புதுப்பொலிவு பெறும் அரசு மகளிர் விடுதிகள்… ரூ.1 கோடி திட்டத்தில் புதிய வசதிகள்!
தமிழகத்தின் முக்கிய நகரங்களில், குறைந்த கட்டணத்தில் ‘தோழி விடுதிகள்’ என்ற பெயரில், அடுத்தடுத்து தமிழக அரசால் மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டு வருகின்றன.
நகரங்களில் பணியாற்றும் மகளிரின் வசதி மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ‘தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்’ என்கிற அமைப்பைத் தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம் சார்பில் சென்னை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், பெரம்பலூர், விழுப்புரம், வேலூர், தஞ்சாவூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்கெனவே மகளிர் தங்கும் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.
பல்வேறு அடிப்படைத் தேவைகளோடு, பாதுகாப்பு அம்சங்களும் நிறைந்த இந்த விடுதிகளில், மாத அடிப்படையிலும் நாள் கணக்கிலும் பெண்கள் தங்கலாம். குடும்பத்தை விட்டு வெளியூரில் பணிபுரியும் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பெறும் மகளிருக்கு, உணவுடன் பாதுகாப்பான தங்கும் வசதி அமைத்துக் கொடுப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
6 விடுதிகள் புதுப்பிப்பு
இந்த நிலையில், சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறையின் கீழ் இயங்கும் மதுரை, திருப்பூர், தூத்துக்குடி, திருவள்ளூர், புதுக்கோட்டை, கோவை ஆகிய 6 விடுதிகளை, தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் கழகம் கையகப்படுத்தி, அவற்றை புதுப்பொலிவுடன் புதுப்பிக்க உள்ளது.
இத்திட்டத்துக்காக ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தங்கும் விடுதிகள் வைஃபை, பயோமெட்ரிக் அமைப்பு போன்ற வசதிகளுடன் புதுப்பிக்கப்பட உள்ளது. மேலும், விடுதியில் தங்கும் பெண்களின் நலன் கருதி, போதிய பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் விடுதி மேலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த ஆறு விடுதிகளும் ‘தோழி விடுதி’களாக மீண்டும் திறக்கப்பட இருப்பதாக சமூக நலத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவைகள் அதிகரிப்பு
தமிழக அரசு தரப்பில், 1980 ஆம் ஆண்டு 21 பணிபுரியும் மகளிர் விடுதிகள் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இவற்றில், 10 விடுதிகள் ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டு, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விழுப்புரம், பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூரில் தோழி விடுதிகளாக மாற்றப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள ‘தோழி விடுதி’களில் உள்ள 1,140 படுக்கைகளில் 950 படுக்கைகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், நாளுக்கு நாள் இதன் தேவை மேலும் அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு சுமார் 5 முதல் 6 பேராவது விடுதியில் இடம் காலியாக உள்ளதா எனக் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே இந்த விடுதியில் ரூ. 6,500 ஆக இருந்த மாத வாடகை , ஜூலை 1 முதல் 6,850 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பராமரிப்பு செலவு அதிகரித்ததே இதற்கு காரணம் என விடுதி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அதே சமயம், தனியார் விடுதிகளுடன் ஒப்பிடுகையில் இது குறைவுதான் என்பதால், பெண்கள் தைரியமாக கிராமங்களை விட்டு நகரங்களுக்கு வந்து தங்கி வேலை செய்ய ஏதுவாக, இந்த ‘தோழி விடுதிகள்’ அமைந்துள்ளன என்றே கூறலாம்.