத்தப்படும்.
ரூ.300 கோடி மதிப்பீட்டில் 15,000 ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும்.
‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.
‘நான் முதல்வர்’ திட்டத்தில் 100 கலை, பொறியியல் கல்லூரிகளில் ரூ.200 கோடிக்கு திறன் ஆய்வகங்கள்.
மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கு தயாராகும் 1,000 நபர்களுக்கு ஆறு மாத உண்டு உறைவிட பயிற்சி அளிக்கப்படும் என்பது உட்பட மேலும் பல அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.