மெட்ரோ ரயிலில் பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக ‘பிங்க்’ படை!
சென்னையில் விமான நிலையம் – விம்கோநகர், பரங்கிமலை – சென்னை சென்ட்ரல் ஆகிய 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில், தினசரி 2.50 லட்சம் முதல் 3 லட்சம் பேர் வரை பயணிக்கின்றனர். சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட 8 ஆண்டுகளில், இதுவரை இல்லாத அளவுக்கு, கடந்த ஆண்டில் 9 கோடியே 11 லட்சத்து 2 ஆயிரத்து 957 பேர் பயணித்துள்ளனர். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, கடந்த ஆண்டு 3.01 கோடி பேர் அதிகம் பயணித்துள்ளனர்.
இந்த நிலையில், பயணிகளுக்கான தனது சேவையை மேலும் மேம்படுத்தும் நோக்கில், சென்னை மெட்ரோ ரயில் 2-வது கட்ட திட்டத்தில், ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கான கட்டுப்பாட்டு அமைப்பை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் உருவாக்க உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அண்மையில் அறிவித்திருந்தது.
இந்த இரண்டாம் கட்ட திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில், 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெறும் நிலையில், இவற்றில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை இயக்க, மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
‘பிங்க்’ படை தொடக்கம்
அடுத்ததாக , சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, முதல் கட்டமாக 23 பெண்களைக் கொண்ட ‘பிங்க்’ படை ( Pink Squad) தொடங்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயிலில், பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டியில் அடிக்கடி ஆண்கள் ஏறுவதாக சமீப காலமாக மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு அதிக புகார்கள் வந்தன. இதனை கண்காணித்து கட்டுப்படுத்த உரிய நபர்கள் இல்லாததும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது. மேலும், வேறு சில பிரச்னைகள் குறித்தும் கவனத்துக்கு வந்ததையடுத்தே இந்த ‘பிங்க்’ படை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படையில், தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெற்ற பெண் பாதுகாப்புப் பணியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். ஈவ் டீசிங் மற்றும் பெண்களுக்கு எதிரான பிற குற்றங்களைத் தடுக்கவும், பெண் பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு சேவையை வழங்குவதற்காகவும் இந்த படை நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ‘பிங்க்’ படையில் இடம்பெற்றுள்ளவர்கள், தற்காப்புக் கலைகள் மற்றும் தற்காப்பு நுட்பங்களில் நன்கு பயிற்சி பெற்றதைத் தவிர, வாடிக்கையாளர் சேவை மற்றும் தகவல் தொடர்பு திறன் ஆகியவற்றிலும் பயிற்சி பெற்றுள்ளனர். இவர்கள், மெட்ரோ பயணிகள் அதிகமாக பயணிக்கும் புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ, அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ மற்றும் விமான நிலையம் மெட்ரோ போன்ற மெட்ரோ ரயில் நிலையங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.