தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் வருகிற மார்ச் 1 ஆம் தேதி முதலே மாணவர் சேர்க்கையை தொடங்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ள நிலையில், இது தொடர்பாக ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா தாக்குதலுக்குப் பின்னர் ஏற்பட்ட வேலை இழப்பு மற்றும் பொருளாதார சரிவைத் தொடர்ந்து, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பது அதிகரித்தது. இதனையடுத்து, அரசுப் பள்ளிகளைத் தேடி மாணவர்களும் பெற்றோர்களும் வருவதை மேலும் ஊக்குவிக்கும் விதமான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை, உயர்கல்வியில் இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்பில் முன்னுரிமை போன்ற தமிழக அரசின் திட்டங்கள் காரணமாக மாணவர் சேர்க்கை மேலும் அதிகரிக்கத் தொடங்கியது.
மேலும், அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்க உதவும் ‘வானவில் மன்றம்’ திட்டம், அரசுப் பள்ளியில் பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் ‘புதுமைப்பெண் திட்டம்’, முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் உள்ளிட்ட பல்வேறு நல்ல திட்டங்களால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளில் 11 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மேலும், மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் மற்றும் நான் முதல்வன் திட்டங்களுடன் தற்காப்பு கலைப் பயிற்சி, கல்வி சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அரசுப் பள்ளியில் பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு, பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் மேலும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இதனால், வரவிருக்கும் 2024-25 ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, மாணவர்களை அரசு பள்ளிகளை நோக்கி ஈர்க்கும் வகையில், வரும் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை மார்ச் 1 ஆம் தேதி முதல் தொடங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை, அனைத்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், மேற்கூறிய திட்டங்களையெல்லாம் பொதுமக்கள் அனைவரும் அறியும் வகையில் பேனர்கள், துண்டு பிரசுரங்கள் மூலம் பெற்றோர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் தலைமையில் கூட்டங்கள் நடத்தி, அதில் உள்ளூர் பிரமுகர்களை பங்கு பெறச்செய்து, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், அங்கன் வாடிகளில் படிக்கும் குழந்தைகளில் 5 வயது உடையவர்களை கண்டறிந்து, அவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க வீடு தோறும் நேரடியாக சென்று சேர்க்கையை உறுதி செய்து, வருகிற கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அலுவலர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் முழு முயற்சியோடு பணிய ற்றிட வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.