தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகரித்து வரும் நிலையில், இதை மேலும் அதிகரிக்க பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
ஸ்மார்ட் வகுப்பறைகள், உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைத்தல், அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும் அகன்ற அலைவரிசை இணைய இணைப்பு, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அவர்களது கற்பித்தல் திறனை மேம்படுத்த Tablet-கள் வழங்கப்பட உள்ளன.
இன்னொரு பக்கம் அரசுப் பள்ளிகளில் சேருவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பொதுமக்கள் அனைவரும் அறியும் வகையில் பேனர்கள், துண்டு பிரசுரங்கள் மூலம் பெற்றோர்களுக்குத் தெரியப்படுத்த விழிப்புணர்வு பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளிகளைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளைக் குறிவைத்து, 5 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளை மையமாகக் கொண்டு பிரச்சாரம் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் தலைமையில் கூட்டங்கள் நடத்தி, அதில் உள்ளூர் பிரமுகர்களை பங்கு பெறச்செய்து, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், அங்கன் வாடிகளில் படிக்கும் குழந்தைகளில் 5 வயது உடையவர்களை கண்டறிந்து, அவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க வீடு தோறும் நேரடியாக சென்று சேர்க்கையை உறுதி செய்து, வருகிற கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அலுவலர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் முழு முயற்சியோடு பணியாற்றிட வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை கேட்டுக்கொண்டது.
அத்துடன் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (SMCs) பெற்றோர்களைச் சந்தித்து, அரசுப் பள்ளிகளில் உள்ள வசதிகள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும் உதவித்தொகை, உயர்கல்வியில் இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்பில் முன்னுரிமை போன்ற விஷயங்களை எடுத்துரைத்து வருகின்றனர். இந்த அணுகுமுறையால், அரசுப் பள்ளிகள் மீது பெற்றோர்களுக்கான நம்பிக்கை அதிகரிப்பதோடு, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் கல்வி பயில அரசுப் பள்ளிகளைத் தேர்ந்தெடுக்க ஊக்குவிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் வரவிருக்கும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1 ஆம் தேதி முதல் தொடங்கியது. இதற்காக பள்ளிக் கல்வி இயக்ககம் தொடங்கியுள்ள மாணவர் சேர்க்கை இயக்கத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சேலத்தில் தொடங்கி வைத்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் இதுவரை அரசுப் பள்ளிகளில் 3.31 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இதில் சேலம் மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 19,242 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலத்துக்கு அடுத்தபடியாக மதுரையில் அதிகபட்சமாக 18,127 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அடுத்ததாக திண்டுக்கல்லில் 17,036, திருவள்ளூர் மாவட்டத்தில்15,207, திருவண்ணாமலையில் 13,679, திருப்பூரில் 13,204, சென்னையில் 13,135 மாணவர்களும் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கோடை விடுமுறை தொடங்கிவிட்டால், பிரசாரங்கள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டு மாணவர் சேர்க்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.