Amazing Tamilnadu – Tamil News Updates

தமிழ்நாடு ஏன் பாதுகாப்பான மாநிலம்..?

நாட்டிலேயே மிகவும் பாதுகாப்பான மாநிலமாகவும், குற்றச் சம்பவங்கள் குறைவாகவும் உள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாகவும், பெண்களுக்கு எதிரான குற்ற விகிதங்களும் இந்திய அளவில் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் குறைவாக உள்ளதாகவும் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் ஐபிஎஸ் தெரிவித்துள்ள தகவல், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவுக்கு நிலை நாட்டப்படுகிறது என்பதற்கு முன்னதாரணமாக திகழ்கிறது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களும் குறைவு

ஒரு நாட்டில், மக்கள் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் வாழ்வதை உறுதி செய்வது அரசின் கடமைகளில் மிக முக்கியமான ஒன்று. அதில் தமிழ்நாடு மக்களின் நம்பிக்கைக்குரிய மாநிலமாக திகழ்கிறது என்பதையும், குற்றச் செயல்கள் குறைந்த மாநிலமாகவும் உள்ளது என்பதையும் டிஜிபி சங்கர் ஜிவால் ஐபிஎஸ் ஆங்கில ஏடு ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

தேசிய அளவில் ஒரு லட்சம் மக்கள்தொகையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சராசரியாக 64.5 சதவிகிதமாக உள்ளது. அதே சமயம், இது தமிழ்நாட்டில் தேசிய அளவிலான விகிதத்தைக் காட்டிலும் மிக குறைவாக 22.4 சதவிகிதம் என்ற அளவில் மட்டுமே உள்ளதாக தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (National Crime Records Bureau- NCRB) வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் சொல்கிறது. இதை தனது பேட்டியில் மேற்கோள் காட்டியுள்ள சங்கர் ஜிவால், தமிழ்நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னை எதுவும் இல்லை என்பதையே இந்த புள்ளி விவரங்கள் காட்டுவதாக தெரிவித்துள்ளார் .

தமிழ்நாடு முழுவதும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக பயணிக்கும் பெண்கள் 1091, 112, 044-23452365, 044-28447701 என்ற தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு, அவர்கள் இருக்கும் இடத்தை தெரிவித்தால், காவல் ரோந்து வாகனம் வந்து பெண்களை பாதுகாப்பாக அழைத்து செல்லும். இந்த திட்டத்தை தமிழ்நாடு காவல்துறை கடந்த ஜூன் 20 ஆம் தேதி தொடங்கியது. காவல்துறையின் இதுபோன்ற நடவடிக்கைகளும் தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவாக உள்ளதற்கு முக்கிய காரணம் எனலாம்.

அக்கறையும் அர்ப்பணிப்பும்

கடந்த 2021 ஆம் ஆண்டு புள்ளி விவரங்களை எடுத்துக்கொண்டால், தமிழ்நாட்டில் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 136.8 என்ற குற்ற விகிதம் பதிவாகி உள்ளது. இது தேசிய சராசரியான 221.2 ஐ விட கணிசமாகக் குறைவு ஆகும். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களது நல்வாழ்வை உறுதி செய்வதில் அரசும் காவல்துறையும் காட்டும் அக்கறையையும் அர்ப்பணிப்பையுமே இது வெளிப்படுத்துகிறது.

தமிழ்நாட்டின் இந்த குறைந்த குற்ற விகிதத்திற்குப் பின்னால் உள்ள முக்கிய காரணிகளில் ஒன்று அதன் வலிமையான காவல்துறை ஆகும். இந்தியாவிலேயே மிகவும் திறன்வாய்ந்த மற்றும் நன்கு பயிற்சி பெற்ற காவல் துறைகளில் ஒன்றாக தமிழ்நாடு காவல்துறை உள்ளது. மேலும் சமீபத்திய தொழில்நுட்ப கருவிகள், உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் அத்துறை நன்றாக நவீனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் காவல்துறை அதிகாரிகளும் தங்கள் கடமையில் மிகவும் அர்ப்பணிப்புடனும் உந்துதலுடனும் செயல்படுகின்றனர். இவையெல்லாம்தான் தமிழ்நாடு குற்றச்செயல்கள் குறைந்த அமைதிப்பூங்காவாக திகழ்வதற்கு முக்கிய காரணங்கள் ஆகும்.

சங்கர் ஜிவால்

கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருள் சப்ளை

நாடு முழுவதும் நடக்கும் குற்றச்செயல்களில் மிக முக்கிய பங்கு வகிப்பது என்றால் அது போதைப்பொருள் புழக்கம்தான். இதைக் கட்டுப்படுத்துவதில் முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் காவல்துறையின் ‘சப்ளை குறைப்பு மற்றும் தேவை குறைப்பு’ என்ற இருமுனை அணுகுமுறை நடவடிக்கை நல்ல பலனளித்துள்ளது. ‘சப்ளை குறைப்பு’ என்றால் போதைப்பொருட்கள், அதனை பயன்படுத்துவோருக்கு சென்று சேராமல் தடுப்பது.

அந்த வகையில் “ இதுவரை இல்லாத அளவுக்கு கஞ்சா, நைட்ராசெபம், டேப்பென்டடோல் போன்ற போதைப்பொருள்களை நாங்கள் கைப்பற்றியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ள சங்கர் ஜிவால், அதே நேரத்தில், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் போதைப்பொருளுக்கான தேவை குறைப்பை செயல்படுத்தும் காவல்துறையின் தனிப்பிரிவு மூலமும் போதைப்பொருள் புழக்கங்கள் கட்டுப்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், சட்டம்-ஒழுங்கை காப்பதில் முதலமைச்சரும் அவரின் கீழ் செயல்படும் காவல்துறையும் கொண்டுள்ள முனைப்பான அணுகுமுறையும் செயலாற்றலும் என்ன என்பது வெளிப்படுகிறது.

