Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

தமிழ்நாடு சௌக்கியமா?

MEIL Established Covid Bed Hospitals in Tamilnadu

ழக்கமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டால் இப்படிக் கேட்போம். “எப்படி இருக்கிறீர்கள்? சௌக்கியமா? நன்றாக இருக்கிறீர்களா?” என எப்படிக் கேட்டாலும் பொருள் ஒன்றுதான். உடல் ஆரோக்கியமாக இருக்கிறதா? என்பதுதான் அது.

ஒரு மாநிலத்தையே அப்படி நாம் கேட்டால், தமிழ்நாடு சௌக்கியம்தான். தமிழ்நாட்டு மக்களின் உடல் ஆரோக்கியத்திற்கு எந்தக் குறைவும் வராமல் பார்த்துக் கொள்கிறது அரசு. அதையும் மீறி வரும் எதிர்பாராத நோய்களைக் கட்டுப்படுத்தவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. சமீப நாட்களாக பரவி வரும் டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க, அத்தகைய நடவடிக்கைகளைத்தான் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு அரசு ‘கொரோனா அலைகள்’ விடுத்த சவாலை அப்படித்தான் எதிர்கொண்டது. எத்தகைய நோய் வந்தாலும் உடனடியாக அவற்றைப் பரவாமல் தடுக்கவும், வந்தவர்களை உடனடியாகக் காப்பாற்றவும் தீவிரமாக இறங்கி தமிழ்நாடு அரசு செயல்படுகிறது. அதற்குக் காரணம் இங்குள்ள வலிமையான மருத்துவக் கட்டமைப்புத்தான்.

இந்தியாவிலேயே பல்வேறு சுகாதாரக் குறியீடுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இந்தியாவில் உள்ள மொத்த மருத்துவர்களில் 12 சதவீதம் பேர் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள். இந்தியாவில் எட்டு மருத்துவர்களுக்கு ஒருவர் தமிழ்நாட்டில் இருக்கிறார் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இத்தனை பலம் பொருந்திய தமிழ்நாடு கொரோனா சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டதில் ஆச்சரியமில்லை. கொரோனா நோயாளிகளைக் காப்பாற்றவும் நோய் பரவாமல் தடுக்கவும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்ட தமிழ்நாடு அரசு, இணை நோய்களின் மீதும் கவனம் செலுத்தியது. அதன் விளைவுதான் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டம்.

சர்க்கரை, ரத்தக் கொதிப்பு போன்ற நோய்கள் உள்ளவர்களைக் கண்டறிந்து, அவர்களின் வீடுகளுக்கே சென்று மருந்து வழங்கும் திட்டம் அது.

அதே போல சாலை விபத்துக்களால் உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்கு கொண்டு வரப்பட்ட திட்டம்தான் ‘நம்மைக்காக்கும் 48’. நோயோ விபத்தோ எதிர்பாராமல் நடப்பது, அவற்றை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் இவை.

குழந்தை பிறக்கும்போது ஏற்படும் பிரசவ மரணங்களைத் தடுப்பதிலும் தமிழ்நாடு அரசு முன்னணியில் இருக்கிறது. 2005-ம் ஆண்டில் குழந்தைகளில் ஒரு வயதுக்குள் மரணமடையும் குழந்தைகளின் விகிதம் 1000-த்திற்கு 37ஆக இருந்தது. 2020 ல் இது 13 ஆகக் குறைந்துள்ளது. அதே போல பிரசவத்தின் போது தாய்மார்கள் இறப்பையும் தமிழ்நாடு அரசு வெகுவாகக் குறைத்துள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் 1 லட்சம் பிரசவத்திற்கு, ‘இறக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை’ 70-க்கும் கீழ் குறைக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதற்கான தீவிர நடவடிக்கை எடுத்ததன் விளைவாக, 2020-ம் ஆண்டிலேயே தாய்மார்கள் இறப்பு விகிதத்தை 54 ஆகக் குறைத்துள்ளது தமிழ்நாடு அரசு.

ஆங்கில மருத்துவம் மட்டுமல்ல. தமிழ்நாட்டின் பாரம்பரிய மருத்துவம் சித்த மருத்துவம். அதையும் விட்டு வைக்கவில்லை தமிழ்நாடு அரசு. பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி ஒன்றை நவீன வசதிகளுடன் ஏற்படுத்தி வருகிறது. நாட்டிலேயே முதல் முறையாக ஒரு சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான முயற்சியிலும் இறங்கி உள்ளது.

உடலைப் பார்ப்பது மட்டுமல்ல உள்ளத்தையும் கவனிக்க வேண்டுமே.. அதற்கும் மாவட்ட மனநலத் திட்டம் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள்.

மனநலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மனநலம் பாதிக்கப்பட்டவரை விரைவில் அடையாளம் கண்டு சிகிச்சை அளிப்பது, மருத்துவமனைகளில் குணமடைந்த மனநல நோயாளிகளுக்கு சமுதாயத்தில் மறுவாழ்வு அளிப்பது என்று மனநலத்தை பார்த்துக் கொள்கிறார்கள்.

மொத்தத்தில் தமிழ்நாடு சௌக்கியமாகவே இருக்கிறது.

Exit mobile version