Amazing Tamilnadu – Tamil News Updates

பொறியியல், எம்பிஏ படிப்புக்கான கல்விக் கட்டணம் உயருகிறது?

மிழ்நாட்டில், பொறியியல் மற்றும் எம்பிஏ படிப்புக்கான கல்விக் கட்டணம், வரவிருக்கும் 2024-25 ஆம் கல்வியாண்டில் உயரும் எனத் தெரிகிறது.

கடந்த ஏழு ஆண்டுகளாக கல்விக் கட்டணம் மாற்றியமைக்கப்படாமல் இருப்பதாகவும், ஒவ்வொரு ஆண்டும் கல்லூரிகளை நடத்துவதற்கான செலவு அதிகரிப்பதாகவும் கூறி, தமிழ்நாட்டில் உள்ள பல தனியார் பொறியியல் கல்லூரிகள், வரும் கல்வியாண்டு முதல் நிர்வாக ஒதுக்கீட்டு ( மேனேஜ்மென்ட் கோட்டா) இடங்களுக்கான கட்டணத்தை 20 சதவீதம் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கட்டண நிர்ணயக் குழு பரிந்துரை

ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பொங்கியப்பன் தலைமையிலான சுயநிதித் தொழில்முறைக் கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணயக் குழு, 2024-25 ஆம் கல்வியாண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கான கட்டணத் திருத்தம் செய்வதற்கான பரிந்துரைகளை பொறியியல் கல்லூரிகளிடம் இருந்து கோரியுள்ளது.

பிஇ, பிடெக், எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக் மற்றும் முதுகலை (PG) கட்டிடக்கலை படிப்புகளை வழங்கும் கல்லூரிகளின் கட்டணத்தை திருத்துவதற்காக, அந்தந்த கல்லூரிகளின் நிதிநிலை அறிக்கைகள், சமீபத்திய வருமான வரி மதிப்பீட்டு ஆணை, டிடிஎஸ் விவரங்கள் ஆகியவற்றை சமர்ப்பிக்குமாறு அக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

தற்போது, பொறியியல் கல்லூரிகள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ. 85,000 மற்றும் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ. 50,000 கட்டணமாக வாங்குகின்றன. ஒரு சில முன்னணி கல்லூரிகள், கட்டண நிர்ணயக் குழுவிடம் வரவு செலவு கணக்குகளை ( பேலன்ஸ் ஷீட் ) சமர்ப்பித்த பிறகு, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ. 1.25 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்க அனுமதிக்கப்பட்டன. அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) விதிமுறைகளின்படி வசதிகளை அமைக்க வேண்டும் என்பதால், இந்த கட்டண உயர்வு அவசியம் என தனியார் பொறியியல் கல்லூரிகள் கூறுகின்றன.

கட்டண உயர்வு எவ்வளவு?

இது தொடர்பாக பேசும் தமிழக சுயநிதி தொழில்சார், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு செயலாளர் செல்வராஜ், “அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் 2017-18 ஆம் கல்வியாண்டில் நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில், ஒவ்வொரு கல்லூரிகளும் நிர்வாக ஒதுக்கீடு கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கை விடுத்துள்ளன. எனவே அடுத்த கல்வியாண்டுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணத்தை மறுசீரமைப்பு செய்யுமாறு கோர திட்டமிட்டுள்ளோம்.

எனவே, கட்டண நிர்ணயக் குழு, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணத்தை 25 சதவீதமாவது உயர்த்த வேண்டும். இது கல்லூரிகளுக்கு தரமான ஆசிரியர்களை பணியமர்த்த உதவும் ” என்கிறார். மேல்முறையீட்டைத் தொடர்ந்து, தங்களின் நிர்வாக ஒதுக்கீட்டு கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என ஒவ்வொரு பொறியியல் கல்லூரிகளும் தனித்தனியாக விண்ணப்பித்துள்ளன.

உயர்வு ஏன்?

“கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு, கணினிகள் மற்றும் மென்பொருளை வாங்குவதற்கான செலவு உட்பட, கல்லூரியை நடத்துவதற்கான செலவு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், கட்டணங்கள் திருத்தப்படவில்லை. எனவே, தரமான கல்வியை வழங்க நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கட்டணத்தை தோராயமாக 20 சதவீதம் வரை உயர்த்த கோருகிறோம்.

கல்லூரிகளுக்கான முக்கிய செலவே ஆசிரியர்களுக்கான சம்பளம்தான். தேவை அதிகம் இருப்பதன் காரணமாக, கணினி அறிவியல் ஆசிரியர்கள் அதிக சம்பளம் கோருகின்றனர். எனவே, கட்டண உயர்வு அவசியம் என்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் ”என்கிறார் முன்னணி தனியார் கல்விக் குழும நிறுவனங்களின் தலைவர் ஒருவர்.

பொறியியல் கல்லூரிகளின் மேற்கூறிய கோரிக்கைகள், சுயநிதித் தொழில்முறைக் கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணயக் குழுவின் பரிந்துரை போன்றவற்றைக் கருத்தில்கொள்ளும்போது, வருகிற கல்வியாண்டில் கட்டண உயர்வு கட்டாயம் அமலாகும் என்றே தெரிகிறது.

Exit mobile version