இன்றைய காலகட்டத்தில் இணையம்/மொபைல் போன் பயன்பாடு என்பது எந்த அளவுக்கு தவிர்க்க முடியாததாகி விட்டதோ, அந்த அளவுக்கு அவற்றின் ஊடாக மோசடிகள் அரங்கேறுவதும் வழக்கமானதாகி விட்டது.
இது குறித்த விழிப்புணர்வு பிரசாரங்கள், எச்சரிக்கைகள் அரசு தரப்பிலும் காவல்துறை தரப்பிலும் அவ்வப்போது விடுக்கப்படுகின்ற போதிலும், மோசடியாளர்கள் விதவிதமாக யோசித்து, நினைத்தே பார்க்க முடியாத வகையிலான மோசடிகளையெல்லாம் அரங்கேற்றி வருவதும், இதில் பலர் சிக்கி ஏமாறுவதும் ஊடகங்களில் வெளியான பின்னர்தான் பொதுமக்களுக்கு அது குறித்து தெரியவருகிறது.
நம்மில் பலருக்கு அவர்களுடைய நெருங்கிய வட்டத்திலேயே இத்தகைய மோசடிகளில் சிக்கி ஏமாந்தவர்கள் குறித்து தெரியவந்திருக்கலாம் அல்லது அது போன்ற மோசடியாளர்களின் போன் அழைப்புகளை அவர்களே எதிர்கொண்டு, உஷாராகி மோசடியில் சிக்காமல் தப்பித்த அனுபவங்களும் இருந்திருக்கலாம்.
ரீல் போட்டி
இந்த நிலையில், ரீல்ஸ் வகை ( Reels) வீடியோக்களைப் பதிவிடும் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியரை ஊக்குவிக்கும் விதமாக, இணைய வழி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ‘ரீல்’ போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது தமிழ்நாடு காவல்துறை சைபர் குற்றப்பிரிவு.
போட்டித் தலைப்புகள் என்ன?
ஆன்லைன் கடன் செயலி மோசடி
ஆன்லைன் திருமண மோசடி
கூரியர் மோசடி
சமூக ஊடகங்களில் போலி சுயவிவரம்/ஆள்மாறாட்டம் மோசடி
ஆன்லைன் பகுதி நேர வேலை மோசடி
என 5 வகையான தலைப்புகளில், போட்டியாளர்கள் தங்களது படைப்பாற்றலை வெளிப்படுத்தலாம்
போட்டியில் எப்படி பங்கேற்பது?
பங்கேற்பாளர்கள் 04.03.2024 முதல் வரை 14.03.2024 வரை Google form மூலம் ஆன்லைனில் பதிவு செய்யலாம். அனுபவத்தின் அளவைப் பொருட்படுத்தாமல் காட்சிக்கதை சொல்லலில் ஆர்வமுள்ள அனைத்து நபர்களும் பதிவு செய்யலாம்.
ரீல் கால அளவு/ எப்படி அனுப்ப வேண்டும்?
பங்கேற்பாளர்கள், தங்களின் ‘ரீல்’கள் 30 வினாடிக்குள் நியமிக்கப்பட்ட கருப்பொருளுக்கு ஏற்றவாறு சமர்ப்பிக்க வேண்டும். ‘ரீல்’களை Google Driveல் பதிவேற்றம் செய்து அதற்கான Linkஐ 14.03.2024க்குள் Google form பகிர வேண்டும்.
பரிசு எவ்வளவு?
முதல் பரிசு: ரூ. 25,000, 2வது பரிசு: ரூ.20,000, 3வது பரிசு: ரூ.15,000, 18.03.2024 அன்று நடைபெறும் விழாவில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். போட்டி தொடர்பான பிரத்யேக தகவல்களுக்கு சமூக ஊடகங்களில் @tncybercrimeoff என்ற முகவரியில் பின் தொடரலாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ரீல்ஸ் படைப்பாளர்கள், தங்களது திறமை மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்துவதற்கான நல்ல வாய்ப்பு இது என்பதால், தவறாமல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துகிறோம்..!
ஆமா, சொல்ல மறந்துட்டோமே… இணைய வழி குற்றங்கள் தொடர்பாக நீங்களோ அல்லது உங்களது நட்பு/ உறவினர் வட்டத்தைச் சேர்ந்தவர்களோ புகாரளிக்க 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை பயன்படுத்தலாம்!