தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதில், பள்ளிக் கல்வித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று, 25 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அவரது அறிவிப்புகளில் இடம்பெற்ற முக்கியமான அம்சங்கள் இங்கே…
ஆளுமைத் திறன் மேம்பாட்டுச் செயல்பாடுகள்
அனைத்துப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே தலைமைப் பண்பை வளர்க்கும் வகையில், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் பெயர்களில் மாணவர் குழுக்கள் அமைத்து, மாணவத் தலைவர் மற்றும் மாணவ அமைச்சர்கள் தெரிவு செய்யப்படுவர். இதன்மூலம் மாணவர்களிடையே அரசியல் அறிவு சார்ந்த அனுபவங்கள் மற்றும் ஆளுமைத் திறன் மேம்பட, மாதிரி சட்டமன்றம் மற்றும் மாதிரி நாடாளுமன்றம் நடத்தப்படும். இதற்காக தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படும். இத்திட்டம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் திறன்
வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாணவர்களைத் தயார் செய்வதற்காகவும் அவர்களது கற்றல் அடைவினைக் கணினி வழி மதிப்பிடுவதற்காகவும் உயர்தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வருகின்றன. மேலும், மாணவர்களுக்குக் கணினிசார் அடிப்படை அறிவியலையும், செயற்கை நுண்ணறிவுத் திறன் மற்றும் அதனைப் பயன்படுத்தும் நுட்ப அறிவியலையும் கற்பிக்கும் வண்ணம் பாடத்திட்டம் தயார் செய்து ஆசிரியர்களுக்குப் பயிற்சியும், மாணவர்களுக்கு மென்பொருள் மற்றும் செயற்கை (Artificial Intelligence) சார்ந்த அடிப்படைத் திறன்களும் கற்றுக் கொடுக்கப்படும்.
எந்திரனியல் ஆய்வகங்கள் (Robotics Labs)
9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் பிரச்னைகளைத் தீர்க்கும் திறனை வளர்க்கவும், குழுவாக இணைந்து செயல்படக்கூடிய திறனைக் கற்றுக் கொள்ளவும், படைப்பாற்றலை வளர்க்கவும் மாவட்டத்திற்கு ஒரு பள்ளி என்ற அளவில், 38 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் எந்திரனியல் ஆய்வகம் ரூ.15.43 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
அரசு செலவில் உயர் கல்வி
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று, நம் நாட்டில் செயல்பட்டு வரும் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அனைத்து மாணவர்களின் செலவினை அரசே ஏற்றுக்கொள்ளும். கல்விச் மேலும், அயல்நாட்டு உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி உதவித் தொகை பெற்றுச் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் அக்கல்வி நிறுவனத்தில் சேர்வதற்காகச் செல்லும் முதல் பயணத் தொகை முழுவதையும் இவ்வரசே ஏற்றுக்கொள்ளும். இதற்கென ஆண்டுதோறும் ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள்
அரசுப் பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இவ்வாண்டு அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ரூ.42 கோடி செலவில் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்படும். 2024-2025 ஆம் கல்வியாண்டில், 1000 மாணவர்களுக்கு மேல் பயின்றுவரும் அரசுப் பள்ளிகளில் உள்ள உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.58 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும்.
பல்வகைத் திறன் பூங்கா (Multi-Sensory Park)
மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் புலன் உணர்வுத்திறன், அறிவுத்திறன், பெருந்தசை இயக்கத்திறன் மற்றும் நுண்தசை இயக்கத்திறன் ஆகியவை மேம்படுவதற்காக, அவர்களின் பல்வகைப் புலன்கள் தூண்டப்பட்டு விளையாட்டு வாயிலாகக் கற்றல் அனுபவங்களைப் பெறத்தக்க வகையில் ஒரு மாவட்டத்திற்கு ஒரு “பல்வகைத் திறன் பூங்கா” என 38 மாவட்டங்களில் ரூ.3.80 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
மேலும், மாவட்ட ஆட்சியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தை தகைசால் நிறுவனமாக ரூ.41.63 கோடியில் தரம் உயர்த்தப்படும். அண்ணா நூற்றாண்டு நூகலத்தில் ரூ.80.24 லட்சம் மதிப்பில் சிறார் அறிவியல் பூங்கா நிறுவப்படும். திசைதோறும் திராவிடம் என்ற திட்டம் ரூ.2 கோடியில் பிற இந்திய மொழிகள் மற்றும் வெளிநாட்டு மொழிகளுக்கும் விரிவாக்கப்படும்.
தமிழ்நாட்டின் பண்பாட்டு புகைப்பட ஓவிய நூல்கள் ரூ.50 லட்சம் மதிப்பில் மிளிரும் தமிழ்நாடு என்ற பெயரில் வெளியிடப்படும். ரூ.20 லட்சம் மதிப்பில் பாடநூல் கழக நூல்களின் விற்பனையை இணைய வழியில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் விரிவுபடுத்தப்படும் என்பது உள்ளிட்ட பல அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.