Amazing Tamilnadu – Tamil News Updates

சாலை வசதிகளில் தமிழ்நாடு முதலிடம் ஏன்?

ந்தியப் பொருளாதாரத்தில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் சிறந்து விளங்குகிறது என்றால், அதற்கு காரணம் தமிழ்நாட்டின் சாலை கட்டமைப்பு வசதிகள் பெருகியுள்ளது என்பதுதான்.

1971-ஆம் ஆண்டில், கிராமங்களை நகரங்களுடன் இணைக்கும் இணைப்புச் சாலை திட்டத்தை அறிமுகப்படுத்தி, தமிழ்நாடு முழுவதிலும் குக்கிராமங்களை எல்லாம் நகரங்களோடு இணைத்து சாலை வசதிகளை மேம்படுத்தினார் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி. அதன் காரணமாக 2010-ல் இந்தியாவில் ஒவ்வொரு 100 சதுர கி.மீ. நிலப்பரப்பிலும் சராசரியாக 103 கி.மீ. நீளத்துக்குச் சாலைகள் அமைந்துள்ள போதிலும், தமிழ்நாட்டில் சராசரியாக 153 கி.மீ. நீளத்திற்கு சாலைகள் அமைந்து சாலை வசதிகளில் தமிழ்நாடு மிகச் சிறந்த மாநிலம் எனப் புகழ் வளர்த்தது.

இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் 2021-ல் தமிழ்நாடு முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்ற பின், தமிழ்நாட்டின் சாலை வசதிகளைப் பெருக்குவதில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்.

முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டம்

முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், இதுவரை ரூ.4,984 கோடி மதிப்பில் 577 கி.மீ. சாலைகளை நான்கு வழிச்சாலைகளாக அகலப்படுத்துவதற்கு எடுத்துக் கொள்ளபட்டு, ரூ.2,608 கோடி செலவில் 215 கி.மீ. நீளச் சாலைகள் நான்கு வழிச்சாலைகளாக மேம்படுத்தப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளன. மீதமுள்ள பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன.

நகர்ப்புற மேம்பாட்டுப்பணி

நகர்புறப் பகுதிகளில் விரைவான போக்குவரத்தை ஏற்படுத்தி வணிகப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளவும், வேளாண் பொருள்களைச் சந்தைப்படுத்துவதற்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக ரூ. 815 கோடி மதிப்பில் 171 கி.மீ. நீளச் சாலைப் பணிகள் எடுக்கப்பட்டு, ரூ.579 கோடி செலவில் 132 கி.மீ. நீள சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன.

தரைப்பாலங்களை உயர்மட்டப் பாலங்களாக மாற்றும் பணி

மக்களின் அன்றாட நடவடிக்கைகள், சரக்கு போக்குவரத்து, விளை பொருள்களை சந்தைப்படுத்துதல், மாணவர்கள் பள்ளி செல்வது போன்றவற்றில் உள்ள இடையூறுகளைத் தடுக்க கடந்த மூன்று ஆண்டுகளாக, தரைப்பாலங்களை உயர்மட்டப் பாலங்களாக மாற்றும் திட்டத்தின் கீழ், ரூ. 2,006 கோடி மதிப்பில் 1113 தரைப்பாலங்கள் எடுக்கப்பட்டு, ரூ.785 கோடி செலவில் 795 உயர்மட்ட பாலங்களாக மாற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன.

சாலை ஓடுதளப்பாதை மேம்பாட்டுத் திட்டம்

சீரான போக்குவரத்தை மேம்படுத்த மற்றும் சாலையின் மேற்பரப்பு வலுவுடன் இருக்க, கடந்த மூன்று ஆண்டுகளாக, இத்திட்டத்தின் கீழ்,ரூ. 1,610 கோடி மதிப்பில் 4581 கி.மீ. நீளத்திற்கு பணிகள் எடுக்கப்பட்டு, ரூ.1,353 கோடி செலவில் 4492 கி.மீ. நீள சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

சாலை பாதுகாப்பு

​இத்திட்டத்தின் கீழ், ரூ.676 கோடி மதிப்பில் 1653 பணிகள் எடுக்கப்பட்டு, ரூ.352 கோடி செலவில் 1,130 சாலை பாதுகாப்புப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

புறவழிச்சாலைகள் அமைத்தல்

புறவழிச்சாலைகள், போக்குவரத்துகள் தங்கு தடையில்லாமல் செல்வதை உறுதி செய்வதுடன் நகர்ப்புறப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் பயன்படுகின்றன. மேலும், வாகன இயக்கச் செலவைக் குறைக்கவும் பயண நேரத்தை வெகுவாகக் குறைக்கவும் புறவழிச்சாலைகள் பயன்படுகின்றன.கடந்த மூன்று ஆண்டுகளில், 109 புறவழிச்சாலை பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. அவற்றில், 18 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

ரயில்வே மேம்பாலங்கள்

முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர், கடந்த மூன்றாண்டுகளில் 836 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 22 ரயில்வே மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளன.

உயர்மட்டப் பாலங்கள்

நீர் நிலைகள், குறிப்பாக ஆறுகளின் குறுக்கே கடந்த மூன்றாண்டுகளில் 277 உயர்மட்டப் பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 2023-24ஆம் ஆண்டில் 13 உயர்மட்டப் பாலங்கள் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டு பல்வேறு பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன.

இப்படி, நெடுஞ்சாலைத் துறையின் மூலம் தமிழ்நாடு முழுவதிலும் சாலை வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன. ரூ.4,984 கோடியில் 577 கி.மீ. சாலைகள் நான்கு வழிச்சாலைகளாக அகலப்படுத்தப்படுகிறது. ரூ.2,465 கோடி மதிப்பில் 1710 கி.மீ. சாலைகள் இருவழிச் சாலைகளாகின்றன. ரூ.1,610 கோடியில் 4,581 கி.மீ. நீளச் சாலை ஓடுதளப்பாதையாகிறது. 1,281 தரைப்பாலங்கள் உயர்மட்ட பாலங்களாக உயர்த்தப்படுகின்றன.

இப்பணிகளின் மூலம், தமிழ்நாடு முழுவதிலும் சாலைப் பயணம் இனிமையானதாக எளிமையானதாக அமைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு முன்னேற்றத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி, சாலை வசதிகளில் தமிழ்நாடு முதலிடம் என்பதை நிலைநாட்டி வருகிறார் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version