தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களிலிருந்து வசூலிக்கும் ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகளிலிருந்து மாநிலங்களுக்கு கொடுக்கப்படும் வரிப் பகிர்வு, மாநிலங்களுக்கான பேரிடர் நிவாரண நிதி போன்றவற்றில், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பாரபட்சம் காட்டுவதாக நீண்ட நாட்களாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இதுவரை தரப்படாத வெள்ள நிவாரண நிதி
இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் சென்னையிலும், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் பெய்த வரலாறு காணாத மழையால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டது. வெள்ளபாதிப்புகளுக்கான நிவாரண நிதியாக ரூ.19,692.69 கோடி வழங்குமாறு கடந்த டிசம்பர் 14-ஆம் தேதியும், தென் மாவட்ட பெருமழை, வெள்ள நிவாரண நிதியாக ரூ.18,214.52 கோடி வழங்குமாறு டிசம்பர் 26 ஆம் தேதியும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார்.
ஆனால், மத்திய அரசு வெள்ள நிவாரண நிதியாக இதுவரை ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. இது குறித்து தற்போதைய நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போதும், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தினந்தோறும் தான் பேசும் பரப்புரைக் கூட்டங்களில் கேள்வி எழுப்பி வருகிறார். இந்த நிலையில், இதுதொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என்று வேலூரில் நேற்று முன்தினம் நடந்த பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்தார்.
மத்திய அரசுக்கு எதிராக வழக்கு
அதன்படி, வெள்ள நிவாரணம் கோரி மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், வழக்கறிஞர் டி.குமணன் தாக்கல் செய்த மனுவில், “ டெல்லியில் பிரதமரை முதலமைச்சர் ஸ்டாலின் டிசம்பர் 19- ஆம் தேதி சந்தித்து, தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்காக இடைக்கால நிவாரணமாக ரூ.2,000 கோடி வழங்குமாறு வலியுறுத்தினார். இரட்டை பேரழிவுகளுக்கான நிவாரணநிதியாக ரூ.37,907.21 கோடி வழங்க கோரி மத்திய நிதி அமைச்சகத்துக்கும் தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
ஆனால், தேசிய பேரிடர் மீட்பு நிவாரண நிதியில் இருந்து தமிழகத்துக்கு இதுவரை எந்த நிதியும் வழங்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இது அரசியலமைப்பு சட்டம் 14, 21-வதுபிரிவுகளுக்கு எதிரானது, சட்டவிரோதமானது. வெள்ள சேதத்தால் மக்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
எனவே, உச்ச நீதிமன்றம் தனது தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்த நிதியை தமிழக அரசுக்கு வழங்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். முதல்கட்டமாக ரூ.2,000 கோடியை இடைக்கால நிவாரணமாக உடனே வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.
கேரளா, கர்நாடகாவும் வழக்கு
ஏற்கெனவே கேரள மாநில அரசு, கடன் வாங்குவது தொடர்பாக மத்திய அரசு கொண்டிருக்கும் கட்டுப்பாடானது மாநில அரசின் நிதி சுதந்திரத்தில் தலையிடுவதாக உள்ளதாகவும், இது மாநிலங்களின் நிதி செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறி, தங்கள் மாநிலத்தின் நிதித் தேவையை சமாளிக்க கூடுதலாக கடன் வாங்க அனுமதி வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இவ்வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி பரிந்துரை செய்துள்ளது.
அதேபோன்று கர்நாடக மாநில அரசும், தங்கள் மாநிலத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் மாநிலத்தில் கடும் வறட்சி நிலவுவதாகவும், இதற்காக வறட்சி நிவாரண நிதி வழங்க வேண்டும் என விடுத்த கோரிக்கையையும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இதனையடுத்து அந்த மாநில அரசும், வறட்சி நிவாரணத்தை உடனடியாக வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
உச்ச நீதிமன்றம் உத்தரவிடுமா?
இந்த நிலையில், தமிழக அரசும் தற்போது வெள்ள நிவாரண நிதியை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தொடர்ந்துள்ள வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த விசாரணையின்போது தமிழக அரசு கோரிய இடைக்கால நிவாரணமாக ரூ.2,000 கோடியையாவது உடனடியாக வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிடுமா என எதிர்பார்க்கப்படுகிறது.