சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘தமிழகத்தில் இருந்து பெற்ற வரியைவிட கூடுதலாகவே நிதி கொடுத்துள்ளோம்’ எனக் கூறியிருந்தார். ஆனால், மறைமுக வரிவருவாய் குறித்து எந்த தரவுகளையும் தராத ஒன்றிய அரசு, தமிழகத்தில் இருந்து வரியாக பெறும் ஒரு ரூபாய்க்கு மீண்டும் தருவது 29 பைசாதான் என்றும், மற்ற மாநிலங்களுக்குத் தருவது போல், சென்னை மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்கும் பணம் ஒதுக்கவில்லை என்றும் அடுக்கடுக்கான புள்ளி விவரங்களுடன் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.
நிர்மலா சீதாராமன் சொன்னது என்ன?
சென்னை, மேற்கு மாம்பலத்தில் நேற்று புத்தக வெளியீட்டு விழா ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “தமிழகத்துக்கு மத்திய அரசு ஒன்றுமே கொடுப்பதில்லை என்று சொல்கிறார்கள். தமிழகத்துக்கு மத்திய அரசு நிறைய கொடுத்துள்ளது. 4 வந்தே பாரத் ரயில்கள் தமிழகத்தில் இயக்கப்படுகின்றன. 2014 – 2023 வரை தமிழகத்தில் இருந்து மத்திய அரசு பெற்ற வரி ரூ.6.23 லட்சம் கோடி. அதேநேரம் தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கிய நிதி ரூ.6.96 லட்சம் கோடி. தமிழகத்தில் இருந்து பெற்ற வரியைவிட கூடுதலாகவே நிதி கொடுத்துள்ளோம்” எனக் கூறியிருந்தார்.
புள்ளி விவரங்களுடன் தங்கம் தென்னரசு பதிலடி
அவர் கூறிய வரிப் பங்கீட்டு கணக்கை கூட்டிப்பார்த்தால், அது தவறான கணக்காக இருந்தது என நேற்றே விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், நிர்மலா சீதாராமன் கூற்றுக்கு மறுப்புத் தெரிவிக்கும் விதமாக, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஒன்றிய நிதியமைச்சர் நேற்று தமிழகத்துக்கு வழங்கக்கூடிய வரிவருவாய் குறித்து சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அதுகுறித்து பேச வேண்டியது எனது கடமை. ஒன்றிய அரசு, 2014 – 15 ஆம் ஆண்டு முதல் 2022 – 23 ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ ரூ.4.75 லட்சம் கோடி ரூபாய் தமிழகத்துக்கு வழங்கியுள்ளது. இந்த ரூ.4.75 லட்சம் கோடியில், ரூ.2.46 லட்சம் கோடி என்பது மத்திய வரிகளில் இருந்து வரி பகிர்வாகவும், அதேபோல ரூ.2.28 லட்சம் கோடி என்பது தமிழகத்துக்கு கிடைக்கக்கூடிய மானியங்கள் மற்றும் உதவித்தொகை அடிப்படையிலும் வழங்கப்பட்டவை.
ஒரு ரூபாய் வரிக்கு தமிழகத்துக்கு கிடைப்பது 29 பைசா
அதே நேரத்தில், நேரடி வரிவருவாயாக தமிழகத்தில் இருந்து ரூ.6.23 லட்சம் கோடி ஒன்றிய அரசு பெற்றுள்ளது. ஆனால், மறைமுக வரிவருவாய் குறித்து எந்த தரவுகளையும் அவர்கள் பகிர்ந்து கொள்ளவில்லை. தமிழகத்தில் இருந்து ஒன்றிய அரசுக்கு செல்லும் ஒரு ரூபாய்க்கு மீண்டும் அங்கிருந்து தமிழகத்துக்கு கிடைப்பது 29 பைசாதான். இதை ஏற்கனவே சட்டசபையில் கூறியுள்ளேன். ஆனால், பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் இருந்து ரூ.2.23 லட்சம் கோடி ஒன்றிய அரசுக்கு கொடுத்தால், அந்த மாநிலத்துக்கு மத்திய அரசு மூலமாக ரூ.15.35 லட்சம் கோடி திரும்ப கிடைத்துள்ளது.
மெட்ரோ திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு இல்லை
சென்னை மெட்ரோ 2 ஆவது கட்ட திட்டம் ரூ.63,246 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 50 சதவீத நிதியை ஒன்றிய அரசு தரவேண்டும். இந்த திட்டத்துக்கான அடிக்கல்லை உள்துறை அமைச்சர் அமித்ஷா நாட்டினார். ஆனால், இன்று வரை அதற்கான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்யவில்லை. அதே காலகட்டத்தில் மற்ற மாநிலங்களில் செயல்படுத்தப்படும் மெட்ரோ திட்டங்களுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
ஒன்றிய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களில், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் ஒன்றிய அரசு ரூ.72,000 கொடுக்கிறது. ஆனால், தமிழக அரசு ரூ.1.68 லட்சம் கொடுக்கிறது. அதேபோல், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு திட்டத்துக்கு ஒன்றிய அரசு ரூ.1,50 லட்சம் கொடுக்கிறது. ஆனால், தமிழக அரசு ரூ.7 லட்சம் தருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்களாக இருந்தாலும் சரி, அவர்களின் நிதியுதவியுடன் நடக்கும் திட்டங்களாக இருந்தாலும் சரி மாநில அரசு அதிகமான பங்களிப்பை வழங்குகிறது” என விளக்கமாக கூறினார்.