அதிகரிக்கும் வெயில்… தமிழ்நாட்டில் பரவும் தட்டம்மை, சின்னம்மை நோய்… அறிகுறிகள் என்ன?
தமிழ்நாட்டில் வழக்கமாக ஏப்ரல் மாதத்திலிருந்து கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக தொடங்கிவிட்டது.
இதனால், வெயில் காலத்தில் வரக்கூடிய தட்டம்மை, சின்னம்மை மற்றும் பொன்னுக்கு வீங்கி ( measles, chickenpox, mumps) போன்ற நோய்களின் தாக்கம் தமிழ்நாடு முழுவதும் சமீப நாட்களாக அதிகரித்து வருகின்றன. அரசு மருத்துவமனைகள் தவிர, ஆங்காங்கே தனியார் மருத்துவமனைகளிலும் கன்னங்கள் மற்றும் தாடைகள் வீங்கிய நிலையில், இந்த நோய் பாதிப்புடைய குழந்தைகள் வருவது அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அம்மைநோய் ஒரு வகை வைரஸினால் எளிதில் பரவும் நோய் என்றும், இந்நோய் பொதுவாகக் குழந்தைகளை எளிதில் தாக்கும் என்றும் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை தெரிவித்துள்ளது.
பொன்னுக்கு வீங்கி நோயின் அறிகுறிகள்
காது மடலுக்குக் கீழ் உள்ள உமிழ் நீர் சுரப்பியை வைரஸ் தொற்று தாக்குவதால், தாடையின் இருபுறமும் வீக்கம் தோன்றுகிறது. மேலும் அதிக காய்ச்சல் (104°F வரை), கழுத்துவலி, தலைவலி, பசியின்மை, பலவீனம், சாப்பிடும்போதோ, அல்லது விழுங்கும்போதோ வலி ஏற்படுதல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.
இருமல், மூக்கு ஒழுகுதல், சிவப்பு மற்றும் கண்களில் நீர் வடிதல் ஆகியவற்றுடன் மூன்று முதல் ஐந்து நாட்களுக்குப் பிறகு, நோயாளிகளுக்கு சொறி ஏற்படுகிறது.
சின்னம்மையின் அறிகுறிகள்
உடலில் நீர் கட்டியைப்போன்ற சிறிய கொப்பளங்கள் தோன்றும். பின்னர் அவை கொஞ்சம் பெரிதாகி நீர் கோர்த்துக் காணப்படும் கொப்பளங்களிலிருந்து நீர் வடியும். பின்னர் நீர் வறண்டு கொப்பளங்கள் உதிரும். இந்த நோய் குழந்தைகள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், முதியவர்களுக்கும் எளிதில் பரவும்.
தட்டம்மையின் அறிகுறிகள்
இந்நோய்க்கு மணல்வாரி அம்மை என்ற மற்றொரு பெயரும் உண்டு. காய்ச்சல், இருமல், மூக்கில் நீர் ஒழுகுதல், கண்ணில் நீர் வடிதல் அதன் அறிகுறிகளாகும். முகம் மற்றும் காதின் பின்பகுதிகளில் வேர்க்குரு போன்ற அறிகுறிகள் தோன்றி சிவப்பு புள்ளிகளாக உடல் முழுவதும் பரவிக் காணப்படும். கண்கள் சிவந்து வீக்கமாகக் காணப்படும். இரண்டு வாரங்களில் இந்த அம்மையும் தானாகவே சரியாகிவிடும்.
மருத்துவ ஆலோசனைப்படி சிகிச்சை
மேற்கண்ட நோயினால் பாதிக்கப்பட்டவரின் உமிழ் நீர், தும்மல் அல்லது இருமல் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்களைப் பகிர்ந்துகொள்வதின் மூலம் இந்நோய் எளிதில் பரவுகிறது. அம்மை ஒரு வைரஸ் தொற்று என்பதால், இரண்டு வாரங்களில் இந்நோய் தானாகவே சரியாகிவிடும்.
எனினும் மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். நோய் பரவாமல் தடுக்க நோய் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்துவதின் (Isolation) மூலம் மற்றவர்க்குப் பரவுவதை முழுமையாகக் கட்டுப்படுத்தலாம்.
என்ன செய்ய வேண்டும்/ செய்யக்கூடாது?
வெயிலில் சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும்.
பாலியஸ்டர், நைலான் போன்ற உடைகளைத் தவிர்த்து, பருத்தியிலான தளர்வான உடைகளையே அணியவேண்டும். இறுக்கமாக உடை அணியக்கூடாது.
அடிக்கடி நீர் அருந்தவேண்டும்.
இளநீர், பழங்கள், பழச்சாறுகள் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
கூல் டிரிங்க்ஸ், ஐஸ் கிரீம் போன்ற குளிர்ச்சியான பானங்களைத் தவிர்க்க வேண்டும்.
தட்டம்மை, சின்னம்மை மற்றும் பொன்னுக்கு வீங்கி பாதிப்பு இருந்தால், உடனே அருகிலுள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கோ, அல்லது அரசு மருத்துவமனைக்கோ சென்று, சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.