Amazing Tamilnadu – Tamil News Updates

ஜூன் 10 ல் பள்ளிகள் திறப்பு: தமிழகம் முழுவதுமிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

மிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் அனைத்தும் ஜூன் 10 ஆம் தேதியன்று திறக்கப்பட உள்ளது. இதனையடுத்து விடுமுறையை கழிப்பதற்காக தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள், மீண்டும் சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு திரும்ப ஆயத்தமாகி வருகின்றனர்.

நாளை முதல் சிறப்புப் பேருந்துகள்

இந்த நிலையில், பள்ளிகள் திறக்கும் தேதியான ஜூன் 10 அன்று திங்கட்கிழமையாக இருப்பதால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகம் பேர் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில்கொண்டு, தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து மக்கள் சென்னை திரும்புவதற்கு ஏதுவாக, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் நாளை முதல் சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.

ஜூன் 8, 9 வார இறுதி நாட்கள் என்பதால் சென்னையில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நாள் தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

மொத்தம் 1,465 பேருந்துகள் இயக்கம்

அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்ப கோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஜூன் 7, 8 தேதிகளில் 1,105 பேருந்துகளும், சென்னை, கோயம்பேட்டிலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 160 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 200 சிறப்புப் பேருந்துகளுமாக மொத்தம் 1,465 பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

முன்பதிவு

இப்பேருந்துகளை www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் tnstc செயலி மூலமாக முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், வார இறுதி நாட்களை முன்னிட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு ஜூன் 7, 8 தேதிகளில் தலா 15 பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.

இந்த நிலையில், சிறப்புப் பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகம் முழுவதும் ஜூன் 7, 8, 9 ஆகிய தேதிகளில் பயணிக்க இதுவரை 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளதாகவும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்கு நர் ஆர்.மோகன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version