Amazing Tamilnadu – Tamil News Updates

அரசுக் கல்லூரிகளில் அறிமுகமாகும் ‘ஹேக்கத்தான்’ கற்றல் முறை!

மிழ்நாடு முழுவதும் உள்ள 100 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு ஹேக்கத்தான் (Hackathon)அடிப்படையிலான கற்றல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மாணவர்களிடையே திறன், ஆக்கப்பூர்வமான சிந்தனை மற்றும் குழுப்பணி ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, தமிழ்நாடு ஐசிடி அகாடமியால் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

ஐசிடி (ICT) அகாடமி என்பது, மாநில அரசுகள் மற்றும் தொழில்துறைகளுடன் இணைந்து ஒன்றிய அரசு செயல்படுத்தும் ஒரு கூட்டு முயற்சி திட்டமாகும்.
தொழில்துறையின் திறன் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள 2 ஆவது மற்றும் 3 ஆவது அடுக்கு நகரங்களில் அதிக வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும் தொடங்கப்பட்டதாகும்.

‘ஹேக்கத்தான்’ கற்றல் என்றால் என்ன?

இந்த நிலையில், ‘ஹேக்கத்தான்’ அடிப்படையிலான கற்றல் என்பது, மாணவர்களுக்கு அவர்களின் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களின் அடிப்படையில் பல்வேறு சவால்கள் கொடுக்கப்பட்டு, அதற்கான தீர்வுகளைக் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படும். “உதாரணமாக, வரலாற்றுப் பாடம் எடுத்து படிக்கும் மாணவர்கள், காப்பக தொகுப்பில் இடம்பெற்றுள்ளவற்றை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கும்படி கேட்கப்படுவார்கள். மாணவர்களை எப்படி வழிநடத்துவது என்பது குறித்து 500 ஆசிரியர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படும்.

மாணவர்கள் அந்தந்த தொழில்களில் உள்ள நிபுணர்களுடன் உரையாடும் வாய்ப்பைப் பெறுவார்கள், மேலும் பாடத்தை நன்கு புரிந்துகொள்வதற்கும் தீர்வுகள் குறித்து பணியாற்றுவதற்கும் வாய்ப்பு கிடைக்கும்” என தெரிவித்த ஐசிடி அகாடமியின் அதிகாரி ஒருவர், இந்த கல்வியாண்டிலேயே இந்த திட்டம் முதன்முறையாக செயல்படுத்தப்பட இருப்பதாகவும் கூறினார்.

மாநில திட்டக் குழுவின் கீழ், தமிழ்நாடு புதுமை முயற்சியின் (Tamil Nadu Innovation Initiative – TANII) கீழ் இது செயல்படுத்தப்படுகிறது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப திறன்களை அனுபவமிக்க புராஜக்ட் அடிப்படையிலான கற்றலை மேம்படுத்துவதை உறுதி செய்யவே இந்த திட்டமிடல் செய்யப்பட்டுள்ளது.

வழிகாட்டி நெறிப்படுத்தும் AI

இந்த நோக்கத்திற்காக கற்றல் மேலாண்மை அமைப்பு, மதிப்பீடுகள் மற்றும் தரப்படுத்தல் வசதிகள் உள்ளிட்ட டிஜிட்டல் தளத்தை ஐசிடி அகாடமி உருவாக்கும். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள பல்வேறு பிரிவுகளுக்கான கற்றல் உள்ளடக்கம் இதில் இருக்கும். இது, தற்போதைய தொழில் தரநிலைகள் மற்றும் சவால்களை பிரதிபலிக்கும் சிக்கல்களைக் கொண்ட தகவல் களஞ்சியத்தையும் கொண்டிருக்கும். அத்துடன், இது மாணவர்களுக்கான புராஜக்ட் உருவாக்கத்தில் அவர்களுக்கு உதவுவதற்கான AI-யால் இயக்கப்படும் வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறைகளுடன் கூடிய உரையாடல் இணைப்பையும் கொண்டிருக்கும்.

“தொழில் வல்லுநர்கள், கல்வி வல்லுநர்கள் மற்றும் வெற்றிகரமான தொழில்முனைவோரின் நேரடி விரிவுரைகளை ஒழுங்கமைக்க இந்த தளம் பயன்படுத்தப்படும். மேலும், மாணவர்கள் ஒன்றாக இணைந்து புராஜக்ட் வேலை செய்வதற்கும் அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கும் உதவும் ஆன்லைன் குழு திட்டங்களையும் இது எளிதாக்கும்” என்று அந்த அதிகாரி கூறினார்.

இந்த நிலையில், இது குறித்து பேசும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்கள், “பல கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு சரியான புராஜக்ட் அடிப்படையிலான கற்றல் வாய்ப்பு இல்லை. கல்லூரிகள், பெரும்பாலும் தங்கள் மாணவர்களை அனுபவ பயிற்சிக்காக வெளி நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப்பிற்காக அனுப்புகின்றன, மேலும், அவர்களின் வேலையை மதிப்பிடுவதற்கு சரியான வழிமுறை இல்லை.

இம்முயற்சியானது மாணவர்களுக்கு ஒரு பரந்த வலையமைப்பை உருவாக்க உதவுவதோடு, அவர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் உதவும்” என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Exit mobile version