Amazing Tamilnadu – Tamil News Updates

தொழில் வளர்ச்சியில் தமிழகத்தின் அடுத்தகட்ட பாய்ச்சல்… இந்திய அளவில் முன்னணி மாநிலம்!

மிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து தொழில்துறை முன்னேற்றத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு முதலீட்டு மாநாடுகள், முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்கள் உள்ளிட்டவை காரணமாக தமிழகத்தில் தொழில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன.

அதிக தொழிற்சாலை

இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் மூலமாக உலகளாவிய வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகுக்கின்றன. மேலும், விண்வெளி மற்றும் பாதுகாப்பு,வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வழிமுறைகள், மின்னணு வடிவமைப்பு, மருத்துவ மின்னணு சாதனங்கள் மற்றும் மின்சாரப் பொருட்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதில் தமிழகம் அபரிதமான வளர்ச்சியை கண்டிருக்கிறது.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட தொழில் துறை ஆண்டறிக்கையின்படி, இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் தொழிற்சாலைகள் இருக்கின்றன. பணிபுரியும் தொழிலாளர்களும் இருக்கிறார்கள். வளர்ந்து வரும் புதிய துறைகளிலும் தமிழகம்தான் முன்னணியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

உணவு பதப்படுத்தும் தொழிலில் முன்னணி

இந்த நிலையில், தற்போது இந்திய அளவில் உணவு பதப்படுத்தும் தொழில் உட்பட பல துறைகளில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய உணவு பதப்படுத்தும் தொழில் துறை மற்றும் தென் மாநில தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு சார்பில், ‘உணவு பதப்படுத்தும் தொழிலுக்கான பாதை’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

அதில் பேசிய மத்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில் நுறை செயலர் அனிதா பிரவீன், “மத்திய அரசு, உணவு பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட உணவு சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க, பிரதமர் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப் படுத்தும் திட்டத்தை செயல்படுத்துகிறது. அதில் மானிய உதவிகள் வழங்கப்படுகின்றன.

அதிக வேலைவாய்ப்புகள்

உணவு பதப்படுத்தும் தொழிலில் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது. இந்த துறை மட்டுமின்றி, பல்வேறு துறைகளிலும் தமிழகம் முன்னணியில் உள்ளது. நகரமயமாக்கல், தமிழகத்தில் அதிகம் உள்ளது. நாட்டில், ஜவுளித் தொழிலுக்கு அடுத்து, அதிக வேலைவாய்ப்புகளை உணவு பதப்படுத்தும் தொழில் உருவாக்குகிறது.

இந்த தொழிலில் சிறு, குறு நடுத்தரம் என, மூன்று பிரிவு தொழில் நிறுவனங்களும் ஊக்குவிக்கப்படுகின்றன. உலக உணவு தொழிலின் மையமாக இந்தியாவை உருவாக்க மத்திய அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது ” என்றார்.

உணவு பதப்படுத்தும் தொழில் உட்பட பல தொழில் துறைகளில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்வதால், தமிழகத்தில் வேலைவாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version