Amazing Tamilnadu – Tamil News Updates

சென்னை வெள்ள பாதிப்பு: களமிறக்கப்படும் ட்ரோன்கள்!

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெரு வெள்ளம் சென்னையைப் புரட்டிப்போட்ட நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகள் குறித்த தரவுகள் சேகரிப்பு உள்ளிட்ட மேலாண்மை நடவடிக்கைகளுக்காக ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா விமானங்கள் களம் இறக்கப்பட உள்ளன.

மிக்ஜாம் புயலால் கடந்த 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் பெய்த பெரு மழையால் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்ட முழு வீச்சிலான மீட்பு நடவடிக்கைகளால் தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளது. வெள்ள நீர் மிக அதிகம் தேங்கிய வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் படிப்படியாக வடிந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், அரசின் கவனம் தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் சுகாதார நலன் மீது திரும்பி உள்ளது. அதன் ஒரு கட்டமாக மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 1000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது.

களமிறக்கப்படும் ட்ரோன்கள்

அடுத்ததாக வெள்ளத்தினால் ஏற்பட்டுள்ள தற்போதைய சிக்கல்களைச் சமாளிப்பதற்கும், வெள்ள நீரால் குவிந்துள்ள குப்பைகள், கழிவுகளை அகற்றி சுத்தம் செய்வதற்கும், வெள்ள நீர் அதிகம் தேங்கிய இடங்களைக் கண்டறிந்து, எதிர்காலத்தில் அப்பகுதிகளில் செய்யப்பட வேண்டிய வெள்ள தடுப்பு நடவடிக்கைகளுக்கான தரவுகளைப் பெறுவதற்கும், எந்தெந்த இடங்களில் கழிவு நீர் கால்வாய் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளன, எங்கெங்கு அத்தகைய தேவைகள் உள்ளன என்பதற்கான தரவுகளைப் பெறுவதற்கும் ட்ரோன்களைப் பயன்படுத்த தொடங்கி உள்ளதாக தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.

இதன்படி, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வேளச்சேரி மற்றும் பள்ளிக்கரணை பகுதிகளில் நேரடி தரவுகளைப் பெற 15 பேர் கொண்ட குழு மற்றும் 5 ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனங்கள் கழக இயக்குனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பேராசிரியர் செந்தில் குமார் கூறுகையில், “ வெள்ளத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய நிலைகளைப் பகுப்பாய்வு செய்ய ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளை நாங்கள் படம் எடுப்போம். சில பகுதிகளுக்கான தரவுகளும் எங்களிடம் உள்ளன. வெள்ளத்துக்கு முந்தைய தயார்நிலை மற்றும் திட்டமிடல் குறித்தே அதிக கவனம் செலுத்தப்படும்.

செயற்கைக்கோள் தரவுகளுடன் ஒப்பிடும்போது, அதைக்காட்டிலும் ட்ரோன்கள் மூலமான ஆய்வுத் தரவுகள் துல்லியமாக இருக்கும். வீடியோகிராஃபியை விட ட்ரோன் சர்வே சிறந்தது. ட்ரோன்கள் படங்களைச் சேகரிக்கும். அதே சமயம் ட்ரோன்கள் மூலம் கிடைக்கும் தரவுகள் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றலைப் பயன்படுத்தி பகுப்பாய்வு செய்யப்படும். இதுபோன்ற பேரிடர்களின் போது உணவு மற்றும் பிற நிவாரண பொருட்களை வழங்கவும் ட்ரோன்களைப் பயன்படுத்தப்படும்” என்றார்.

வெள்ளத்தின்போது எவ்வாறு உதவும்?

ட்ரோன்கள் மூலம் கிடைக்கும் பல்வேறு தகவல்கள் மூலம் வெள்ள நிலைமைகளை பல்வேறு வகையில் கண்காணிக்க முடியும். வெள்ளம் எந்த மட்டத்தில் உள்ளது, அதன் தீவிரம் என்ன, தரையில் இருப்பவர்களிடமிருந்து கிடைக்கும் தகவல்கள், உதவிக்கான அழைப்புகள் போன்ற தகவல்கள் மூலம் மக்களைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல முடியும்.

வெள்ளத்திற்குப் பிறகு எவ்வாறு உதவ முடியும்?

வெள்ள நீர் வடிந்த பிறகு, சேதத்தின் அளவை மதிப்பிடுவது சவாலான ஒன்று. அதை அளவிடுவதற்கும், துப்புரவு மற்றும் சரிசெய்யப்பட வேண்டிய முன்னுரிமைப் பகுதிகளை அடையாளம் காண்பதன் மூலம் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கும் ட்ரோன்கள் பெரும் அளவில் கைகொடுக்கும். வழக்கமான விமான அல்லது ஹெலிகாப்டர் மூலமான ஆய்வுகளை விட ட்ரோன்கள் மூலமான ஆய்வுகள் மலிவான, எளிதான வழியாகும். நீர் வடிந்த பின்னர் ஏற்படும் சேதத்தையும் பார்க்க முடியும். ட்ரோன்கள் செயற்கைக்கோள்களை விட சிறந்த தெளிவுத்திறனுடன் சேதத்தை வரைபடமாக்கும் என்பதால், அவை செயற்கைக்கோள் படங்கள் மூலம் கிடைக்கும் சேதத்தின் பெரிய அளவிலான மதிப்பீடுகளைக் கணிக்க உதவும்.

மேலும் வெள்ளச் சேத மதிப்பீடுகள் செய்வோருக்கும் எங்கு, எவ்வளவு, என்னென்ன உதவிகள் தேவை என்பதை துல்லியமாக தீர்மானிக்கவும் ட்ரோன்கள் உதவுகின்றன. இதன் மூலம், நிவாரண நடவடிக்கைகளுக்கு எவ்வளவு நிதி தேவை என்பதை மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்ய முடியும். இதனால் குறைவான சேதம் உள்ள பகுதிகளுக்கு அதிகமாக நிதி ஒதுக்கீடு செல்லாமலும், அதிக சேதம் உள்ள பகுதிகளுக்கு சரியான நிதி ஒதுக்கீடு கிடைக்கவும் வழி பிறக்கும்.

Exit mobile version