Amazing Tamilnadu – Tamil News Updates

டிஜிட்டல் மயமாகும் அரசுப் பள்ளிகள்… தயாராகும் ஆசிரியர்கள்!

ல்வி கற்பதும் கற்றுக்கொடுப்பதும் டிஜிட்டல் மயமாகிவிட்ட இன்றைய சூழ்நிலையில், ஆசிரியர்களையும் அதற்கேற்ப தயார்படுத்துவது என்பது அவசியமாகி விட்டது. அதிலும், 2020 ஆம் ஆண்டு மார்ச் தொடங்கி 2021 ஆம் ஆண்டு வரை மாணவர்களை வீட்டிலேயே முடங்க வைத்த கொரோனா காலகட்டத்தில் தான் டிஜிட்டல் வகுப்புகளின் அவசியத்தை உலகமே உணர்ந்து கொண்டது எனலாம்.

அந்த வகையில், காலமாற்றத்துக்கேற்ப கல்வியை நவீனமயமாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு அரசு தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த 75,000 -க்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு ‘கைக்கணினி’ எனும் உயர் தொழில்நுட்பத்திலான டேப்லெட்டுகளை வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

இந்த டேப்லெட் கணினிகளைக் கொள்முதல் செய்யும் பணியை,
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திடம் மாநில திட்ட இயக்குனரகம் ஒப்படைத்துள்ளது. இந்த கழகத்தின் மூலம் ஆசிரியர்களுக்கு டேப்லெட் கணினி விநியோகிக்கப்படும்.

ஆசிரியர்களுக்கு எப்படி உதவும்?

மொத்தம் 79,723 டேப்லெட் கணினிகளைக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும் பள்ளிக் கல்வித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆன்லைன் வருகைப் பதிவு, பாடங்கள் எந்த அளவுக்கு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது போன்ற விவரங்களைப் பதிவிடுவது, கற்றலுக்கான கூடுதல் பாடக்குறிப்புகள் விவரங்களைத் தெரிந்துகொள்வது போன்றவற்றுக்காக ஆசிரியர்களுக்கு இந்த டேப்லெட் கணினிகள் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை இணைக்கும் பொதுவான ஆன்லைன் தளமான கல்வி மேலாண்மை தகவல் அமைப்பையும் (EMIS) அவர்கள் இயக்குவார்கள். மேலும், ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் தேவையான வீடியோ டுடோரியல்களும் ஏற்றப்படும். டேப்லெட்களின் configuration ( கட்டமைப்பு), வேகமான மொபைல் இணைய அனுபவத்தை வழங்கும் வகையில் 2G, 3G, 4G LTE சப்போர்ட்டுடன் இருக்கும்.

அனைத்து மாவட்டங்களிலும் சேவை மையங்கள்

ஒவ்வொரு டேப்லெட்டும் 4,000 ரூபாய்க்கு சப்ளை செய்யப்பட்டால் அரசுக்கு இந்த வகையில் சுமார் 31 கோடி ரூபாய் செலவாகும். டேப்லெட்களைப் பெற்ற ஆசிரியர்களுக்கு, அதனை எவ்வாறு திறம்பட பயன்படுத்துவது என்பது குறித்து குறுகிய கால பயிற்சி அளிக்கப்படும். டேப்லெட்டுகளுக்கு ஒரு வருட உத்தரவாதம் இருப்பதால், அனைத்து மாவட்டங்களிலும் சேவை மையங்களும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

“அதேபோல், டேப்லெட்களில் 3ஜிபி ரேண்டம் அக்சஸ் மெமரி (RAM), 512 ஜிபி மெமரி வரை விரிவாக்கக்கூடிய 32 ஜிபி இன்பில்ட் மெமரியைக் கொண்டதாக இருக்கும். மேலும், ஒவ்வொரு டேப்லெட்டின் எடையும் 400 கிராமுக்கு குறைவாகவும், உயர்தர வாய்ஸ் மற்றும் வீடியோ ( Voice and Video) அழைப்பு அம்சங்களையும் கொண்டிருக்கும்.

இந்த டேப்லெட்களை வழங்கும் நிறுவனங்கள், சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் டெஸ்ட் அண்ட் டெவலப்மென்ட் சென்டர் (ETDC) ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட சோதனை அறிக்கையை சமர்ப்பிக்கும். டிசம்பர் இறுதிக்குள் டெண்டர் பணிகள் முடிவடையலாம் என்பதால், அடுத்த ஜனவரி அல்லது பிப்ரவரியில் ஆசிரியர்களுக்கு இந்த டேப்லெட்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version