தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றபின், விளையாட்டுத் துறையின் முக்கியத்துவத்தினை உணர்ந்து, கடந்த மூன்று ஆண்டுகளில் இத்துறைக்கு 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கி உத்தரவிட்டுள்ளார். இதன் பயனாக, சென்னையில் உலகத் தரத்திற்கு இணையான நேரு விளையாட்டரங்கம், நேரு உள் விளையாட்டரங்கம், மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கம், டென்னிஸ் விளையாட்டு அரங்கம், நீச்சல் குளங்கள் ஆகியவற்றில் நவீன வசதிகளும் புனரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஏறத்தாழ 40 ஆயிரம் பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையிலும், சர்வதேச அளவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தக்கூடிய வகையிலும் சென்னையில் அமையப் பெற்றுள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் மற்றும் 9 ஆயிரம் பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையிலான நேரு உள் விளையாட்டரங்கம் ஆகியவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளோடு புதிய செயற்கை இழை தடகளப் பாதை, எல்.ஈ.டி மின்னொளி வசதிகள் நிறுவுதல் மற்றும் புனரமைப்புப் பணிகள் அனைத்தும் ரூபாய் 60 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நவீன விளையாட்டு அரங்கம் மற்றும் மாவட்ட விளையாட்டு அரங்கங்கள் அனைத்திலும் 30 கோடி ரூபாய் செலவில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆர்வம் காட்டும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அந்த வகையில், இத்துறையின் பெயருக்கேற்ப, மிகவும் குறைந்த வயதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் புதிய அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினின் அர்ப்பணிப்பு உணர்வுகள், தொய்வில்லாத் தொடர் பணிகள் காரணமாக, விளையாட்டுத் துறையில் வியக்கத்தகுந்த முன்னேற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. அவரால் சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் பங்கேற்கும் தமிழக வீரர்களின் பட்டியல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன் மூலம் தமிழக வீரர்கள் பதக்கங்களை வாரிக் குவித்துத் தமிழ்நாட்டுக்குப் பெருமைகளைத் தேடித் தந்துள்ளார்.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி 2023
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்ட முயற்சியின் பயனாக, 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி-2023 சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் சிறப்புடன் நடத்தப்பட்டது. இப்போட்டியில் 30 தங்கம், 21 வெள்ளி, 30 வெண்கலப் பதக்கங்களை வென்று தமிழ்நாடு ஒட்டுமொத்த பதக்கப்பட்டியலில் 2 ஆம் இடத்தைப் பிடித்துச் சாதனை படைத்தது.
அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் விளையாட்டரங்கங்கள்
தமிழ்நாட்டிலுள்ள அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 3 கோடி ரூபாய்ச் செலவில் தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, கபடி போன்ற பிரபலமான 5 முக்கிய விளையாட்டுகளுக்கான மைதான வசதிகளுடன் கூடிய முதலமைச்சரின் சிறு விளையாட்டரங்கங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் உலகத் தரத்திலான விளையாட்டு நகரம்
தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறையினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கின்ற வகையில், சென்னையில் உலகத்தரத்திலான விளையாட்டு நகரம் ஒன்றை அமைத்திடத் திட்டமிடப்பட்டு, அதற்குரிய பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டுப் பயிற்சியாளர்கள் நியமனம்
தமிழ்நாட்டில் பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளின் பயிற்சித் தரத்தை உயர்த்திடும் வகையில், குறிப்பாக தடகளம், நீச்சல், டென்னிஸ், ஹாக்கி, ஸ்குவாஷ் போன்ற விளையாட்டுகளில் சிறந்த பயிற்சிகள் அளிப்பதற்காக 81 வெளிநாட்டுப் பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விளையாட்டு வீரர்களுக்கு ரூ. 87 கோடி ஊக்கத்தொகை
சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள 2,738 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு, 87 கோடியே 61 இலட்சம் ரூபாய் உயரிய ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் 44-வது செஸ் ஒலிம்பியாட்
தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய திட்டமிடல் காரணமாகவும், இந்திய வரலாற்றில் முதன்முறையாகவும் தமிழ்நாடு அரசும் இந்திய சதுரங்கக் கூட்டமைப்பும் இணைந்து ஏறத்தாழ 114 கோடி ரூபாய்ச் செலவில், உலகப் புகழ் பெற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியினை வரலாற்று புகழ்பெற்ற மாமல்லபுரத்தில் விளையாட்டு நாடுகள் எல்லாம் வியக்கும் வண்ணம் ஒரு பண்பாட்டுத் திருவிழாவாக வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
முதலமைச்சரின், இத்தகைய மகத்தான விளையாட்டு மேம்பாட்டுத் திட்டங்களினால் தமிழ்நாடு இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக உருவாகி வருகிறது எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.