Amazing Tamilnadu – Tamil News Updates

ஜவுளி, ஆயத்த ஆடைகள், தோல் பொருள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்று மூன்றாண்டுகள் முடிவடைந்து, நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், ஏற்றுமதியில் பல்வேறு துறைகளில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக தெரியவந்துள்ளது.

மத்திய அரசின் ‘நிர்யாத்’ (NIRYAT – National Import-Export Record for Yearly Analysis of Trade) எனும் வர்த்தகத்தின் வருடாந்திர பகுப்பாய்விற்கான தேசிய இறக்குமதி-ஏற்றுமதி பதிவுக்கான இணையதளம், இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகம் தொடர்பான அனைத்து தகவல்களையும் வெளியிட்டு வருகிறது.

ஜவுளி ஏற்றுமதி

இதில், ஜவுளி ஏற்றுமதி குறித்து ‘நிர்யாத்’ வெளியிட்டுள்ள 2022-2023-ஆம் ஆண்டுக்கான ஆய்வு அறிக்கையில், தேசிய அளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட மொத்த ஜவுளித் துணிகளின் மதிப்பில், தமிழ்நாட்டின் பங்கு 22.58 சதவிகிதம் என்றும், அந்த வகையில் ஜவுளித் துணிகள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அதாவது, இந்தியாவின் மொத்த ஏற்றுமதி மதிப்பு 35.38 பில்லியன் அமெரிக்க டாலர். இதில் முதலிடம் பெற்றுள்ள தமிழ்நாட்டின் ஏற்றுமதி மதிப்பு 7.990 பில்லியன் அமெரிக்க டாலர். அடுத்து, 4.378 பில்லியன் அமெரிக்க டாலருடன் இரண்டாம் இடத்தில் குஜராத் மாநிலமும், மகாராஷ்டிரா 3.784 பில்லியன் அமெரிக்க டாலருடன் மூன்றாவது இடத்திலும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி

அதேபோன்று இந்தியாவிலிருந்து ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்யும் முதல் 10 மாநிலங்களில் தமிழ்நாடு மிக அதிகமாக ஏற்றுமதி செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஆயத்த ஆடைகளின் மொத்த மதிப்பு 16.19 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இதில் 5.30 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்து, தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக திகழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக 4.52 பில்லியன் அமெரிக்க டாலருடன் கர்நாடகா இரண்டாம் இடத்திலும், 2.27 பில்லியன் அமெரிக்க டாலருடன் உத்தரப்பிரதேசம் மூன்றாம் இடத்திலும் உள்ளன. அதே சமயம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்கள் இதில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதாகவும் ‘நிர்யாத்’ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தோல் பொருள்கள் ஏற்றுமதியிலும் முதலிடம்

மேலும், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு 2022-2023-ஆம் ஆண்டில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள தோல் பொருள்களின் மொத்த மதிப்பு 4.27 பில்லியன் அமெரிக்க டாலரில் 43.20 சதவிகித தோல் பொருள்களை, அதாவது 2.048 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள தோல் பொருள்களை ஏற்றுமதி செய்து தமிழ்நாடு இந்தியாவில் முதல் மாநிலம் எனும் பாராட்டைப் பெற்றுள்ளது.

மின்னணுப் பொருள்கள்

இவை மட்டுமல்லாது, மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதியில் கடந்த மூன்றாண்டுகளாகத் தொடர்ந்து இந்தியாவில், தமிழ்நாடு முதலிடம் பெற்று தொழில்நுட்பத் துறையில் ஒரு புதிய சாதனை படைத்துள்ளது.

எலெக்ட்ரானிக் பொருள்கள் ஏற்றுமதி 2020-2021-ல் 1.66 பில்லியன் அமெரிக்க டாலர் என்பது 2023-2024-ஆம்ஆண்டில் 9.56 பில்லியன் அமெரிக்க டாலர் என உயர்ந்துள்ளது. அதாவது, 1.39 இலட்சம் கோடி ரூபாய் என இருந்த தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக் பொருள்களின் ஏற்றுமதி மதிப்பு, மூன்றாண்டுகளில் ஏறத்தாழ 8 இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான சீரிய நிர்வாகத் திறனை உலகுக்கு உரைத்துக் கொண்டிருப்பதாக திமுக தலைமை பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.

முதலீடு/வேலைவாய்ப்பு

மேலும், மு.க. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு சென்னை, கோவை, தூத்துக்குடி நகரங்களிலும், மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக 9.61 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன் வழியாக, 30 இலட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான ஒப்பந்தங்கள் நடந்துள்ளன.

45 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.இதுவரை 27 தொழிற்சாலைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் வாயிலாக 74,757 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version