தமிழகத்தை 2030 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அந்த இலக்கை நிறைவேற்றுவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாகத்தான், கடந்த ஜனவரி மாதம் 7,8 ஆகிய தேதிகளில், சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது.
சென்னை முதலீட்டாளர்கள் மாநாடு
இந்த மாநாட்டில் சுமார் ரூ. 6.64 லட்சம் கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. பல நாடுகளை சேர்ந்த நிறுவனங்களும் தமிழகத்தில் முதலீட்டு செய்ய விருப்பம் தெரிவித்தன. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில், சிறிய மற்றும் பெரிய அளவிலான 600 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த முதலீடுகள், தமிழகத்திற்கு வருவதன் மூலமாக 26,90,657 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், இதில் 14,54,712 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பும் கிடைக்கவும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பலனளிக்கத் தொடங்கிய ஒப்பந்தங்கள்
குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவான MSME துறை சார்ந்த 5,068 நிறுவனங்கள் மூலம், ரூ. 63,573.11 கோடி முதலீடு மற்றும் 2.5 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த நிலையில், இந்த ஒப்பந்தத்தை முதலீடாக மாற்றுவதற்கான பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் தமிழக தொழில்துறை அமைச்சரும் அந்த பணிகளை மிக சிறப்பாக மேற்கொண்டு வந்தனர்.
உற்பத்தி தொடக்கம்/ 46,000 பேருக்கு வேலை
இவற்றின் பலனாக, சென்னை உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திட்ட MSME நிறுவனங்களில் 1,277 நிறுவனங்கள், கடந்த ஐந்து மாதங்களில் 13,003.16 கோடி ரூபாய் முதலீடு செய்து உற்பத்தியைத் தொடங்கி உள்ளன. இதன் மூலம் சுமார் 46,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த தகவலை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சட்டசபையில் நடைபெற்ற தனது துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது வெளியிட்டார்.
எதிர்கால நடவடிக்கைகள்/திட்டங்கள்
மேலும், தொழில்துறை சார்ந்த குறிப்பாக MSME நிறுவனங்களுக்கான பல்வேறு ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களையும் அவர் வெளியிட்டார்.
உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ல் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செயலாக்குவதற்கு உயர்நிலை அலுவலர்களை கொண்ட குழு அமைக்கப்படும். MSME நிறுவனங்களுக்காக, அரசு தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இதுவரை ரூ.330 கோடியே 81 லட்சம் மானியமாக வழங்கப்பட்டது. நடப்பாண்டு ரூ. 351 கோடியே 77 லட்சம் முதலமைச்சர் ஒதுக்கி உள்ளார்.
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க வாங்குபவர் விற்பனையாளர் சந்திப்புகள் 6 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும். இத்திட்டம் ஆண்டுக்கு ரூ.5 கோடியில் செயல்படுத்தப்படும். மாற்றுத்திறன் படைத்தவர்களை பணியில் அமர்த்தும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஊதியப்பட்டியல் மானியம் வழங்கப்படும். குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்கள் தங்களது சர்வதேச தரச்சான்றிதழ்களை புதுப்பிக்க மானியம் வழங்கப்படும்.
நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் 16 தொழிற்கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு பேட்டரி மூலம் இயக்கப்படும் 1000 எண்ணிக்கையிலான தேயிலை அறுவடை இயந்திரங்கள் மொத்தமாக ரூ.1.60 கோடிமதிப்பீட்டில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் (SADP) கீழ் கொள்முதல் செய்யப்படும். MSME நிறுவனங்கள் மற்றும் அரசு பாலிடெக்னிக்குகள் / ஐடிஐ போன்ற கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான தொடர்பினை மேம்படுத்த தொடர் பரிமாற்றத் திட்டம் உருவாக்கப்படும்.
புதிய தொழிற்பேட்டைகள்
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம், திருமுடிவாக்கத்தில் 2.47 ஏக்கரில் சுமார் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கக்கூடிய வகையில் ரூ.2.50 கோடி திட்டமதிப்பீட்டில் புதிய குறுந்தொழிற்பேட்டை தமிழ்நாடு சிட்கோ மூலம் அமைக்கப்படும். அதேபோன்று திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், கொத்தயத்தில் 53.50 ஏக்கரில் சுமார் 2000 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கக்கூடிய வகையில் ரூ.16.58 கோடி திட்டமதிப்பீட்டில் புதிய தொழிற்பேட்டைசிட்கோ மூலம் அமைக்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் வட்டம், சங்கராப்பேரியில் 23 ஏக்கரில் சுமார் 1000 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கக்கூடிய வகையில் ரூ.6.51 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய தொழிற்பேட்டை சிட்கோ மூலம் அமைக்கப்படும். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், மாங்குளத்தில் 10 ஏக்கரில் சுமார் 300 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கக்கூடிய வகையில் ரூ.2.70 கோடி திட்டமதிப்பீட்டில் புதிய தொழிற்பேட்டை சிட்கோ மூலம் அமைக்கப்படும்.
கோயம்புத்தூர் மற்றும் திருச்சி நகரங்களில் வட்டார புத்தொழில் மையங்கள் உருவாக்கப்படும். புத்தொழில் நிறுவனங்களின் தயாரிப்பு களுக்கான “தொழில் நயம்” என்ற நவீன வடிவமைப்பு உதவி மையம் StartupTN சென்னை மெட்ரோ மையத்தில் நிறுவப்படும் என்பது உள்ளிட்ட மேலும் பல அறிவிப்புகளையும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டார்.