மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் ( பி.டெக்) படிப்புகளில் சேர, ஜேஇஇ எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. தேசியத் தேர்வு முகமை (National Testing Agency) நடத்தும் இந்த தேர்வானது, Main (முதல்நிலை தேர்வு) மற்றும் Advance (முதன்மை தேர்வு) என இரண்டு கட்டங்களாக நடைபெறும்.
இதில் நாடு முழுவதுமுள்ள என்ஐடி கல்வி நிறுவனங்களில் சேர முதல்நிலை தேர்வு எழுதினாலே போதும். இதில் எடுக்கப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் ஒவ்வொரு பாடப்பிரிவுகளிலும் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். ஐஐடி-யில் சேர முதல்நிலை தேர்வுக்குப் பின்னர், முதன்மை தேர்வு எழுத வேண்டும்.
சாதனை படைத்த பழங்குடியின மாணவி
இந்த நிலையில், இந்த வருடத்திற்கான ஜேஇஇ முதல் நிலை நுழைவுத் தேர்வில் திருச்சி, இலுப்பூர் பகுதியைச் சேர்ந்த ரோஹிணி என்ற மாணவி 73.8% மதிப்பெண்கள் பெற்று, தமிழ்நாட்டில் தேர்வு எழுதிய பழங்குடியின மாணவிகளில் முதலாவதாக தேர்ச்சி பெற்றுள்ளார். ரோகிணியின் பெற்றோர் கட்டிடத் தொழிலாளர்கள் ஆவர்.
இலுப்பூர் பகுதியில் உள்ள அரசு பழங்குடியினர் நல மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு வரை படித்த ரோகிணி, அந்த தேர்வில் 423 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். கூடவே பொறியியல் படிப்பு படிப்பதற்காக JEE நுழைவுத் தேர்வு எழுதி, அதில் 73.8 சதவீதம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மேலும் கரியகோவில் பகுதியைச் சேர்ந்த சுகன்யா என்ற பழங்குடியின மாணவியும் இந்த நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
இதன் மூலம் திருச்சி என்ஐடி-யின் 60 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறையாக 2 பழங்குடியின மாணவிகள் பொறியியல் பட்டப்படிப்பு படிக்க தேர்வாகி இருக்கின்றனர். இதில் ரோகிணி வேதியியல் பொறியியல் ( Chemical Engineering ) பட்டப்படிப்பிலும், சுகன்யா உற்பத்தி பொறியியல் (Production Engineering) பட்டப்படிப்பிலும் சேர்ந்துள்ளனர். இங்கு படித்து முடிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதியில் இந்தியாவின் பல முன்னணி நிறுவனங்களின் Campus Placement மூலம் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும்.
பெற்றோர், ஆசிரியர்கள் மகிழ்ச்சி
அந்த வகையில், பழங்குடியின மாணவிகளான இந்த இரு மாணவிகளுக்கும், படித்து முடித்த பின்னர் நல்ல எதிர்காலம் அமையும் என்பதால், அவர்களது பெற்றோர்கள் மட்டுமல்லாது, உறவினர்களும், அவர்கள் ஊர்களைச் சேர்ந்தவர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அவர்கள் படித்த அரசுப் பள்ளியின் ஆசிரியர்களும் இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள நிலையில், தங்கள் பள்ளியில் தற்போது படித்துக்கொண்டிருக்கும் மாணவ, மாணவியர்களுக்கும் இது உந்துதலாக அமையும் என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளன.
இதுகுறித்து மாணவி ரோகிணி கூறுகையில், “தமிழக அரசு எனது அனைத்து கட்டணங்களையும் செலுத்த முன்வந்துள்ளது. எனக்கு உதவிய முதலமைச்சருக்கு நன்றி. எனது பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பிற ஆசிரியர்களால் நான் சிறப்பாக செயல்பட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.