முடிவுக்கு வந்தது கோடை வெப்பம்… வரும் நாட்களில் மழை தொடரும்!
தமிழ்நாட்டில் மக்களை மிகுந்த சிரமத்துக்குள்ளாக்கிய கோடை வெப்பம், இந்த மாதம் தொடக்கத்திலிருந்து பெய்த கோடை மழை காரணமாக ஓரளவு குறையத் தொடங்கி விட்டது.
இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக கோடை வெப்பம் தற்போது ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டதாகவும், இனி பகலில் வழக்கமான வெப்ப நிலையே காணப்படும் என்றும், வரும் நாட்களில் மாலையில் இடியுடன் கூடிய மழை வரும் நாட்களில் தொடரக்கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அடுத்த இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய, இலேசானது முதல் மிதமானது வரை மழைபெய்யக்கூடும். இந்த மாதம் முழுவதும் மாலை நேரங்களில் மழை தொடர வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
இயல்பை விட குறைவான வெப்பநிலை
ஜூன் 1 முதல், பகல் வெப்பநிலை இயல்பை விட குறைவாகவோ அல்லது இயல்பு நிலைக்கு நெருக்கமாகவும் காணப்பட்டது. நேற்று சென்னை, நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கத்தில் முறையே 36.4 டிகிரி செல்சியஸ் மற்றும் 37 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை காணப்பட்டது. அதாவது இயல்பான வெப்ப நிலையை விட சுமார் 0.8 டிகிரி செல்சியஸ் மற்றும் 0.5 டிகிரி செல்சியஸ் அளவு குறைவாக இருந்தது.
கடந்த 10 ஆண்டுகளில் அதிகபட்சமாக 39.6 டிகிரி செல்சியஸ் மற்றும் 42.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.1948, ஜூன் 3 ல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 43.3 டிகிரி செல்சியஸ் என்ற அதிகபட்ச வெப்பநிலை பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு இரண்டு கண்காணிப்பு நிலையங்களிலும் கிட்டத்தட்ட 75% ஆக இருந்த ஈரப்பதம், மாலை 5.30 மணிக்கு சுமார் 47% ஆகக் குறைந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
மாலையில் மழை தொடரும்
கடந்த சில நாட்களில், மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை இரண்டு கண்காணிப்பு நிலையங்களிலும் 12 செ.மீ மற்றும் 14 செ.மீ எனப் பதிவாகி உள்ளது. இது, இந்த மாத சராசரி மழையான 6 செ.மீட்டரை விட அதிகமாகும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை அல்லது மின்னலுடன் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை சுமார் 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை சுமார் 27 முதல் 28 டிகிரி செல்சியாக யாக இருக்கலாம். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடை காலம் முடிந்தது
மேற்குக் கடலோர பகுதிகளில் பருவமழை தீவிரமாக இல்லாதபோது சென்னை நகரில் பொதுவாக மழை பெய்யும். தற்போது தென்மேற்கு பருவமழை கேரளாவில் இன்னும் தீவிரமாகவில்லை. ஆனாலும், ஜூன் 20 ஆம் தேதி மேற்குக் கடலோர பகுதிகளில் பருவமழை மீண்டும் பெய்யக்கூடும் என வானிலை கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கேரளாவின் பருவமழை, சென்னையில் இடியுடன் கூடிய மழை நடவடிக்கைகளில் எந்த மாற்றத்தையும் கொண்டு வராது. சுருக்கமாக சொல்வதானால், சென்னை உட்பட தமிழகத்தில் கோடை காலம் முடிந்துவிட்டது. தற்போதைய நிலவரப்படி, சென்னை உட்பட பல நகரங்களில் தினமும் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதே வானிலை ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.