ஜனநாயக தமிழ்நாடு

சங்கர் ஜிவால் மேலும் கூறுகையில், “நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான போராட்டங்கள், பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை தமிழ்நாடு கையாளுகிறது. அந்த அளவுக்கு தமிழ்நாடு ஒரு ஜனநாயக இடமாக திகழ்கிறது என்பதை மதிப்பிட இதைவிட வேறு என்ன உதாரணங்கள் வேண்டும்? அதே சமயம் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் வகையிலோ அல்லது பொது ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலோ எந்த ஒரு பெரிய அசம்பாவிதமும் நடைபெற்றதில்லை.

சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னைகள் வரும்போதெல்லாம், நாங்கள், [காவல்துறை] தலைமையகத்தில் உடனடியாக அதில் கவனம் செலுத்துகிறோம். சில நேரங்களில், சில இடங்களில் திடீரென கொலைகள் அதிகரித்துவிட்டன அல்லது குற்றங்கள் அதிகரித்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உடனடியாக, இதுபோன்ற குற்றச்சாட்டுகளை விசாரித்து, அவை உண்மையல்ல என்பதைக் கண்டறிந்துள்ளோம். கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் குறைவான கொலைகள் நடந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. மேலும், இந்தக் கொலைகளும் முக்கியமாக சாதிக் காரணங்களினாலோ அல்லது ரவுடிகளினால் நடத்தப்பட்ட பழிவாங்கும் கொலைகளாலோ இல்லை” எனத் தெரிவித்தார்.

‘காவல்துறையில் அத்துமீறல்களுக்கு இடமில்லை’

காவல்துறையின் அத்துமீறலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு, “காவல்துறையின் தரப்பில் அத்துமீறல்களுக்கு இடமில்லை. காவல்துறையின் அத்துமீறல்கள் அரசுக்கும் காவல்துறைக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதால், இது விஷயத்தில் கவனத்துடன் செயல்படுமாறு எங்கள் துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தப்படுவதோடு, அது தொடர்பான கற்பித்தல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அதையும் மீறி ஏதாவது காவல்துறையின் அத்துமீறல்கள் குறித்து எங்களின் கவனத்திற்கு வரும்போது, உடனடியாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

பல சந்தர்ப்பங்களில், காவலர்கள் இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள் அல்லது சேவையிலிருந்து நீக்கப்படுகிறார்கள் அல்லது அவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. நாங்கள் இதை ஒருபோதும் ஊக்குவிக்க மாட்டோம்.

அதிர்ஷ்டவசமாக, கடந்த ஓராண்டில் ‘காவல் மரணம்’ ( custodial death ) எதுவும் இல்லை. இதற்கு முன்னர் மாநிலத்தில் ஆண்டுக்கு சராசரியாக ஐந்து அல்லது ஆறு காவல் மரணங்கள் ஏற்பட்டுள்ளது. போலீஸாரின் அத்துமீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் பதிவாகும் போதெல்லாம், சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் அல்லது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் மூலம் உரிய விசாரணை நடத்தப்படுகிறது” என்றார் சங்கர் ஜிவால்.

சைபர் குற்றங்கள்

சைபர் குற்றங்கள் குறித்து பேசிய டிஜிபி, “மாநில சைபர் கிரைம் பிரிவு கால் சென்டருக்கு தினமும் 1930 என்ற ஹெல்ப்லைன் எண்ணில் 800 முதல் 900 அழைப்புகள் வருகின்றன. அதாவது ஒரு மாதத்திற்கு சுமார் 30,000 அழைப்புகள்.இதற்கான கால் சென்டர் ஒரு கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாது தரப்படுத்தப்பட்ட சாப்ட்வேருடன் கூடிய மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (C-DAC) இன்னும் மூன்று மாதங்களில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.

இந்திய குற்றவியல் சட்டம் (IPC) மற்றும் உள்ளூர் சட்டங்களின் கீழ் பதிவாகும் வழக்குகளை விட சைபர் குற்றங்கள் 15-20 மடங்கு அதிகமாக உள்ளது. சைபர் குற்றங்களில் மிக முக்கியமான பகுதி, நிதி மோசடி நடந்தால், பண பரிமாற்றத்தை உடனடியாக முடக்குவது. குற்றம் நடந்த 48 மணி நேரத்திற்குள் புகார் தெரிவித்தால், வங்கிகளுடன் தொடர்புடைய ‘நோடல்’ அதிகாரிகள் பணத்தை எடுக்காதவாறு முடக்குவார்கள். அதை இங்கே மத்திய பிரிவினர் செய்கிறார்கள் ” என்று மேலும் தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழ்நாட்டில் குற்றச் செயல்கள் கணிசமாகக் குறைந்துள்ளன என்பதும், தமிழ்நாட்டு மக்கள் முன்னெப்போதையும் விட பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் உணர்வதும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் சட்டம் ஒழுங்கு கொள்கைகள் மாநிலத்தில் எந்த அளவுக்கு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கான நிரூபணமாக அமைந்துள்ளது என்றே சொல்லலாம்!

Exit mobile version