தஞ்சாவூரில் கண்டெடுக்கப்பட்ட சோழர் கால நந்தி சிற்பங்கள்!

ஞ்சாவூரிலிருந்து பூதலூர் செல்லும் சாலையில் 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிற்றூர் சித்திரக்குடி. இந்த ஊரைச் சேர்ந்த முனைவர் சத்தியா என்பவரது நிலத்தில் நந்தி ஒன்று பாதி புதைந்த நிலையில் கிடந்துள்ளது.

இது குறித்து அவர் அளித்த தகவலைத் தொடர்ந்து, தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தின் தமிழ்ப் பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான முனைவர் மணி.மாறன், பொந்தியாகுளம் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர் தில்லை கோவிந்தராஜன், அரசு நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கோ.ஜெயலெட்சுமி ஆகியோர் இப்பகுதியில் கள ஆய்வு செய்தனர்.

பல்லவர்கள் கால ஆட்சிப் பகுதி

கள ஆய்வைத் தொடர்ந்து இது குறித்து அவர்கள் கூறுகையில், “சித்திரக்குடியின் வடபுறம் வெண்ணாறு பாய்கிறது. தென்புறம் புதிய கல்லணைக் கால்வாய் அமைந்திருப்பினும், இவ்வூருக்கு நீர்வளம் சேர்ப்பது கச்சமங்கலம் தடுப்பணையில் இருந்து பிரிந்து வரக் கூடிய ஆனந்தக் காவேரி வாய்க்கால் தான். கச்சமங்கலம், மாறனேரி, வெண்டயம்பட்டி போன்ற ஊர்களில் பல்லவர் கால கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் பல்லவர்களுக்குட்பட்ட முத்தரையர் ஆட்சி, செந்தலை எனும் ஊரினைத் தலைமையிடமாகக் கொண்டு நடைபெற்றது. அப்போது இப்பகுதி பல்லவர்கள் ஆட்சிப் பகுதியாகத் திகழ்ந்தது.

பின்னர் சோழர்கள் ஆட்சிக்காலத்தில் பாண்டி குலாசனி வளநாட்டு ஏரியூர் நாட்டிற்கு உட்பட்ட பகுதியாகத் திகழ்ந்தது. சித்திரக்குடியில், லிங்கத்தடிமேடு என்று அழைக்கப்படும் வயல்வெளியில் பாதி உடல் பூமிக்குள் மறைந்த நிலையில் ஒரு நந்தி இருப்பதைக் காண முடிந்தது. இந்த நந்தியானது கி.பி. 9–10 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாக உள்ளது.

சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பம்

இந்த நந்தியின் கழுத்தில் மணி மாலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியிலிருக்கும் காளைக்கு உள்ளது போலவே திமில் இருக்கிறது. மேலும், அங்கிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் செல்லக்கூடிய ஆனந்தக்காவேரி வாய்க்காலின் உட்புறம், தென்புறக் கரையை ஒட்டியவாறு தலை மற்றும் ஒரு கை உடைந்த நிலையில், இடுப்புக்குக் கீழாக வாய்க்கால் கரையில் பாதி புதைந்த நிலையில் சுமார் மூன்றடி உயரமுள்ள விஷ்ணு சிற்பம் கண்டறியப்பட்டது.

இவை இரண்டும் சோழர்கள் காலத்திய சிற்பங்களாகும். இங்கே ஒரு பெரும் சிவன் கோயில் இருந்து முற்றிலுமாக அழிந்து போயிருக்கக் கூடும். பிற்காலத்தில் இந்த இடத்திற்குச் சற்று அருகில் கோயில் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது. இக்கோயிலின் உள்ளே நுழைந்ததும் முன்பகுதியில் கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பல்லவர் கால நந்தி ஒன்று உள்ளது. இந்த நந்தியின் அடி பீடத்தில் பல்லவர் கல்வெட்டு இரண்டு வரி உள்ளது. அதில், ‘ஸ்ரீஏரனக்கன் மங்கல வைருதன் செய்வித்தது’ என்ற எழுத்துப் பொறிப்பு காணப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் பல்லவர் கால எழுத்துப் பொறிப்புடன் முதன் முதலாகக் கண்டறியப் பெற்றுள்ளது இதன் சிறப்பாகும்.

பல்லவர் கால கல்வெட்டுச் செய்தி

இவற்றுள் புதிதாக நந்தியுடன் காணப்படும் பல்லவர் கல்வெட்டுச் செய்தியும், சோழர் காலத்திய பாதி புதையுண்டுள்ள நந்தியும், விஷ்ணுவும் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இக்கோயில் வளாகத்தில் அச்சுதப்ப நாயக்கர் கால கல்வெட்டு ஒன்றும், பிற்காலத்திய கல்வெட்டு ஒன்றும் உள்ளது. மேற்கண்ட இரண்டு கல்வெட்டுச் செய்திகளும் மத்திய கல்வெட்டு ஆண்டறிக்கையில் வெளிவந்துள்ளன. இவ்வூர் சோழர்களுக்கு முன் ஆட்சி செய்த பல்லவர்கள் காலத்திலும் முக்கியப் பகுதியாக இருந்திருப்பதை அறிய முடிகிறது” எனத் தெரிவித்தனர்.

சோழர் காலத்திய நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டறியப்பட்டது தஞ்சாவூர் வட்டார மக்களிடையே பேசுபொருளாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Easy diy power plan review : is this the future of home energy ? –. wedding catering menu. Global tributes pour in for pope francis.