தமிழகத்தை, வருகிற 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்றுவதற்கான இலக்கை, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நிர்ணயித்துள்ளார். அதன் அடிப்படையில், தொழில்துறையில் பல்வேறு பிரிவுகளில் முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கடந்த ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரு தினங்களில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு (GIM2024) நடைபெற்றது.
இந்த மாநாட்டின் மூலம் ரூ.5.50 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், அந்த இலக்கையும் தாண்டி, மொத்தம் ரூ. 6.64 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டது. இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 26 லட்சத்து 90,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மாநாட்டிற்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து தமிழகத்துக்கு மேலும் முதலீட்டுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக ஸ்பெயின் சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு சென்னையிலிருந்து புறப்பட்டு, நேற்று மாலை ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட் சென்றடைந்தார். அங்கு அவரை ஸ்பெயின் நாட்டிற்கான இந்தியத் தூதர் தினேஷ் கே. பட்நாயக் தூதரக அதிகாரிகளோடு மலர்கொத்து வழங்கி வரவேற்றார். முதலமைச்சருடன் அவரது மனைவி துர்கா, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோரும் உடன் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், இன்று ஸ்பெயின் தொழில் அமைப்புகள் மற்றும் ஸ்பெயின் நாட்டில் செயல்படும் பெரும் தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இம்மாநாட்டில், தமிழகத்தில் நிலவும் முதலீட்டுக்குச் சாதகமான சூழல் பற்றியும், தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகள், மனிதவள ஆற்றல் போன்றவற்றின்
சிறப்பம்சங்களை விளக்கி, அங்குள்ள தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுக்க உள்ளார்.
இதனிடையே ஸ்பெயின் வந்தடைந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில், “ஸ்பெயின் வந்தடைந்தேன். ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஐரோப்பியப் பயணம். ஸ்பெயின் நாட்டிற்கான இந்தியத் தூதர் தினேஷ் கே. பட்நாயக் அவர்கள் தூதரக அதிகாரிகளுடன் சிறப்பான வரவேற்பை அளித்தார். இன்று மாலை ஸ்பெய்ன் நாட்டின் தொழில் அமைப்புகள் மற்றும் அந்நாட்டில் செயல்படும் பெரும் தொழில் நிறுவனங்களைச் சந்திக்கிறேன். தமிழ்நாட்டில் நிலவும் வாய்ப்புகள் மற்றும் இளைஞர் வளத்தை எடுத்துக்கூறி முதலீடுகளை ஈர்க்கவுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் இந்த சந்திப்பின்போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.