நீட் தேர்வு முறைகேட்டைத் தொடர்ந்து, நாடு முழுவதும் அத்தேர்வுக்கு எதிரான குரல்கள் எழுந்துள்ளதோடு போராட்டங்களும் வெடித்துள்ளன. டெல்லியில் நேற்று ‘நீட்’ தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை அலுவலகத்துக்கு எதிரே காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தால் பரபரப்பு நிலவியது.
இந்த நிலையில் நாடாளுமன்றத்திலும் இன்று நீட் தேர்வு முறைகேடு தொடர்பான பிரச்னை எழுப்பப்பட்டது. இது குறித்து விவாதிக்க வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்திய நிலையில், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதைக் கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த அளவுக்கு நீட் விவகாரம் தற்போது நாடு முழுவதும் கவனம் ஈர்த்துள்ள நிலையில், தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 13.09.2021 அன்றே நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு ஆளுநரால் அனுப்பப்பட்டது. இதுகுறித்து மத்திய அரசால் கோரப்பட்ட அனைத்து விளக்கங்களுக்கும் தமிழ்நாடு அரசு உடனுக்குடன் உரிய பதில்களை வழங்கிய நிலையிலும், அதற்கு ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது.
சட்டமன்றத்தில் மீண்டும் தீர்மானம்
இந்த நிலையில் தான் இதனை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில், தமிழக சட்டமன்றத்தில் இன்று ‘நீட்’ தேர்வு முறைகேடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்த நிலையில், உறுப்பினர்களின் கருத்துகளுக்குப் பின்னர் அந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அந்த தீர்மானத்தில் “இந்தச் சட்டமன்றப் பேரவை ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு சட்டமுன்வடிவிற்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திட வேண்டுமென்றும், தொடர்ந்து பல முறைகேடுகளுக்கு வழிவகுத்து வரும் இந்தத் தேர்வு முறையை பல்வேறு மாநிலங்களும் தற்போது எதிர்த்து வரும் நிலையில், தேசிய அளவில் நீட் தேர்வு முறை கைவிடப்படும் வகையில் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் தேவைப்படும் திருத்தங்களை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது ” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
‘தமிழகத்தின் குரல் இன்றைய இந்தியாவின் குரல்’
முன்னதாக இந்த தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வின் போது அரங்கேறியுள்ள சம்பவங்கள், போட்டித் தேர்வுகளில் மீது நமது மாணவர்கள் வைத்துள்ள நம்பிக்கையையே நிலைகுலையச் செய்துள்ளன” எனக் கூறி அதனை பட்டியலிட்டார்.
“இதுவரை இருந்திராத அளவிற்கு, அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது.
தேர்வுகள் காலதாமதமாகத் தொடங்கியதாகக் காரணம் காட்டி, விதிகளில் இல்லாத முறையில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியதால், இந்தக் கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டு, இவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட்டது.
பல்வேறு தேர்வு மையங்களில் தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் வெளியானதாக தகவல்கள்.
இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்து, தவறே நடைபெறவில்லை என்று கூறிய ஒன்றிய அரசு, பின்பு உச்சநீதிமன்றத்தில் குட்டு வாங்கிய பின்னரே, இந்தத் தேர்வை நடத்தும் NTA அமைப்பின் தலைவரை மாற்றியுள்ளது. தேர்வு முறைகேடுகள் குறித்து எழுப்பப்படுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட்டுள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
‘மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை மாநில அரசுகளே முடிவெடுத்த பழைய நிலையை மீண்டும் கொண்டு வர வேண்டும்’ என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமருக்கே கடிதம் எழுதியுள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் எனப் பலரும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்திக் கடிதம் எழுதியிருக்கிறார்
பல ஆண்டு காலமாக நீட் தேர்வுக்கு எதிராக, தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் தனியே போர் தொடுத்து வந்த நிலையில், நீட் தேர்வின் உண்மையான அவலநிலையை உணர்ந்து, பல்வேறு மாநிலங்களிலும் இதற்கு எதிரான எதிர்ப்பு கிளம்பி வருகின்றது. தமிழ்நாட்டின் குரல் இன்று இந்தியாவின் குரலாக நாடு முழுவதும் எதிரொலிப்பதை அண்மை நிகழ்வுகள் காட்டுகின்றன” என்றார்.