Amazing Tamilnadu – Tamil News Updates

சேலம் திமுக இளைஞரணி மாநாடு சொல்வது என்ன?

திமுக இளைஞரணி மாநாடு முதலாவதாகச் சொல்லி இருக்கும் விஷயம், இளைஞர்கள் மத்தியில் திமுக பலம்வாய்ந்த கட்சியாக இருக்கிறது என்பதுதான். கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் கூடிய அந்த மாநாட்டிற்கு வந்தவர்களில் 90 சதவீதம் பேர் இளைஞர்கள்தான்.

திமுகவைப் பொறுத்தவரையில், எந்த ஒரு அரசியல் கட்சியும் சந்தித்திராத தோல்விகளைச் சந்தித்திருக்கிறது. அந்தத் தோல்விகளிலும் தனது தொண்டர் பலத்தை அது இழந்ததே இல்லை. இப்போது ஆட்சியில் இருக்கிறது. தமிழ்நாட்டில் தொடர்ந்து அது அடுத்தடுத்த தேர்தல்களில் வெற்றியும் பெற்று வருகிறது. அப்படி இருக்கும் போது, புதியவர்கள் திமுகவை நோக்கி வருவதில் ஆச்சரியமில்லை.

திமுக எப்போதுமே காலத்திற்கு ஏற்றார் போல தன்னை அப்டேட் செய்து கொள்ளும் கட்சி. அதை இந்த மாநாட்டிலும் பார்க்க முடிந்தது. கண்ணைக்கவர்ந்த 1500 ட்ரோன்களைக் கொண்டு வானத்தில் நிகழ்த்திய ஷோவை அதற்கு ஒரு உதாரணமாகச் சொல்லலாம். அந்த ஷோவும் வெறுமனே கண்ணைக் கவர்வதாக இல்லாமல், கருத்தையும் கவரும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது. பெரியாரில் ஆரம்பித்து உதயநிதி வரையில் 100 ஆண்டுகால வரலாற்றை சுருக்கமாக அதே சமயத்தில் மனதில் தைக்கும் விதத்தில் சொல்லி இருந்தார்கள்.

தாங்கள் எதற்காக இருக்கிறோம், எதை எதிர்க்கிறோம், தங்களின் எதிரி யார் என்பதை கடைசியாக இருக்கும் ஒவ்வொரு தொண்டனுக்கும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்கும் கட்சி திமுக. அந்தக் கருத்துக்கள்தான் தனது வேர் என்று திமுக நம்புகிறது. இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம். உதயநிதியே அந்தத் தீர்மானங்களை வாசித்தார்.

கல்வி, சுகாதாரம் இரண்டையும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும். பல்கலைக்கழகங்களுக்கு முதலமைச்சரே வேந்தராக இருக்க வேண்டும். ஆளுநர் பதவியை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், திமுகவின் அடிப்படைக் கொள்கைகள் என்ன என்பதை மாநாட்டிற்கு வந்திருந்த இளைஞர்களுக்கு எடுத்துச் சொன்னது. புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு, நீட் எதிர்ப்பு போன்ற தீர்மானங்கள் தங்களின் இலக்கு என்ன என்பதை கட்சிக் காரர்களுக்கும் மற்றவர்களுக்கும் திமுக சொல்லி இருக்கிறது.

உதயநிதி பேசும் போது ஒரு விஷயத்தைச் சொன்னார். ‘இளைஞரணிக் குழந்தைகள் பெரியவர்களாகி விட்டார்கள். அவர்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் சீட் கொடுங்கள்’ என்று கட்சித் தலைவர் ஸ்டாலினை மேடையில் வைத்துக் கொண்டே கேட்டார். கூட்டம் ஆரவாரம் செய்தது. ஸ்டாலின் அமைதியாகப் புன்னகைத்தார். கடைசியாக அவர் பேசும் போது, யார் வேட்பாளர்கள் என்ற கேள்விக்கு, வெற்றி பெறுபவர்களே வேட்பாளர்கள் என்று மையமாக ஒரு பதிலைச் சொன்னார்.


அகில இந்திய அளவில் பாஜகவை வெறும் அதிகாரப் போட்டியில் மட்டுமல்ல, சித்தாந்த ரீதியிலேயே எதிர்க்கும் கட்சி இந்தியாவிலேயே திமுக மட்டும்தான். பாஜக திமுகவை இந்துக்களுக்கு விரோதி என்று சொல்லி வருகிறது. அதற்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில், பாஜகதான் இந்து விரோதி என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுதான் இந்த மாநாட்டில் ஹைலைட்.

சிறுபான்மை மதத்தினருக்கு மட்டுமின்றி, இந்து மதத்தில் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட – மிக பிற்படுத்தப்பட்ட – பட்டியல் இன – பழங்குடி மக்களுக்கும் துரோகம் இழைத்து, உண்மையான இந்து விரோதியாக செயல்பட்டு வரும் பா.ஜக. அரசை, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்று மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இந்த இளைஞரணி மாநாடு, ஒன்றிய அரசை மாநில உரிமைகளை மையப்படுத்தி இந்தத் தேர்தலில் திமுக எதிர்க்கப் போகிறது என்பதையும்,
திமுகவில் ஏராளமான இளைஞர்கள் இருக்கும் பலமான கட்சியாக காலத்திற்கு ஏற்றபடி தன்னை அப்டேட் செய்து கொண்டிருக்கிறது என்பதையும் எடுத்துக் காட்டியுள்ளது.

Exit mobile version