தமிழகத்தின் அமைதியான நீல வான பரப்பில் ஒரு வேலைவாய்ப்பு அலை வீசிக் கொண்டிருக்கிறது என்றால் மிகையில்லை. ஆமாம்… அந்த அலை, ‘ட்ரோன்’களின் இறக்கை சுழற்சியிலிருந்து எழும் வேலைவாய்ப்பு அலை..!
தமிழகம் முழுவதும் பல்வேறு தொழில்துறைகளும் தங்களது எண்ணற்ற பயன்பாடுகளுக்காக UAVs (Unmanned aerial vehicles) எனப்படும் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதனால், திறமையான ட்ரோன் விமானிகளுக்கான தேவை, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தேவைகள் அதிகரித்து வருகின்றன.
இந்த ஆளில்லா விமானங்கள் பெரும்பாலும் பொழுதுபோக்கு நோக்கிலேயே பயன்பட்டு வந்த நிலையில், அந்த நோக்கத்தைத் தாண்டி தமிழகத்தின் பல்வேறு தொழில் துறைகளுக்கும் இவை இன்று இன்றியமையாத கருவிகளாக மாறியுள்ளன. விவசாயம், ரியல் எஸ்டேட், சுகாதாரம் மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் காவல்துறை பணிகள் வரை ட்ரோன்களின் பயன்பாடு நீக்கமற நிறைந்துள்ளன.
ட்ரோன் பைலட்டுகளுக்கு ‘டிமாண்ட்‘ ஏன்?
அந்த வகையில் ட்ரோன் புரட்சியைக் கண்ட முதன்மைத் துறைகளில் ஒன்று விவசாயம். விவசாயத்தில் இப்போது பயிர் கண்காணிப்பு, பூச்சி மருந்து தெளித்தல் மற்றும் துல்லியமான விவசாயம் ஆகியவற்றிற்காக ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. வானத்தில் பறந்தபடியே பரந்த விவசாய நிலங்களை ஆய்வு செய்யும் திறன், விவசாயிகள் இதுவரை கண்டிராத ஒன்று. அந்த அளவுக்கு சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் குறித்த துல்லியமான நுண்ணறிவு தகவல்களை வழங்குகிறது. இதனால் உற்பத்தித்திறன் அதிகரிப்பது மட்டுமின்றி, அத்துறை சார்ந்த வேலைவாய்ப்புக்கான புதிய கதவுகளும் திறக்கப்படுகின்றன. விவசாயம் மற்றும் தொழில்நுட்ப அறிவு கொண்ட ட்ரோன் விமானிகள், பாரம்பரியத்துடன் புதுமையைப் புகுத்தி, விவசாயத் துறையின் வளர்ச்சிக்கு பங்காற்றுகின்றனர்.
காவல் துறையை எடுத்துக் கொண்டால், தமிழக போலீசாருக்கு ட்ரோன்கள் விண்ணின் கண்களாக மாறியுள்ளன எனலாம். தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் நெரிசல் மிக்க வர்த்தக இடங்கள், பேரணிகள், பொதுக்கூட்டங்கள், ஆன்மிக நிகழ்ச்சிகள் போன்ற பொது நிகழ்வுகளை கண்காணித்தல், போக்குவரத்தை நிர்வகித்தல், திருடர்கள் போன்றவர்களிடமிருந்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் என எதுவாக இருந்தாலும், ட்ரோன்களின் பயன்பாடுகளும் தேவைகளும் அவசியமாகி விட்டன. அந்த வகையில், காவல் துறையில் ட்ரோன் விமானிகளுக்கான தேவை, வேலைவாய்ப்பு சார்ந்தது மட்டுமல்லாது, மக்களின் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் சேவை சார்ந்ததாகவும் உள்ளது.
இரண்டு ஆண்டுகளில் 70,000 பேர் தேவை
அதேபோன்று ரியல் எஸ்டேட் துறையும் ட்ரோன்கள் மூலம் விண்ணை எட்டிப்பார்க்கிறது. ட்ரோன்கள் மூலம் நடத்தப்படும் வான்வழி ஆய்வுகள், கட்டுமான தளங்கள் மற்றும் அதன் நிலப்பரப்புகளின் விரிவான பார்வையைத் தருகின்றன. இது கட்டுமான செயல்முறைகளை நெறிப்படுத்துவது மட்டுமல்லாமல், அபாயங்களையும் குறைக்கிறது. உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான தேவை அதிகரித்து வருவதால், தமிழ்நாட்டின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் எத்தகைய வானிலை சூழலிலும் ட்ரோனை செலுத்தக்கூடிய திறமையான பைலட்டுகளின் தேவையும் அதிகரிக்கிறது.
சுகாதாரத் துறையை எடுத்துக்கொண்டால், ஆளில்லா விமானங்கள் என்பது உயிர்காக்கும் திறன் கொண்டவை எனலாம். தொலைதூரப் பகுதிகளுக்கு மருத்துவப் பொருட்களை வழங்குவது முதல் விரைவான அவசரகால பதிலளிப்புகளை (responses) எளிதாக்குவது வரை, ட்ரோன்கள் புவியியல் தடைகளைத் தாண்டி பயணிக்கின்றன.
இவ்வாறு தமிழ்நாட்டில் பல்வேறு நோக்கங்களுக்காக ட்ரோன்களைப் பயன்படுத்துவது அதிகரித்து வருவதால், தமிழகத்தில் ட்ரோன் பைலட்டுகளுக்கான தேவை, அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 70,000 அளவுக்கு உள்ளதாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகம் (TUAVC) வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே ‘ட்ரோன் பைலட்’ என்பதை தொழிலாக கொள்ள வேண்டும் என்பவர்களுக்கு வாய்ப்புகளுக்கான கதவுகள் தாராளமாக திறக்கின்றன. சுருக்கமாக சொல்வதானால் ட்ரோன் பைலட்டுகளுக்கான தேவை வானத்தைப் போலவே பரந்து விரியத் தொடங்கி விட்டன எனலாம்!