இந்தியாவில் உள்ள மாநிலங்களில், தனி நபர் செலவினங்கள் குறித்த குடும்பங்களின் நுகர்வு செலவின கணக்கெடுப்பு ( Human consumption expenditure survey -HCLS 2022-23) குறித்த அறிக்கையை, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி 2022-23 ஆம் ஆண்டில், நாட்டின் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள குடும்பங்கள், உணவுப் பொருட்களில் ‘பானங்கள், குளிர்பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு’ ஆகியவற்றிற்காக நுகர்வுச் செலவில் அதிகப் பங்கைச் செலவிட்டுள்ளன. ஆனால், சில மாநிலங்கள் ‘பால் மற்றும் பால் பொருட்கள்’ மற்றும் முட்டை, மீன், இறைச்சி போன்ற மற்ற பொருட்களுக்காக அதிகம் செலவிட்டுள்ளது தெரியவந்துள்ளது.
எந்த மாநிலங்கள் எதற்காக அதிக செலவு?
அனைத்து முக்கிய மாநிலங்களிலும் உள்ள கிராமப்புறங்களில், ஹரியானாவின் குடும்பங்கள், ‘பால் மற்றும் பால் பொருட்களுக்கு’ அதிகபட்சமாக 41.7 சதவீதத்தை உணவிற்கான மொத்த செலவினத்தில் செலவிட்டுள்ளன. கேரளா ‘முட்டை, மீன் மற்றும் இறைச்சி’க்கு 23.5 செலவிட்டுள்ளது.
அதே சமயம் நகர்ப்புறங்களில் இந்த போக்கில் மிகவும் வித்தியாசம் எதுவும் காணப்படவில்லை. ராஜஸ்தானில் உள்ள குடும்பங்கள் ‘பால் மற்றும் பால் பொருட்கள்’ மீதான அதிக செலவின பங்கை 33.2 சதவீதமாக பதிவு செய்துள்ளன. ஹரியானா 33.1 சதவீதம் மற்றும் அதனைத் தொடர்ந்து பஞ்சாப் 32.3 சதவீதம் கொண்டுள்ளன. ‘முட்டை, மீன் மற்றும் இறைச்சி’க்காக, உணவுக்கான மொத்த நுகர்வு செலவில் 19.8 சதவீத பங்கைக் கொண்டு, அனைத்து முக்கிய மாநிலங்களிலும் அதிக நுகர்வுச் செலவினங்களைக் கொண்ட மாநிலமாக கேரளா உள்ளது.
இதர மாநிலங்களான ராஜஸ்தான் (35.5 சதவீதம்), பஞ்சாப் (34.7 சதவீதம்), குஜராத் (25.5 சதவீதம்), உத்தரப்பிரதேசம் போன்ற கிராமப்புறங்களில் மொத்த உணவுச் செலவில், ‘பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவை’ விட ‘பால் மற்றும் பால் பொருட்கள்’ செலவினம் அதிகமாக உள்ளன. அதாவது உத்தரப்பிரதேசம் 22.6 சதவீதம் மற்றும் மத்தியப் பிரதேசம் 21.5 சதவீதம் என்ற கணக்கில் உள்ளன.
இதன் அடிப்படையில் பார்க்கும்போது, இந்தியாவின் கிராமப்புறங்களில் தனி நபர் செலவினம் சராசரியாக ரூ.3,773 ஆக உள்ள நிலையில், நகர்ப்புறங்களில் தனி நபர் செலவினம் ரூ.2,645 ஆக உள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
தனிநபர் வருமான செலவுகளில் தமிழ்நாடு முன்னிலை
மற்ற அனைத்து முக்கிய மாநிலங்களுக்கும் மொத்த உணவு நுகர்வில் ‘பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவை’ அதிக பங்கைக் கொண்டுள்ளன, மாநிலங்களுக்கிடையே அதிக செலவில், கிராமப்புறங்களில் 28.4 சதவீதம் மற்றும் நகர்ப்புறங்களில் 33.7 சதவீதம் எனத் தமிழகம் முன்னணியில் உள்ளது
தனி நபர் அதிக செலவு செய்யும் பட்டியலில் ஒரு சில மாநிலங்களே உள்ளன. அதில் தமிழ்நாடும் ஒன்று. கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தனி நபர் செலவினம் நகர்ப்புறங்களில் அதிகம் உள்ளதாகவும், அதுவே கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கிராமப்புறங்களில் தனி நபர் செலவினம் அதிகமாக உள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்கள் என இரண்டிலுமே தனி நபர்கள் அதிகம் செலவு செய்வதாக தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நகர்ப் புறத்தில் சராசரியாக ஒருவர் ரூ. 7,630 செலவழிக்கிறார். அதுவே கிராமப்புறத்தில் ஒரு நபரின் செலவினம் ரூ.5,310 ஆக உள்ளது. இந்திய அளவில் நகர்ப்புற கிராமப்புற செலவின வித்தியாசம் 71 சதவீதமாக உள்ள நிலையில் தமிழகத்தில் அந்த வித்தியாசம் 44 சதவீதமாக மட்டுமே உள்ளது. அதாவது, தனிநபர் வருமான செலவுகளில் ஊரக மற்றும் நகர்ப்புறங்களுக்கு இடையிலான சமத்துவ குறியீட்டில், நாட்டிலேயே தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது.
காரணம் என்ன?
இதற்கு முக்கிய காரணம் தமிழகத்தில் நகர்ப்புறத்துக்கு ஈடாக கிராமப்புறத்தில் உள்ள இளைஞர்களுக்கு உரிய கல்வி கிடைப்பதால் அதன்மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளது. எனவே தமிழகத்தில் நகர்ப்புறத்துக்கு ஈடாக கிராமப்புறங்களிலும் தனி நபர் செலவினம் உள்ளதாகவே பார்க்கமுடிகிறது. மேலும் கலாசார மாற்றங்களும் தனி நபர் செலவினத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
உதாரணமாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் உடுத்தும் ஆடைகள், உண்ணும் உணவு வகைகள், பயன்படுத்தும் பொருட்கள் ஆகியவை இதற்கு முந்தைய காலத்தில் குறைவாகவே இருந்த நிலையில், தற்போது அவர்களும் விதவிதமான ஆடைகள், உணவுகள், பொருட்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தப் பழக்கப்பட்டுவிட்டனர். குறிப்பாக இளைஞர்களின் வாழ்க்கை முறை பெரிதும் மாறுதலுக்கு உள்ளாகியுள்ளதே இந்த முன்னேற்றத்துக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.