அமெரிக்காவைச் சேர்ந்த கொரில்லா கிளாஸ் தயாரிப்பு நிறுவனமான கார்னிங், மொபைல் போன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு கவர் கண்ணாடியாக பயன்படுத்தப்படும் கொரில்லா கிளாஸ் ( Gorilla Glass)கண்ணாடி உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டில் ரூ. 1,000 கோடி முதலீட்டில் அமைக்க உள்ளது. இதன் மூலம் தமிழகத்திற்கு கிடைக்கும் பொருளாதார மற்றும் வேலை வாய்ப்பு பலன்களைத் தாண்டி, மேலும் பல எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களும் தமிழகத்தை நோக்கி வருவதற்கான பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே 25 ஏக்கரில்…
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கார்னிங்கைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கார்னிங் நிறுவனம், சிறப்பு கண்ணாடிகள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. குறிப்பாக மொபைல் போன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான கவர் கண்ணாடி தயாரிப்பில் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனம் என்பதால், அது முன்னணி எலெக்ட்ரானிக்ஸ் பொருள் தயாரிப்பு நிறுவனமான ‘ஆப்பிள்’ நிறுவனத்துக்கான முக்கிய சப்ளையராக திகழ்கிறது.
இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கத்தில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட இருக்கும் கார்னிங்கின் கொரில்லா கிளாஸ் உற்பத்தி தொழிற்சாலை மூலம், சுமார் 300 பேர் நேரடி வேலை வாய்ப்பு பெறுவார்கள் என்பது கூடுதலான மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியாகும். மேலும், தேவை ஏற்பட்டால் இந்த உற்பத்தி ஆலையை விரிவாக்கம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை தேர்வு செய்தது ஏன்?
இதன் மூலம் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்துக்கான மற்றொரு சப்ளையர் அடியெடுத்து வைக்கும் நிலையும், இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில், எலெக்ட்ரானிக்ஸ் பாகங்கள் உற்பத்தி நிறுவனங்கள் மென்மேலும் விரிவடைவதற்கான வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக கார்னிங் நிறுவனம் தெலுங்கானாவில்தான் இந்த தொழிற்சாலையைத் தொடங்குவதாக இருந்தது. கடந்த செப்டம்பர் மாதம் இது குறித்த அறிவிப்பையும் தெலுங்கானா அரசு வெளியிட்டிருந்தது. ஆனால், தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் மற்றும் பெகாட்ரான் போன்ற பிற ஆப்பிள் சப்ளையர் நிறுவனங்களும் அருகில் இருப்பதால், அந்த நிறுவனம் தெலுங்கானாவை கைவிட்டுவிட்டு தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்துள்ளது.
2024 ல் உற்பத்தி தொடக்கம்
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) வருகிற ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர் சந்திப்பின்போது (GIM) கையெழுத்திடப்படும் எனத் தெரிகிறது. மேலும், இன்னும் ஓராண்டு காலத்துக்குள் இந்த தொழிற்சாலை கட்டிமுடிக்கப்பட்டு, 2024 க்குள் உற்பத்தியைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டமாக 3 கோடி எண்ணிக்கையிலான உற்பத்தி திறன் கொண்டதாக உருவாக்கப்படும் இந்த தொழிற்சாலையில், ஸ்மார்ட்போன்களுக்கான முன் மற்றும் பின் பேனல்களுக்குரிய கண்ணாடிகள் உற்பத்தி செய்யப்படும்.
இந்த கூட்டு முயற்சிக்கு மத்திய அரசின் உதவியும் ஆதரவும் கோரப்பட்டுள்ளது. குறிப்பாக சொல்வதானால், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் செமிகண்டக்டர்ஸ் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் (SPECS) கீழ் ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. SPECS திட்டத்தின் கீழ், மூலதன செலவினத்தில் 25 சதவீத நிதி ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.
இது தொடர்பாக தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கூறுகையில், சர்வதேச தரத்தில் தமிழகத்தை சிறந்த எலக்ட்ரானிக்ஸ் பொருள் உற்பத்திக்கான சுற்றுச்சூழல் அமைப்பு கொண்ட மாநிலமாக வடிவமைப்பதும், சாதுரியமான அணுகுமுறை மூலம், அசல் உபகரண உற்பத்தியாளர்களுக்கான (OEMs) தேவையை வழங்கும் திறன் கொண்ட சிறப்பு உற்பத்தியாளர்களைத் தமிழ்நாட்டிற்கு ஈர்த்து வருவதுமே தமிழக அரசின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.
கார்னிங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் கைகோர்ப்பு, கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்தே தொடங்கி விட்டது. அந்த ஆண்டில் தான், ஆப்பிள் தனது முதல் ஸ்மார்ட்போனுக்கான கண்ணாடி தேவைக்காக கார்னிங்கை அணுகி, iPhoneகள், iPadகள் மற்றும் ஆப்பிளின் பிற தயாரிப்புகளுக்கான நீண்ட காலம் நீடிக்கக்கூடிய கவர் கண்ணாடி கவர்களை உற்பத்தி செய்து தருமாறு கோரியதாக அந்த நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
“உலகளவிலான மற்றும் உள்ளூர் தேவையைப் பூர்த்தி செய்கிற வகையில் ஆண்டுக்கு 50 கோடிக்கும் அதிகமான மொபைல் போன்களை உற்பத்தி செய்யும் திறனுடன் தற்போது இந்தியா உள்ள நிலையில், கார்னிங் நிறுவனம் தமிழ்நாட்டிற்குள் அடியெடுத்து வைத்திருப்பதன் மூலம் பயனடையப் போவது தமிழகம் மட்டுமல்ல; இந்தியாவும் தான்!