தமிழகம் முழுவதும் கடந்த இரு தினங்களாக மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கும் நிலையிலும் தண்ணீர் தேங்காத சாலைகள், தடையில்லா மின்சாரம் என இயல்பு வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு மேற்கொள்ளப்பட்ட அரசு நடவடிக்கைகள், பொதுமக்களிடையே பருவமழை குறித்த அச்சத்தைப் போக்கி உள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த இரு தினங்களாக மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்தது.
வழக்கமாக சென்னையின் மழை காலங்களில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நீர்தேங்கி, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும். மேலும், சுரங்கபாதைகளில் தண்ணீர் தேங்குவதால் அந்த இடங்களில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்படும்.
கடந்த 2021 மே மாதம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற நிலையில், அந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் பெய்த பெரு மழையின்போது பல இடங்களில் நீர் தேங்கியது. முதலமைச்சரே நேரில் சென்று மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை முடுக்கி விட்டார். அத்துடன் வருங்காலத்தில் தண்ணீர் தேங்காத வகையில் சாலைகள், கழிவு நீர் கால்வாய்களில் உரிய சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
தண்ணீர் தேங்காத சாலைகள்
இதனையடுத்து நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. இதன் உடனடி தாக்கங்கள் கடந்த மழை காலத்திலேயே உணரப்பட்டது. இந்த நிலையில் , தற்போது சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் சென்னையின் சுரங்கபாதைகளில் தேங்கும் தண்ணீர் உடனுக்குடன் வெளியேற்றப்பட்டு வருவதால் போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
அதோடு சென்னை மாநகராட்சி சார்பில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மாற்றப்பட்டு. இங்கு பணிபுரிய சுழற்சி முறையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேங்கவில்லை.
மழை புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் 4 அலுவலர்கள், துணை ஆட்சியர் நிலையில் 3 அலுவலர்கள், 3 செயற்பொறியாளர்கள் மற்றும் 54 இதர நிலையிலான அலுவலர்கள், பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தடையில்லா மின்சாரம்
அதேபோன்று வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் மற்றும் சென்னை மின் பகிர்மான கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றில், தமிழ்நாடு முழுவதும் வழங்கப்பட்டு வரும் சீரான மின் விநியோகம் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு முழுவதும் தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.
கனமழை பெய்து வரும் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் மின் கட்டமைப்பில் ஏற்படும் சேதாரங்களைப் பொறுத்து, சம்பந்தப்பட்ட மேற்பார்வை பொறியாளர்கள், தேவைப்படும் பணியாளர்கள் மற்றும் தளவாடப் பொருட்களுடன் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளத் தயார் நிலையில் இருக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழையின் காரணமாக இதுவரை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சேதமடைந்த 169 மின் கம்பங்கள் மற்றும் 72 மின்மாற்றிகள் உள்ளிட்ட அனைத்து சேதங்களும் துரித முறையில் சரி செய்யப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் தடையில்லா, சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் அரசின் இதுபோன்ற நடவடிக்கைகள்தான் பொதுமக்களிடையே பருவமழை குறித்த அச்சத்தைப் போக்கி உள்ளது எனலாம்!