சொத்து ஆவணப்பதிவு: போலி பதிவைத் தடுக்க புதிய முறை அறிமுகம்!
தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் மேற்கொள்ளப்படும் சொத்துப் பதிவு தொடர்பான பணிகளை விரைவுப்படுத்தவும், வெளிப்படைத்தன்மை மற்றும் முறைகேடுகள் நடக்காமல் தடுக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், தமிழ்நாட்டில் ஒரு சொத்திற்கு பட்டா பெறுவது என்பது குதிரை கொம்பாக இருந்து வந்த நிலையில், அதில் அண்மையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, தற்போது பொதுமக்கள் எளிதாக பட்டா பெறும் வகையில் 3 நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஒரே நிமிடத்தில் பட்டா
அதில் முதல் நடைமுறை எங்கிருந்தும், எந்த நேரத்திலும் இணையவழி சேவை ஆகும். ஒரு நிலத்திற்கான பட்டா, வரைபடம் ஆகியவற்றை பொதுமக்கள் https://eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற இணையதளம் மூலம் எளிதாக பெற்று கொள்ளவது ஆகும். 2 ஆவது நடைமுறை, பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக பொதுமக்கள் அளிக்கும் விண்ணப்பங்கள் மீது வரிசைப்படி தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது. 3 ஆவது நடைமுறை, ஒரு நிமிடத்தில் பட்டா வழங்கும் திட்டம். அதாவது ஒரு சொத்தை பத்திரப்பதிவுத்துறை மூலம் பத்திரப்பதிவு செய்தவுடன் ஒரே நிமிடத்தில் அவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
போலியை தடுக்க விரல் ரேகை ஒப்பீடு
இந்த நிலையில், தற்போது ஆவணப் பதிவின் போது போலிகளைத் தடுக்க விரல் ரேகை ஒப்பீடு செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, சொத்துக்களைப் பதிவு செய்ய தாக்கல் செய்யப்படும் ஆவணங்கள் குறித்த செய்திகள் ஆவணதாரருக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகின்றன. மேலும் சொத்தை எழுதிக் கொடுப்பவர், எழுதி வாங்குபவரின் விரல் ரேகை, ஆதார் மற்றும் கருவிழிப்படலங்கள் ஒப்பிட்டு சரி பார்க்கப்படுகின்றன. இதன் மூலம் தவறான ஆவணப் பதிவுகள் மேற்கொள்வது தடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஒரு நபர் சொத்தை விற்கும் போது தனது சொத்து விற்பனையை ஒத்துக் கொள்ளும் வகையில், சார் பதிவு அலுவலகத்தில் விரல் ரேகையைப் பதிவு செய்வார். அப்போது, இதே சொத்து தொடர்பாக முந்தைய ஆவணப் பதிவின் போது சொத்தின் உரிமையாளர் செய்திருந்த விரல் ரேகைப் பதிவுடன் இப்போதுள்ள விரல் ரேகை ஒப்பிட்டுப் பார்க்கப்படும்.
2 விரல் ரேகைகளும் ஒத்திருக்கும் பட்சத்தில் மட்டுமே பதிவுக்கு ஏற்கும் வகையில், கணினி மென்பொருள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பொருந்தாத நிகழ்வுகளில் சார் பதிவாளர், ஆவணப் பதிவின் உண்மை நிலையை விசாரித்து, அதன் அடிப்படையில் பதிவு மேற்கொள்வார் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.