Amazing Tamilnadu – Tamil News Updates

தமிழகத்தின் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு… கைகொடுக்கும் காலணி பூங்காக்கள்!

மிழகத்தை வருகிற 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதார மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கடி கூறி வரும் நிலையில், அந்த இலக்கை எட்ட இராணிப்பேட்டை மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அமைய உள்ள காலணி பூங்காக்களும் கைகொடுக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் முதலமைச்சராக கடந்த 2021 ஆம் ஆண்டு பொறுப்பேற்றதிலிருந்தே “தமிழகத்தை வருகிற 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதார மாநிலமாக மாற்ற வேண்டும்” என்று கூறி வருகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். இதனை கருத்தில் கொண்டு அவரது தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிற பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தமிழகம் கடந்த 2 ஆண்டுகளாக தொழில் துறையில் அதிக அளவிலான முதலீடுகளை ஈர்த்து வருகிறது. 2021 மே மாதம் முதல் இதுவரை சுமார் 4 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இதன்மூலம் ரூ.2.70 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் பெறப்படும்.

இந்த நிலையில், மேற்கூறிய 1 ட்ரில்லியன் டாலர் இலக்கை எட்ட, மேலும் பல முன்னெடுப்புகளை செய்து வரும் தமிழக அரசு, பல்வேறு மாவட்டங்களில் தொழில் பூங்காக்களையும் அமைத்து வருவதோடு, மாவட்டம் வாரியாக ஏற்றுமதி மையங்களையும் உருவாக்கி வருகிறது. அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டம், எறையூரில் உள்ள சிப்காட் தொழில் பூங்காவில் அமைந்துள்ள ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணிப் பூங்காவில் நிறுவப்பட்டுள்ள JR One காலணி உற்பத்தி தொழிற்சாலையை, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காணொலிக் காட்சி வாயிலாக வைத்தார்.

அதிகரிக்கப்போகும் வேலைவாய்ப்புகள்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம்தான், பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் அமைக்கப்பட்டிருக்கின்ற சிப்காட் தொழில் பூங்காவைத் திறந்து வைத்து, ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவுக்கும் அவர் அடிக்கல் நாட்டி இருந்தார். சரியாக ஓராண்டு காலத்தில், தற்போது இப்பூங்கா துவக்கப்பட்டுள்ளதை பெருமையுடன் தனது பேச்சில் குறிப்பிட்டார் ஸ்டாலின்.

இந்தத் திட்டத்தின் மூலமாக, பெரம்பலூர் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சார்ந்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும். இன்றைக்கு, முதற்கட்டமாக, 400 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 4000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், கோத்தாரி குழுமத்தைச் சார்ந்த JR One கோத்தாரி காலணி உற்பத்தித் தொழிற்சாலை துவக்கி வைக்கப்படுகிறது. 2028-ஆம் ஆண்டுக்குள், கோத்தாரி ஃபீனிக்ஸ் நிறுவனம், மேலும் 2,440 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 29 ஆயிரத்து 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்று விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டிருக்கிறது.

அடுத்ததாக இராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில், 400 கோடி ரூபாய் செலவில் 250 ஏக்கர் பரப்பளவில் காலணி உற்பத்திப் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இதில் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சிப்காட் / சிட்கோ மற்றும் பொது – தனியார் கூட்டாண்மை மூலம், 30-50 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்காக்கள் வடிவில் ஆயத்த தொழில்கூடங்களுடன் புதிய தோல் அல்லாத காலணி உற்பத்திக்கான பசுமைத் தொகுப்புகளையும் அரசு உருவாக்க இருக்கிறது.

பொருளாதார வளர்ச்சி

இதன் மூலம் மேற்கூறிய 2 மாவட்டங்களிலும் வேலை வாய்ப்பு, திறன் மேம்பாடு அதிகரிப்பதோடு மக்களின், குறிப்பாக பெண்கள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கைத் தரத்தில் மாற்றம் ஏற்படும். மேலும் பொருளாதார ரீதியிலான அனுகூலங்களையும் இந்த மாவட்டங்கள் பெறும். இந்த வேலை வாய்ப்புகள் இம்மக்களுக்கு நிதி ஸ்திரத்தன்மையை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பெண்களுக்கு அதிகாரமளிக்கும். மேலும் இப்பகுதி மக்களின் வறுமையைக் குறைத்து, பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிக்கும்.

இதுமாதிரியான வளர்ச்சி நடவடிக்கைகள், 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதார மாநிலம் என்ற இலக்கை அடையச் செய்துவிடும் என்ற உறுதியான நம்பிக்கையை முதலமைச்சருக்கு ஏற்படுத்தி உள்ளது. தமிழகமும் அதை தானே விரும்புகிறது..?!

Exit mobile version