நீங்கள் குறும்படம் எடுப்பதில் ஆர்வமுள்ளவரா..? அதிலும் இன்றைய டிஜிட்டல் உலகில் அதிகரிக்கும் சைபர் குற்றங்கள் குறித்த விவரங்கள் உங்களுக்குத் தெரியும் என்றாலோ அல்லது உங்கள் நண்பர்கள், உறவு வட்டங்களில் இத்தகைய சைபர் மோசடியில் சிக்கி ஏமாந்த அனுபவங்கள் உங்களுக்குத் தெரியும் என்றாலோ அல்லது உங்களுக்கே அத்தகைய அனுபவம் ஏற்பட்டிருந்தாலும் சரி… உடனடியாக களத்தில் குதிக்கலாம்.
வீட்டிலிருந்தே வேலை, பகுதி நேர வேலை, வாட்ஸ் அப் அல்லது ஃபேஸ்புக் மூலம் உங்களுக்கு நன்கு தெரிந்த நண்பர் அல்லது உறவினரின் பெயரில் போலி கணக்கைத் தொடங்கி, அவசர உதவி எனக் கேட்டு நடந்த பண மோசடிகள், 10,000 முதலீடு செய்தால் மூன்றே மாதத்தில் ஒரு லட்சம் என்ற ரீதியில் நடக்கும் முதலீட்டு மோசடி, குறைந்த விலையில் பொருள் தருவதாக நடக்கும் ஆன்லைன் மோசடி, பரிசு மோசடி, லோன் தருவதாக மோசடி… என இன்றைய காலகட்டத்தில் நடைபெறும் விதவிதமான மோசடிகளுக்கு பஞ்சமே இல்லை.
‘நான் ரொம்ப உஷார்…’ என மார்தட்டிக்கொள்பவர்கள் கூட இத்தகைய மோசடி ஆசாமிகளிடம் ஏமாந்து போகிறார்கள். சென்னையில் சமீபகாலங்களில் நடந்து வரும் இத்தகைய சைபர் குற்றங்களைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த காவல்துறை பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
என்றபோதிலும் இன்றைய யு டியூப் யுகத்தில் ‘குறும்படம்’ என்பது சக்திவாய்ந்த கருவியாக இருக்கும் என்பதாலேயே, இத்தகைய சைபர் குற்றங்களின் அபாயங்களை பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், இது குறித்த குறும்பட போட்டியை சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது. விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டும் அல்லாமல் ஒவ்வொரு தலைப்பிற்கும் சிறந்த இரண்டு குறும்படத்திற்கு பணப்பரிசு வழங்கப்பட உள்ளது.
இந்த போட்டியில் மாணவர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களும் கலந்து கொள்ளலாம். போட்டியில் பங்கேற்பவர்கள் பகுதி நேர வேலை தொடர்பான மோசடி, சமூக ஊடக மோசடி, முதலீட்டு மோசடி, ஆன்லைன், வர்த்தகம், கிரிப்டோகரன்சி, தங்க வர்த்தகம், திருமணம் பரிசு மோசடி, கடன் விண்ணப்ப மோசடி ஆகிய 5 தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் குறும்படம் உருவாக்க வேண்டும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
குறும்படத்தின் கால அளவு 3 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். cyberawarenessshortfilm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு படைப்பை அனுப்ப கடைசி தேதி பிப்ரவரி 5. வீடியோ குவாலிட்டி திரையரங்குகளில் மற்றும் பெரிய டிஜிட்டல் திரையில் போடும் அளவிற்கு தெளிவாக இருக்க வேண்டும்.
மேலதிக விவரங்களுக்கு ரஞ்சித், உதவி ஆய்வாளர் 8838487920, ஜெகன் நிவாஸ் உதவி ஆய்வாளர் 9087730080 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.
ஒவ்வொரு தலைப்பிற்கும் பரிசுத் தொகை, முதல் பரிசு ரூ.1 லட்சம், இரண்டாவது பரிசு ரூ.50,000.
போட்டியில் கலந்து கொள்ள இருப்பவர்களுக்கு வாழ்த்துகள்!