தமிழ்நாட்டில், கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கோடை வெயிலின் தாக்கம் மிக கடுமையாக காணப்பட்டது. இந்த நிலையில், இந்த மாதம் 5 ஆம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியதால், வெப்பம் மேலும் அதிகரிக்குமோ என மக்களிடையே அச்சம் நிலவியது. ஆனால், அந்த அச்சத்தைப் போக்கும் வகையில், நிலையில் தமிழகம்முழுவதும் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் தற்போது வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் வருகிற 22 ஆம் தேதி வரை கனமழை மற்றும் மிக கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டி உள்ள தெற்கு இலங்கை கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை
அதன் காரணமாக தமிழ்நாட்டில் பல இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை மற்றும் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. அதிக பட்சமாக 20 செ.மீ. வரை மழை பெய்யும். இதனால் பல மாவட்டங்களுக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு ‘அலர்ட்’ விடப்பட்டுள்ளது. மேலும் 21 செ.மீ.க்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையும் விடுக்கப்படும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன் தொடர்ச்சியாக 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்றும் நாளையும் இந்த 26 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மே 22 வரை கனமழை
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில், மழை பெய்து வரும் நிலையில், இது மே 22 ஆம் தேதி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், தென் மாவட்டங்களில் திங்கள்கிழமை வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது மற்றும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மன்னார் வளைகுடா, கொமோரின் பகுதி மற்றும் தென் தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக மே 22 வரை மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை பரவலாக பெய்யும் என்று அந்த மையம் மேலும் தெரிவித்துள்ளது.
அடுத்த இரண்டு நாட்களுக்கான வானிலை நிலவரம் வருமாறு:
நாளை சனிக்கிழமை தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும். சுமார் 20 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அன்று இந்த 4 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
நாளை மறு தினம் ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இதன் அடிப்படையில், தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், மழைக்கால முன்னெச்சரிக்கை எடுக்கும்படி ஆட்சியர்களை அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தென்காசி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பத்தூர், கோயம்புத்தூர், நீலகிரி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கரூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை, நாமக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர் ஆகிய 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தென்மேற்கு பருவமழை
இதனிடையே கேரளாவில், வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்திற்கு பின்னர் தொடங்கும் தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டு வருகிற மே 31 ஆம் தேதி முதலே தொடங்கும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கேரளாவில் பருவமழை தொடங்கும் போது, முதலில், குறிப்பாக தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் பகல் வெப்பநிலை குறையத் தொடங்கும் என்பதால், வெயிலின் தாக்கம் மேலும் நீடிக்காது என்றே தெரிகிறது.