சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு இன்னும் இரு தினங்களே உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தின் தொழில்துறை சாதனையாளர்களைக் கொண்டாடவும், தொழில் துறை பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையிலும் ‘டைட்டன்ஸ் ஆப் தமிழகம்’ எனும் பிரசாரத்தை தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது.
தமிழகத்தை, வருகிற 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்றுவதற்கான இலக்கை, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நிர்ணயித்துள்ளார். அதன் அடிப்படையில், தொழில்துறையில் பல்வேறு பிரிவுகளில் முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில், முந்தைய முதலீட்டாளர்கள் மாநாடுகளை விஞ்சும் வகையில் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் பெறப்பட உள்ளன.
‘டைட்டன்ஸ் ஆப் தமிழகம்’
இந்த நிலையில், தமிழகத்தின் தொழில்துறை சாதனையாளர்களைக் கொண்டாடவும், தொழில் துறை பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையிலும், இந்திய தொழில் கூட்டமைப்பான CII (The Confederation of Indian Industry) உடன் இணைந்து, ‘டைட்டன்ஸ் ஆப் தமிழகம்’ எனும் பிரசாரத்தை தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது.
இந்த பிரசாரத்தின் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்களும், இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்த முதலீட்டாளர்களும், தமிழக தொழில் துறை பாரம்பரியத்தையும், முதலீடு செய்வதற்கு தமிழகம் எந்த வகையில் உகந்ததாக திகழ்கிறது என்பதையும் தெரிந்து கொள்ள முடியும். அந்த நோக்கத்திலேயே இது மேற்கொள்ளப்படுகிறது.
சாதனையாளர்கள் குறித்த வீடியோ
அதன்படி, ‘டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் கவுரவத் தலைவர் வேணுசீனிவாசன், எம்ஆர்எஃப் நிறுவனத் தலைவர் கே.எம்.மம்மன், அப்பல்லோ மருத்துவமனை நிறுவனர் பிரதாப் ரெட்டி , ‘ராம்கோ’ குழுமத் தலைவர் பி.ஆர். வெங்கட்ராம ராஜா, ‘டாஃபே’ (TAFE) தலைவர் மல்லிகா சீனிவாசன் உள்ளிட்டோர் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள், வீடியோவாக X தளம் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வருகிறது.
இது குறித்த வீடியோக்களை தமிழக தொழில் துறை அமைச்சசர் டிஆர்பி ராஜாவே, தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். டிவிஎஸ் மோட்டார் வேணுசீனிவாசன் குறித்த அவரது பதிவில், “இந்த வீடியோவில், திரு. சீனிவாசன், தொடக்க காலத்தில் கோடை விடுமுறைகளின் போது வாகனங்கள் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டு, அதில் தேர்ச்சி பெற்ற தனது நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்கிறார். இந்த ஆரம்ப அனுபவங்கள், வாகனத் தொழில் மீதான அவரது ஆழ்ந்த புரிதலுக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று எம்ஆர்எஃப் நிறுவனத் தலைவர் கே.எம்.மம்மன் குறித்த வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த பதிவில் டிஆர்பி ராஜா, “கடந்த சில தசாப்தங்களில் இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற டயர் உற்பத்தியாளராக MRF நிறுவனம் அடைந்த அபரிமிதமான வெற்றியின் பின்னணியில் திரு. மம்மன் அவர்களின் தொலைநோக்கு பார்வை உள்ளது. அதுதான் அந்த இடத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதை உறுதி செய்தது.
ராணுவ விமானங்களான சுகாய், மிக் ரக மற்றும் C-17 ரக போர் விமானங்களின் டயர்களையும் எம்ஆர்எஃப்-தான் தயாரிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? தமிழக தொழில்துறையின் நம்பமுடியாத திறன்களை எம்ஆர்எஃப் வெளிப்படுத்துகிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, மேலும் பல நிறுவனங்களின் நிறுவனர்களும் கொண்டாடப்பட உள்ள நிலையில், “தமிழகம் எப்போதும், தொழில் மற்றும் கண்டுபிடிப்புகளின் மையமாக உள்ளது. உறுதியும், தொலைநோக்கு பார்வையும் நிறைந்த அவற்றின் பயணங்கள் தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்தி, மக்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது.
இந்த பிரசாரம், அவர்களின் உழைப்புக்கு அளிக்கும் மரியாதை ஆகும். மேலும், தொழில் துறையின் வருங்கால தொழில்முனைவோர்களுக்கு அழைப்பு விடுத்து, இணைந்து வளரவும் இது வழிவகுக்கும்” என ராஜா மேலும் தெரிவித்துள்ளார்.